புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த செங்கலடி இளைஞன் 20 நாட்களின் பின் உயிரிழப்பு

(பேரின்பராஜா சபேஷ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கும் செங்கலடிக்கும் இடைப்பட்ட புகையிரதப் பாதையில் புகையிரதத்தில் மோதுண்டு காயமடைந்திருந்த இளைஞன் வியாழன் இரவு மரணமடைந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 கடந்த 07.02.2015 திகதியன்று மாலை புகையிரத்தில் மோதுண்ட விபத்தில் செங்கலடியைச் சேர்ந்த சரவணபவன் சங்கீதன் (வயது 17) என்ற இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகிய நிலையில் மற்றைய அவரது சகபாடியான கந்தசாமி பிறேமகாந்தன் (வயது 15) படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சை பயனளிக்காத நிலையில் வியாழன் இரவு அந்த இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


செல்லிடத் தொலைபேசியில் காதுகேள் கருவியைப் பொருத்தி புகையிரதத் தண்டவாளத்தில் படுத்திருந்து பாடல் ரசித்துக் கொண்டிருந்தபோது புகையிரதம் வந்தது தெரியாமல் இளைஞர்கள் புகையிரதத்தில் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்ற புகையிரதம் ஏறாவூருக்கும் செங்கலடிக்கும் இடைப்பட்ட பகுதியைக் கடக்கும்போது இந்த இளைஞர்கள் புகையிரதத்தினால் மோதுண்டனர்;.
ஏறாவூர் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர