கோடரியால் தாக்கப்பட்ட ஜனாதிபதியின் தம்பி சிகிச்சை பலனின்றி மரணம்

தாக்குலுக்கு இலக்காகி பலத்த காயத்துக்குள்ளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேன உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை 3.50 அளவில் பிரியந்த சிறிசேன உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.


சடலம், குறித்த தனியார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளும் நீதாவான் விசாரணையும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் தம்பி பிரியந்த சிறிசேன. இவர், பொலநறுவை மாவட்டத்தில் மணல் குவாரி நடத்தி வருகிறார். பொலநறுவையில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரியந்தாவின் நெருங்கிய நண்பர் லக்மல். அவரது வீடு, பாகமுனா என்ற இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம், பிரியந்தா அங்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கும், நண்பர் லக்மலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒரு கோடரியை எடுத்து, பிரியந்தாவின் தலையில் லக்மல் வெட்டினார். இதில், மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

படுகாயம் அடைந்த பிரியந்தா, பொலநறுவையில்  உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்துவிட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிரியந்தாவை வெட்டிய அவருடைய நண்பர் லக்மல் பாகமுனா போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.