தமிழ் மக்களுக்காக கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் குரல் எழுப்புமா?

(தீரன்)
நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்களின் வெளிப்பாடாக  வடகிழக்கு பகுதிகளில் அநீதி இழைக்கப்பட்ட மக்கள், மற்றும் நிறுவனங்கள் பலவேறுபட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, உட்பட வடகிழக்கு மாகாணங்களிலும் இது போன்ற பல போராட்டங்கள் நடைபெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. இன்று வரை கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவுகள், பாலர்பாடசாலை ஆசிரியர்கள், சம்பூர் கிராமமக்கள், எனப் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாகவே அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைகழக ஆசிரியர் சங்கம், கிழக்குப் பல்கலைகழக சமூகம், கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல பகுதியினர் ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றில் ஆரோக்கியமான விமர்சனங்களை சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

உண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாக இரண்டு தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தாலும். மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் என்பன  கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் குறித்தும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளது பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

மறுபுறம் உபவேந்தர் அவர்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதுடன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தனிப்பட்ட சிலரின் தூண்டுதலில் நடத்தப்பட்டதாக கூறியிருந்தார். 

அத்தோடு அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியிருந்தனர். அதில்  கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் ஒருசில தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்திற்கும் அந்த ஆர்ப்பாட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கின்ற பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் கேவலப்படுத்தியுள்ளதுடன் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நற்பெயரை இல்லாமல் செய்துவிட்டனர் என தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிர்வாக ரீதியான குழப்பங்கள் குறித்தும் செய்திகளை வெளியிடுவதில் ஊடகவியளாளர்களும், ஊடக நிறுவனங்களும் பல்வேறு சங்கடங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஒரு தரப்பு செய்திகளை வெளியிடும் போது மறுதரப்பு குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளரை அல்லது குறித்த ஊடக நிறுவனத்தை தாக்கி பல கருத்துக்களை முன்வைத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது இதனால் ஊடகத்துறை பல சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏற்படுத்தியிருந்தனர். 

ஒரு கட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை கொழும்பில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களும் புறக்கணிக்கும் அளவுக்கு ஊடகத்துறைக்கு சங்கடங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

தங்கள் தரப்பு நியாயங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்ட இரண்டு தரப்புக்களும் ஊடகத்துறையின் நடுநிலைப் போக்கை உடைப்பதற்கு தங்களை அறியாமலே செயற்பட்டனர் என்பதே வேதனையான விடயமாகும்.

ஒரு சமூகம் சார்ந்த மக்களின் பிரச்சினையாக இருந்தால் அந்த விடயம் குறித்த செய்திகளை வெளிக்கொண்டுவருவதற்கு ஊடகத்துறை ஒன்றுபட்டு செயற்பட்டிருக்கும் ஆனால் உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை செய்திகளாக வெளியிடும்போதும், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிடும்போதும் அந்த செய்திகள் ஒருதரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்பது யதார்த்தமானதாகும் எனவே கிழக்கப் பல்கலைக்கழக செய்திகளை இனிமேல் வெளியிடும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவோரின் உள்ளார்ந்த நோக்கம் குறித்து ஆராய்வதுடன் அது குறித்து பல்கலைக்கழக பேரவை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்துக்களையும் உள்வாங்கி வெளியிடுவதே சிறப்பாக இருக்குமென கருதப்படுகின்றது.

தமிழ் மக்களுக்காக குரல்எழுப்ப தவறியுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சமூகம்?

இது இவ்வாறு இருக்க புத்திஜீவிகள் பலர் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் குறித்து தேசிய ரீதியாக பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 

அதாவது தமிழ் மக்களின் அவலங்கள் குறித்தும் தமிழ் மக்களது இழப்புக்கள் குறித்தும் குரல் கொடுப்பதற்கு கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் தவறியுள்ளதாகவும் நாட்டில் ஆட்சி மாற்றமொன்று நடைபெற்றுள்ள இக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் மாத்திரம் பதவிகளுக்காகவும், ஊழல்களுக்காகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருப்பது வேடிக்கையாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக சமூகம் வடகிழக்கில் காணாமல் போன உறவுகள் குறித்தும், யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் குறித்தும் நீதி விசாரணை வேண்டுமென தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருவதோடு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் தயாராகிவருகின்றனர்.

