ஏறாவூர் பிரதேச கலை இலக்கிய விழா

(சுழற்சி நிருபர் ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலக கலை இலக்கியப் பெரு விழாக்கள் வெள்ளி (27) சனி (28) ஆகிய இரு தினங்களும் இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் கலாசாரப் பேரவையின் தலைவரும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளருமான எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் நடாத்தப்படும் வருடாந்த கலை இலக்கிய நிகழ்வு வெள்ளியன்று மாலையும் 'இனசமதி' சிறப்பு மலர் வெளியீட்டு இலக்கியப் பெருவிழா சனிக்கிழமையன்று மாலையும் ஏறாவூர் வாவிக்கரை சிறுவர் பூங்காவில் இடம்பெறவிருக்கின்றன.

வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள கலை நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் எஸ். கிரிதரன், மாவட்ட உதவிச் செயலாளர் எஸ். ரங்கநாதன் உள்ளிட்ட இன்னும் பலர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

சனிக்கிழமை இடம்பெறும் கலை இலக்கியப் பெருவிழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத், நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சபைப் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், மாகாண சபை உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் ஆகியோரும் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கலை இலக்கிய நயம்மிக்க இந்தப் பெருவிழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்துறை சார்ந்த எட்டு கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் ஹனீபா தெரிவித்தார்.