கோவிலுக்கு சென்ற எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை ! கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம் சாட்சி

(எம்.ஏ.றமீஸ்)
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்ககுக்கு மேலாக இடம்பெற்று வந்த அசாதாரண சூழலின்போது காணாமற்போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கை இன்று(08) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

காணாமல் போனோர் பற்றி விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தவிசாளர்;  மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான ஆணைக்குழு ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, காரைதீவு, நிந்தவூர், திருக்கோவில், இறக்காமம் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணாமல்போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு இவ் உறவுகளின் முறைப்பாடுகளையும் வாய்மூல மற்றும் ஆவணங்களின்  சாட்சியங்கள் போன்றவற்றை பதிவு செய்யும் இரண்டு நாட்கள் கொண்ட ஆணைக்குழுவின் நடவடிக்கை இன்று(08) புதன்கிழமை ஆரம்பமானது.

ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 55 முறைப்பாடுகளையும், திருக்கோவில் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 40 முறைப்பாடுகளையும், காரைதீவு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தலா ஒவ்வொரு முறைப்பாடுகளும் அடங்கலான 97 முறைப்பாட்டாளர்களை ஆணைக்குழு அழைத்திருந்தது. இவற்றுள் குறிப்பிட்ட தொகையினர் மாத்திரமே ஆணைக்குழுவின் விசாரணைக்கென சாட்சியமளித்தனர்.

ஏனையோர் இவ் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை நாளை வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 21 முறைப்பாட்டாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 24 முறைப்பாட்டாளர்களுக்கும், இறக்காமம் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 16 முறைப்பாட்டாளர்களுக்குமாக விசாரணை நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் அழுதவாறு எம்மை தொடர்ந்தும் ஏமாற்றுவதை விட்டு விடுங்கள், இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என அமைதியான கோசங்களை எழுப்பியவாறு 'ஐ.நா விசாரணையே வேண்டும். உள்நாட்டு விசாரணை வேண்டாம்;' 'நாங்கள் கேட்பது எங்கள் சொந்தங்களை நீங்கள் தருவது ஆடு மாடு கோழிகளை' 'சர்வதேசத்தை ஏமாற்ற காணாமற்போனோர் விசாரணை இது எங்களையும் ஏமாற்றுகிறதே' 'நல்லிணக்கம் சொல்லும் அரசே ஐ.நாவின் விசாரணைக்குழுவை அழை' 'உணவின்றி தவித்து போராடுகின்றோம் எமது உறவுகளைத்தேடி' போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு பிரதேச முன்னால் காணாமல் போன சொந்தங்களின் உறவினர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை தமது உறவுகளை இழந்த பொதுமக்கள் பலர் ஆணைக்குழு முன்னிலையில் கண்ணீர்மல்க உருக்கமான சாட்சியமளித்தனர்.

1988ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆந்திகதி மேசன் வேலைக்காகச் சென்ற எனது மூத்த மகன் ஆறுமுகம் புஸ்பராசாவையும்,
1990 பெப்ரவரி 15ஆம் திகதி கடைக்குச் சென்ற 30 வயதுடைய எனது இரண்டாவது மகனின் நிலை இதுவரை எனக்குத் தெரியாமலேயே உள்ளது என கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம் தெரிவித்தாரல்
ஆலையடிவேம்பு நாவற்காடு மகா சக்தி வீதியைச் சேர்ந்த நாகம்மா வைரமுத்து தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு பிறந்த எனது மகன் கோயிலுக்குச் சென்று வரச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனது மகனை மீட்டுத் தாருங்கள் என திருக்கோவில் காயத்திரி கிராமத்தைச் சேர்;ந்த தெய்வநாயகம் சரஸ்வதி ஆணைக்குழு முன்நிலையில் இவர் கதறி அழுதவாறு சாட்சியமளித்தார்.

1982ஆம் ஆண்டு 22 வயதுடைய எனது மகன் மாடு மேய்க்கச் சென்றார். அவர் வீடு திரும்பாததால் எத்தனை முறை தேடி அலைந்தும் அவர் வீடு வரவில்லை ஆனால் சொற்ப காலத்தின் பின் அவர் அகால மரணமடைந்து விட்டார் என செய்தி தாங்கிய மடல் ஒன்று எம் வீடு வந்தது. அதன் பின்னர் என் மகன் பற்றிய எந்தத் தகவலும் கிட்டவில்லை என ஆலையடிவேம்பு முருகன் கோயில் வீதி வைரமுத்து பேரின்பராசா ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

22 வயதுடைய மாநாதன் கனகராசா என்ற எனது மகன் கல்வியில் மிகுந்த ஆர்வம் உடையவர். அவர் கற்ககை நெறியினை மேற்கொண்டு அம்பாறை நகருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி தமிழ் முஸ்லிம் பிரச்சினையொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வான்வெளியாக வந்த ஹெலிகொப்டரிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது எனது மகன் இறந்ததாக அயலவர்கள் தெரிவித்தார்கள். அவரைத் தேடிப்பார்த்தபோது எம்மால் கண்டு கொள்ள முடியவில்லை என கோளாவில் கோவில் வீதி பொன்னுத்துரை சின்னப்பிள்ளை சாட்சியமளித்தார்.

1997ஆம் ஆண்டு மேசன் வேலைக்குச் சென்ற இராசமாணிக்கம் சந்திரமோகன் வீடு வந்து சேரவில்லை. அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொண்டு சென்றதாக அயலவர்கள் சொன்னார்கள் அவருக்கு என்ன ஆனதென்று இதுவரை எனக்குத் தெரியாமல் உள்ளது என தம்பிலுவில் க.சரஸ்வதி தெரிவித்தார்.

கடந்த 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ஆந் திகதி தலைமுடி வெட்டுவதற்காகச் சென்ற சா.கிருபைராசா என்ற மகனும், 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆந் திகதி கூலித் தொழிலுக்காகச் சென்ற சா.சிவகுமார் என்ற எனது மற்ற மகனும் இதுவரை வீடு திரும்பN;வ இல்லை. இவர்கள் இல்லாத நாட்கள் நரகத்தில் பயணிப்பதுபோல் உள்ளது. இவர்களை மீட்டுத்தாருங்கள் என்று அக்கரைப்பற்று எட்டாம் பிரிவில் வசிக்கும் சாமித்தம்பி தெய்வானை கண்ணீர் மல்க ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் புலம்பியவாறு சாட்சியமளித்தார்.

இதுவரை ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட  விசாரணைக்கு எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத அதேவேளை இவ் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகளில் சொற்ப முறைப்பாடுகள் மட்டுமே விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறாக நலிவுற்று அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் எமது மக்களின் கண்துடைப்பிற்காக மேற்கொள்ளப்படும் விசாரணை எமக்கு வேண்டாம். துரிதமாகவும் பக்கச் சார்பற்றும் விசாரணை செய்யும் சர்வதேச கண்காணிப்புடனான விசாரணையே எமக்கு வேண்டும் இல்லையேல் எமது கவனயீர்ப்பு பகிஷ்கரிப்பு வடகிழக்கில் தொடர்ந்து கொண்டே செல்லும் என   காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட அமையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  பொறியியலாளர் எஸ்.கணேஷ் தெரிவித்தார்.