வாழ்க்கைச் செலவுச் சுமைக்குள் நசுங்கியிருந்த மக்களின் நிம்மதிப் பெருமூச்சு

மக்கள் நலனுக்காக அரசாங்கமே தவிர அரசாங்கத்தின் நலனுக்காக மக்கள் இல்லை என்ற அடிப்படை சித்தாந்தத்தை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பி க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் அனைத்து தரப்பு மக்களினதும் அபிலாஷை களைப் பூர்த்தி செய்யும் வகையிலான முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகுமென பொருளாதார ஆய்வாளர்கள் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவேதான் ஒட்டுமொத்தமாக அனைத்துத் தரப் பினருமே நேற்றைய பட்ஜட் தொடர்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியு ள்ளனர்.

உணவு மற்றும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கான விலைக் குறைப்பானது வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு மாத்திரமன்றி நடுத்தர மற்றும் மேல்தர மக்கள் மீதான வாழ்க்கைச் செலவுச் சுமையை கணிசமான அளவு குறைக்குமென்பது உண்மையிலேயே நிம்மதி தருகிறது. முன்னைய ஆட்சியாளர்களின் ஊழல், முறைகேடு, துஷ்பிரயோகம், வீண்விரயம் நிறைந்த தான்தோன்றித்தனமான நிர்வாகம் காரணமாக வாழ்க்கைச் செலவுச் சுமைக்குள் நசுங்கியிருந்த மக்கள் நேற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டதை அவதானிக்க முடிந்தது.
நாட்டு மக்களின் போஷாக்கு மட்டத்தைத் தாங்கள் அதிகரித்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெறும் வார்த்தை யளவில் மாத்திரமே கூறி வந்தது. முன்னைய ஆட்சியாளர்கள் உணவுப் பொருட்களின் விலையை மக்களுக்கு எட்டாத விதத்தில் அதிகரித்தனரே தவிர மக்களின் போஷாக்கு மட்டத்தை வீழ்ச்சி யடையவே வைத்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் தாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற சாதாரண உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாதபடியே அவற்றின் விலைகள் எகிறியிருந்தன.
மக்களின் உணவுக்கான ஏக்கத்தைப் போக்கும் வகையில் சீனி, பால், கோதுமைமா, நெத்தலி, பால்மா, பயறு, ரின்மீன், உழுந்து, மாசி, சீமெ ந்து, கொத்தமல்லி உட்பட மேலும் பல பொருட்களுக்கு நேற்றைய வரவு செலவுத் திட்டத்தில் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருப் பதை இங்கு விசேடமாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். இப்பொருட் கள் யாவும் மக்களின் போஷாக்குடனும் ஆரோக்கியத்துடனும் சம்பந் தப்பட்டவையாகும்.
நாட்டில் சுமார் ஒரு தசாப்த காலமாக நீடித்த எதேச்சதிகாரம் நிறைந்த ஆட்சியை ஜனநாயக வழிமுறை ஊடாக முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும் இன்றைய அரசாங்கமானது பாரிய சவால்களையும் சுமை களையும் எதிர்நோக்கியுள்ளதென்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இச்சுமைகளெல்லாம் கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப் பட்டவையாகும். கடந்த அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள ஐயாயிரம் மில்லியன் டொலர் நஷ்டத்தை இன்றைய அரசாங்கமே ஈடு செய்ய வேண்டியிருக்கிறது. அதேசமயம் நாட்டின் எதிர்கால தேசிய வருமானங்களைக் கருத்திற் கொள்ளாது வெளிநாடுகளிடமிருந்து பெரும் வட்டியின் பேரில் பெற்றுக்கொண்ட கடன்களையும் இன்றைய அரசாங்கமே மீளச் செலுத்த வேண்டும். எல்லை மீறிச் சென்றுள்ள விலைவாசியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதென்பதும் இலகுவான காரியமல்ல.
