உலக நாடக தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் நிகழ்வு

உலக நாடக தினம் 2015 ஐ முன்னிட்டு மார்ச் 27 காலை 9.30 – 12.30 வரை நீலாவணன் அவர்களது அரங்கப் பணி பற்றிய உரைகளும் உரையாடல்களும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் நிகழவுள்ளது.

துறைத் தலைவர் கலாநிதி வ . இன்பமோகன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கு . ரவிச்சந்திரன், (விரிவுரையாளர் நுண்கலைத்துறை) பா . மோகனதாஸ்சன் (நாடக அரங்கியல் பட்டதாரி) ஆகியோர் உரைகளை நிகழ்த்தவுள்ளனர். கலாநிதி சி . ஜெயசங்கரது அறிமுகவுரையுடன் ஆரம்பமாகும் நிகழ்ச்சி சு. சந்திரகுமார் அவர்களின் தொகுப்புரையுடனும், திருமதி . நிலுஜா ஜெகநாதன் அவர்களது நன்றியுரையுடனும் இடம்பெற்று கலாநிதி சி . ஜெயசங்கரது ஆற்றுப்படுத்தலில் கலந்துரையாடலாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெறும்.
நீலாவணன் முக்கியத்துவம் பெற்ற கவிஞராக அறியப்பட்டவர். பா நாடகங்களை எழுதியவராக  நாடக அரங்கத்துறையிலும் அறியப்பட்டவர்.
ஆயினும் நாடக அரங்கச் செயற்பாட்டை நிறுவன அமைப்பாக மிகவும் காத்திரமான வகையில் முன்னெடுத்த ஆளுமை என்பது அறியப்படாதது. நீலாவணனின் இந்த முக்கியத்துவ மிக்க செயற்பாடு , வரலாற்றுக்கு மட்டுமல்ல படிப்பினைக்குரியது. ஈழத்து தமிழர்தம் சமகால அரங்கச் செயற்பாட்டுக்கு பெரும் படிப்பினையைத் தரக்கூடிய அரங்கச் செயற்பாடு நீலாவணனுடையது.



தன்னார்வம் , கூட்டுழைப்பு , சமூக ஆதரவு என்ற படிநிலைகளுக்கு ஊடாக முன்னெடுக்கப்பட்டவை நீலவாணனது அரங்க முன்னெடுப்புக்கள் , நிதி வழங்கும் நிறுவனங்கள் இல்லாமல் நிகழ்ச்சிகளும் இல்லை கொண்டாட்டங்களும் இல்லை என்றாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் நீலாவணனனை நினைவு கூறுவது முக்கியத்துவம் உடையது.
ஏனெனில் ஈழத்தமிழர்களது பாரம்பரிய அரங்குகளும் , நவீன அரங்குகளும் தமது இயக்கத்திற்கும் நடைமுறைக்கும் யாரிலும் தங்கியிருக்காதவை இது வரலாறு. இந்த உலக நாடக தினத்தில் இந்த தோற்கடிக்கப்பட கூடாத வரலாற்றை வலுப்படுத்தும் ஊக்கியாக நீலாவணனை நினைவு கூறுகிறோம். அவரது நாடக அரங்கச் செயற்பாடு பற்றி உரையாடுகிறோம் . உரையாடல்கள் தொடரும் செயற்பாடுகள் முன்னேறும் . 

                                    கலாநிதி .  சி . ஜெய்சங்கர்