ஆனால் வடகிழக்கு இணைப்பு குறித்தும், தமிழர் பிரதிநிதித்துவம் பற்றியும், கிழக்கின் தனித்துவம் குறித்தும் அதிகமாக பேசும் கிழக்கு சமூகம் கடந்த காலங்களில் பல விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

அதாவது சர்வதேச பிரதிநிதிகள் வடக்குக்கு மாத்திரம் விஜயம் செய்வதாகவும் அவர்கள் கிழக்கிற்கு வருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்களுடன் வடக்கில் உள்ள மக்களைப் போன்று கிழக்கில் உள்ள மக்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே வடக்கிற்கு செல்லும் சர்வதேசம் கிழக்கிற்கும் வரவேண்டும் என வேண்டுகோள்விடுத்திருந்தனர்.

குறித்த வேண்டுகோள் நியாயமானதும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் கிழக்கு சமூகம் சர்வதேசத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் தங்களது பக்கம் திருப்புவதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தவில்லை என்பதோடு அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் பின் நின்றதன் காரணமாகவே  கிழக்கு சமூகம் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதா? என்ற சந்தேகங்களை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.
எனவே உரிமைகளுக்காக போராடும் சமூகம் அதற்கான முனைப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் ஊடாகவே அரசாங்கத்தின் கவனத்தையும், சர்வதேசத்தின் கவனத்தையும் எம் பக்கம் திருப்பி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ளமுடியும். அதை விடுத்து தமிழ் மக்களுக்கு எதுவுமே நடக்காதது போல் பதவிகளுக்கும், சலுகைகளுக்கும் நாம் போராடிக் கொண்டிருப்போமானால் வரலாறு நிச்சயம் எம்மை பழிக்கும்.

அந்த வகையில் வடகிழக்கு சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய முக்கியமான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு புத்திஜீவிகள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ந்தும் பாடுபடவேண்டும் என்பதற்காகவே வடகிழக்கு தமிழ் சமூகம் தொடர்ந்தும் தமது வாக்குகளை பயன்படுத்தி வருகின்றது.
விலைமதிக்கமுடியா சொத்துக்களையும், உயிர்களையும் இழந்து நடைப்பிணமாய் வாழும் வடகிழக்கு தமிழ் மக்கள் இன்றும் தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதிலேயே உறுதியாக இருக்கின்றனர் என்கின்ற செய்தியை கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் மிகவும் ஆணித்தனமாக கூறியிருக்கின்றனர் என்பதை கிழக்கில் உள்ள புத்திஜீவிகள் புரிந்துகொண்டு அந்த மக்களுக்காக குரல்கொடுப்பதற்கு முன்வரவேண்டும்.
மிக முக்கியமாக கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கடந்த அரசாங்கத்தின் பல்வேறுபட்ட சலுகைகளுக்கு மத்தியிலும் கூட அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு தங்களது உரிமைகளை பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வாக்களித்துள்ளனர் எனவே மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு செயற்படுவதே சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளின் கடமையாகவுள்ளது.

அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக சமூகம் வடகிழக்கு மக்களுக்காக குரல் எழுப்ப முடியுமாகவிருந்தால் ஏன் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் வடகிழக்கு மக்களுக்காக குரல் எழுப்ப முடியாது? என்பதே இன்று பலரும் முன்வைக்கும் கேள்வியாகவுள்ளது.

யாழ் பல்கலைக்கழக சமூகம் தமிழ் மக்களுக்கான நீதி விசாரணையை வலியுறுத்தி இன்னும் சில தினங்களில் நல்லூரில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்துவதற்கு தயாராகிவருகின்றனர்.

கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றெடுப்பதற்கு எந்தவகையிலான பங்களிப்பை செய்யப்போகின்றார்கள் என்பதை இன்று வடகிழக்கில் உள்ள தமிழ் சமூகம் உட்பட பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் எங்கு பாதிப்புக்கு உள்ளாகினாலும் அதற்காக குரல்கொடுக்கும் உரிமை கிழக்கு மக்களுக்கும் உண்டு என்பதுடன் உலகத்தில் மனிதநேயம் பாதிக்கப்படும்போது அதனை வேடிக்கைபார்த்துக் கொண்டிருப்பவர்களை மனிதர்களாக கருத முடியாது அந்த வகையில் எமது மக்கள் எமது கண்முன்னே இன்றும் கதறிஅழுதுகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. தமிழ் சமூகத்தில் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் அந்த சமூகத்தின் உரிமைக்காக போராட வேண்டியது எமது கடமையென்பதுடன் அது எமது உரிமையுமாகும்.

எனவே இன்னுமொரு இனத்தை பாதிக்காத வகையில் எமது மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்களை நடாத்தும் உரிமை இந்த நாட்டில் அனைவருக்கும் உண்டு என்றவகையில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகமும் தங்களது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான வரலாற்று கடமையை செய்வதற்கு முன்வரவேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
-தீரன்-

உங்களது விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் theeran@battinews.com  என்ற மின்னஞ்சலுக்கு  அனுப்பிவையுங்கள்