எனினும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு மக்களுக்கு விமோசன மளிக்கும் வரவு செலவுத்திட்டத்தை அரசாங்கம் நேற்று சமர்ப் பித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியர்களுக்கான ஆயிரம் ரூபா உயர்வு, சமுர்த்திக் கொடுப்பனவு இருநூறு வீதம் வரை அதிகரிப்பு, விவசாயக் கடன் ஐம்பது சதவீதம் தள்ளுபடி, மகாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு ஐயாயிரம் ரூபா வினால் அதிகரிப்பு, அங்கவீனர்களுக்கு ஐந்து இலட்ச ரூபா கடனு தவி, சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் ஐம்பது வீதத்தினால் குறைப்பு சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைக்குறைப்பு......
இதுபோன்று அனைத்து தரப்பினருக்கும் விமோசனமளிக்கும் முன் மொழிவுகள் நேற்றைய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு ள்ளன. உணவு, எரிபொருள், அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் அத்தியாவசிய சேவைகள் அனைத்திலும் நிவாரண முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேடமாகக் கவனிக்கத்தக்கதாகும்.
புதிய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டமானது வாழ்க்கைச் செலவைக் குறைக்கப்போவது ஒருபுறமிருக்க, கடந்த ஆட்சியாளர் களால் பொருட்களின் விலைகளை இவ்விதம் குறைக்க முடியாமல் போனதற்கான காரணம் என்னவென்ற வினா மக்கள் மத்தியில் எழுவது இயல்பானதாகும். அதேசமயம் இன்றைய அரசினால் இது போன்றதொரு பட்ஜட் எவ்வாறு சாத்தியமாகியுள்ளது என்பதும் பொது வான வினாவாகும்.
இவ்வினாக்களுக்கான பதில்கள் மக்களுக்குப் புரியாததும் அல்ல. கடந்த ஆட்சித் தலைமையின் சுகபோக ஆடம்பர வாழ்வுக்காகவும், ஊழல் துஷ்பிரயோகம் காரணமாகவும் மக்களிடமிருந்து பணம் சுரண்டப்பட்டு ள்ளது. ஆட்சியாளரின் ஆடம்பரங்களுக்காகவே பொருட்களின் விலை கள் அதிகரிக்கப்பட்டு மக்கள் மீது தாங்க முடியாத சுமை ஏற்பட்டது.
இன்றைய அரசினால் எவ்வாறு பொருட்களின் விலைகளைக் குறைக்க முடிந்தது என்ற வினாவுக்கான விடையைக் கண்டுபிடிப்பதும் சிரம மானதல்ல..... ஆடம்பரங்களும் வீண்விரயங்களும் நிறுத்தப்பட்டு அரசின் செலவினங்கள் சிக்கனமாக்கப்பட்டுள்ளதனால் மீதப்படுத்தப் பட்ட பணமே மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு இப்போது பயன்படுத்தப்படுகிறது.
இதனை நோக்குகையில் கடந்த ஆட்சியில் நாட்டின் வளம் எவ்வாறு சுரண்டப்பட்டுள்ளதென்பது எவருக்குமே எளிதாகப் புரிந்து விடும்.
முன்னைய ஆட்சியின் அமைச்சரவை எண்ணிக்கையானது 71 இலிருந்து 31 ஆகக் குறைக்கப்பட்டமை வீண்விரயத்தைக் குறைப்பதற்கான முன்னுதாரணமாகும். முன்னைய ஜனாதிபதிக்குரிய செலவு 10,497 கோடி ரூபாவாக இருந்தது. இன்றைய ஜனாதிபதிக்குரிய செலவு 209 கோடி ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளமை மற்றொரு முன்மாதிரியாகும்.
அரசாங்கமென்பது மக்களின் சேவகனாக செயற்பட வேண்டுமென்பதே மக்களின் அன்றைய ஏக்கமாக இருந்து வந்தது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு மக்களின் முதலாளியாகவே ஆட்சி நடத்தி வந்துள்ளது. இத்தகைய சர்வாதிகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிய மக்களுக்கு மற்றொரு ஆறுதலை நேற்றைய பட்ஜட் கொடுத்துள்ளது.