சவூதியில் எஜமானியால் எரியூட்டி பணிப்பெண் கொலை , மற்றுமொரு தப்பியோடிய பெண் பலி

சவுதி அரேபியாவின்அஸீர் பிரதேசத்தில் பணிப்பெண்களாக சேவையாற்றுவதற்கு சென்றிருந்த இலங்கை பணிப்பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கின்றது.
இவ்விருவரில் ஒருவர் விபத்திலும் மற்றவர் எரியூட்டப்பட்ட நிலையிலும் மரணமடைந்துள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர்களில் ஒருவர் திருகோணமலை உப்புவேலியை வசிப்பிடமாக கொண்ட நசுரா என்றும் அவர்   ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.  ஆறு மாதங்களுக்கு முன்னரே பணிப்பெண்ணாக அவர் சவுதிக்கு சென்றுள்ளார்.
தான், பணிப்பெண்ணாக இருந்த எஜமானின் வீட்டு எஜமானி தன்னை தாக்கியதுடன் பல்வேறான துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தினார். அத்துடன் சில நாட்களுக்கு முன்னர் பெற்றோல் அல்லது வேறு ஏதாவது எரிபொருட்களை ஊறி, அறைக்குள் போட்டு பூட்டி எரியூட்டியிட்டினார் என்று அஸர் வைத்தியசாலையின் ஊழியரிடம் அந்த பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

அஸர் வைத்தியாசாலைக்கு வெளியே உயிருக்காக துடித்துகொண்டிருந்த அப்பெண்ணை, வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததாக அந்நாட்டில் இருக்கின்ற இலங்கை சமூக சேவையாளரான நிமல் எடேரமுல்ல தெரிவித்துள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்த போதே வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த பெண், 25ஆம் திகதி புதன்கிழமை மரணமடைந்துள்ளார். அவருடைய சடலம் அஸர் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பெண் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அராபிமொழியில் எழுதப்பட்ட ஆவணமொன்றில் அவருடைய பெருவிரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதற்கிடையில் அபா பிரதேசத்திலிருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்ற அரப் மலை பிரதேசத்தில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணான மற்றுமொரு பெண், எஜமானின் வீட்டிலிருந்து தப்பியோடிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று ஜேடா கவுன்சிலர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அவர், இலங்கை பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று அந்த காரியாலயம் தெரிவித்துள்ளது.
அப்பெண்ணின் சடலம், ஜிசாத் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.