நூலக, தகவல் விஞ்ஞான டிப்ளோமா பாடநெறிக்கான நேர்முகத் தேர்வு 28ஆம் திகதி நடைபெறவுள்ளது!

இலங்கை நூலக சங்கத்தின் நூலக, தகவல் விஞ்ஞான டிப்ளோமா பாடநெறிக்கான நேர்முகத் தேர்வு மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது.


இலங்கை நூலகச் சங்கமானது இலங்கையின் நூலக, தகவல் துறையில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புவோருக்கும், பதவியுயர்வுகளை எதிர்பார்த்திருக்கும்; தற்போதைய நூலகத் துறை உத்தியோகத்தர்களுக்கும் அரிய வாய்ப்பினை வழங்கக்கூடியவகையில் மூன்று வருடங்களைக் கொண்ட நூலக, தகவல் விஞ்ஞான டிப்ளோமா பாடநெறியினை தமிழ் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிமூலம் கொழும்பிலும், தமிழ் மொழிமூலம் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும், சிங்கள மொழிமூலம் கண்டி, பதுளை, காலி ஆகிய இடங்களிலுமுள்ள கற்கை நிலையங்களில் நடாத்திவருகின்றது.

2015ஆம் ஆண்டின் முதலாம் வருடப் பாடநெறி அனுமதித் தெரிவுகளுக்காக மேற்குறித்த இடங்களில் எதிர்வரும் 28ஆம் திகதி, சனிக்கிழமையன்று,காலை 9.30 மணி முதல் 3.30 மணி வரை நேர்முகத்தேர்வு நடாத்தப்படவிருக்கின்றது.

ஏற்கனவே விண்ணப்பித்திருப்போரும், விண்ணப்பிக்கத் தவறியோரும் இந்நேர்முகத் தேர்வுகளில்; கலந்து கொள்ள முடியுமென இலங்கை நூலக சங்கத்தின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், நூலக, தகவல் விஞ்ஞான விரிவுரையாளருமான திரு. தீசன் ஜெயராஜ் தெரிவித்தார்.

தமிழ் மொழிமூலம் கற்க விரும்பும் விண்ணப்பதாரிகள் தாம் பாடநெறியைத் தொடர விரும்பும் கற்கை நிலையங்களின் அடிப்படையில் தமக்கான நேர்முகத் தேர்வுக்காக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை அல்லது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட பௌதீக விஞ்ஞான விரிவுரை மண்டபம் அல்லது கொழும்பு 07 ஸ்ரான்லி விஜயசுந்தர மாவத்தை OPA நிலையத்திலுள்ள இலங்கை நூலகச் சங்க அலுவலகம் ஆகிய இடங்களில் சமூகமளிக்கமுடியும்.

இப்பாடநெறிக்கான அனுமதியைப் பெறவிரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றிருப்பராக அல்லது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாது தமிழ்மொழியில் திறமைச்; சித்தியுடன் கணிதம் அல்லது எண்கணிதம் மற்றும் ஆங்கில மொழி உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

கல்வித் தகைமைச் சான்றிதழ்களின் மூலப் பிரதிகளுடன் அவற்றின் போட்டோப்பிரதிகளையும், தேசிய அடையாள அட்டையின் போட்டோப் பிரதியையும் எடுத்து  வரவேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியோர் விண்ணப்பப்பத்திரங்களை இத்தினத்தில் பெற்று நேர்முகத் தேர்வில் பங்குபற்ற முடியும்.  விண்ணப்பப் பத்திரக் கட்டணம் ரூபா 200/= ஆகும். முதல் வருடப் பாடநெறிக்கான கட்டணம் ரூபா 16,000/=ஆகும்.

மட்டக்களப்பில் இப்பாடநெறியானது மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் ஒன்றுவிட்டு ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்; நடாத்தப்பட்டு ஒவ்வொரு வருட இறுதியிலும் தேசிய பரீட்சைகள் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.