கடலில் மிதந்து வந்த போத்தலை உடைத்து குடித்த ஐந்து பிள்ளைகளின் தந்தை மரணம்

கணவரை சாப்பிட வருமாறு அழைத்தேன். அதற்கு அவர் சாப்பாடு வேண்டாம் என்றும் வயிறு எரிவதுடன் தலைசுற்றுவதாகவும் கூறி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு சொன்னார். உடனே களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.


இவ்வாறு மு. குணசுந்தரி  அவரின் சாட்சியத்தில் கூறினார். களுதாவளையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான க. கணேசலிங்கம் (வயது 51) என்பவரின் மரண விசாரணை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி த. காராளசிங்கத்தினால் நடத்தப்பட்ட மரண விசாரணையில் சாட்சி மேலும் கூறியதாவது

இறந்தவர் எனது கணவர். கூலி வேலை செய்வதுடன் கடற்கரைக்கும் சென்று வலை இழுப்பார். வழமை போன்று கடற்கரைக்கு சென்றவர்  கையில் ஒரு போத்தலும் மீனும் கொண்டு வந்தார். போத்தல் ஏது என்று கேட்டேன். கடலில் ஒரு போத்தல் மிதந்து வந்தது என்றும் அதனை எடுத்து பார்த்த போது சாராய வாடை வீசியதாகவும் பின்னர் தான் அதனை குடித்ததாகவும் கூறினார்.

பின்பு நான் உணவு சமைத்தேன். சாராயம் நல்ல போதையை தருவதாக கூறி மீண்டும் குடித்தார். அதனைக் குடித்த பின்னரே அவருக்கு வயிறு எரிவு ஏற்பட்டது. இவ்வாறு குணசுந்தரி அவரின் சாட்சியத்தில் கூறினார்.

இறந்தவரின் பிரேதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஏ.எஸ். ஆர். விக்கிரமாராய்ச்சியினால் பரிசோதனை செய்யப்பட்டது. இறந்ததற்கான காரணம் கண்டறியப்பட முடியாமல் இருப்பதாக அவரால் அறிக்கை செய்யப்பட்டது. உடல் உள்ளுறுப்புக்களை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்புமாறும் மரணத்துக்குரிய காரணம் அறிய முடியாமல் இருப்பதாகவும் தீர்ப்பு வழங்கிய மரண விசாரணை அதிகாரி காரளசிங்கம் சடலத்தை மனைவியிடம் ஒப்படைத்தார்.