கிழக்கு மாகாண புதிய முதலமைச்சரை 48 மணி நேரத்துக்குள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவிக்கும் -ஹக்கீம்


கிழக்கு மாகாண சபை ஆட்சியில் ஏற்படவுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அடுத்த ஒரிரு நாட்களில்  புதிய முதலமைச்சரை தமது கட்சி அறிவிக்கும் என ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
புதிதாக அமையவுள்ள ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுக்கு திறந்த மனதுடன் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.



தற்போது கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற வைபங்களில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.



2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைக்க பெருன்பான்மை பலம் இல்லாத நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.
அவ்வேளை 5 வருட ஆட்சியில் முதலமைச்சர் பதவி முதல் இரண்டரை வருடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கும் அடுத்த இரண்டரை வருடங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸக்கும் என உடன்பாடு  காணப்பட்டதாக  சிறி லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.

இதனை தனது உரையில் சுட்டிக் காட்டியுள்ள  ரஊப் ஹக்கீம் அந்த உடன்பாட்டுக்கு அமைய தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சியில்  அமைச்சர்கள் வாரியத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியும் இடம் பெறும்.

ஐக்கிய தேசிய கட்சியும் இடம் பெற வேண்டும் என விரும்புகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பும் சேர வேண்டும் என ஆர்வத்துடன் இருக்கின்றோம். என்றும் அவர் குறிப்பிட்டார்.


37 உறுப்பினர்களை கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பெருன்பான்மை பலம் இழந்துள்ள நிலையில் 2015ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் கூட இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் சபை அமர்வு எதிர்வரும் 10ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது  என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.