மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இவ்வருடம் 4885ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானம்

(படுவான் பாலகன்) 2015ம் ஆண்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்டங்களில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்ப கூட்டம் இன்று(26) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கிரிதரன் அவர்களின் தலைமையில் கொக்கட்டிச்சோலை பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக புளுக்குணாவை, கடுக்காமுனை, சேவகப்பற்று மேல் கிழல், அடைச்சல் ஆகிய குளங்களின் நீரைக் கொண்டு இவ்வருடம் மொத்தமாக 4885ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்விருப்பதுடன், இதற்கு மேலதிகமாக சிறுநீர்பாசனம், ஏற்று நீர்பாசனம் ஆகியவற்றைக் கொண்டு 310ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருக்கும் ஏக்கரின் அளவு சென்றவருடத்தை விட இவ்வருடம்  10வீதம்   அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது விவசாய வேலைகள் ஆரம்ப திகதி 27.02.2015, விதைப்பு ஆரம்ப திகதி 20.03.2015, விதைப்பு முடிக்கப்பட வேண்டிய இறுதித் திகதி 05.04.2015, காப்புறுதி செய்யும் கடைசி திகதி 05.04.2015 எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இயற்கைமுறையிலான பசளை, மருந்துகளை பாவிப்பது, விதை நெற்களை பெற்றுக்கொள்வது, காப்புறுதிகளை மேற்கொள்வது, விவசாயிகளுக்கான கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளும் முறை தொடர்பாகவும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதாகரன், விவசாய விரிவாக்கல் பிரிவு, விவசாய காப்புறுதி பிரிவு, வங்கிகளின் உத்தியோகத்தர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கமநல அமைப்பினர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.