ஏமாற்றும் உள்ளக விசாரணை வேண்டாம் ஐ.நா விசாரணைக் குழுவே வேண்டும்

(சுழற்சி நிருபர் ஹுஸைன்,எம்.ஏ.றமீஸ் )
பல காரணங்களின் நிமித்தம் அம்பாறை மாவட்டத்திலுள்ள  காணாமலாக்கப்பட்டோரினதும் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரினதும் உறவினர்களின் அமையம் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான முதலாவது அமர்வு திங்களன்று (06.04.2015) கல்முனைப் பிரதேச செயலக மண்டபத்தில் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை இந்த அமர்வை புறக்கணித்த ஒருசாரார் ஆணைக்குழுவிடம் தமது அதிருப்தி மனுவைக் கையளித்தனர்.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2013 தொடக்கம் 2014 வரை ஆணைக்குழுவிற்குக் கிடைத்த 15000 முறைப்பாடுகளில் இதுவரை 2000 ஆயிரம் முறைப்பாடுகளையே ஆணைக்குழு விசாரித்து முடித்துள்ளதாகக் கூறுகின்ற நிலையில் மொத்த விசாரணைகள் முடிவடைவதற்கு இன்னமும் எத்தனையோ வருட காலம் நீண்டு செல்லும்.

எனவே, இவ்வாறானதொரு நீண்ட கால விசாரணைக்கு முகம் கொடுப்பதற்கு தமது உறவுளை பறிகொடுத்து துயரத்தில் நிற்போர் தயாராக இல்லை.
அத்துடன் இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளின் வாயிலாக எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றி ஆணைக்குழு எதனையும் வெளிப்படுத்தவுமில்லை.

மேலும் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகள் இடம்பெறும்போது அந்தந்தப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஓரிருவரின் பிரசன்னமும் இருக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கின்ற போதும் அதனை ஆணைக்குழு அக்கறையில் எடுக்கவில்லை.

ஆணைக்குழு கடந்த மார்ச் மாதம் தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. ஆனால், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா,? அதன் உள்ளடக்கம் என்ன? காணாமல் போனோர் எவரும் கண்டு பிடிக்கப்பட்டனரா ? என்ற கேள்விகளுக்கு ஆணைக்குழுவின் விசாரணை முடிவுகள் தெரியாத நிலையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆணைக்குழுவின் செயற்பாட்டில் எமக்கு நம்பிக்கையில்லை.

இரு இனங்கள் சம்பந்தப்பட்டு பாதிப்புக்கள் இடம்பெற்றிருப்பதால் ஓர் இனத்தால் நியமிக்கப்பட்டிருப்போரின் விசாரணையானது அவநம்பிக்கையாகவும் பலவீனமாகவும் அமைந்துவிடும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
எனவே, இவற்றுக்கு அப்பால் சென்று சர்வதேசத்தின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர்களையும் உள்ளடக்கியதான விசாரணைகளே பக்கச் சார்பற்றதாக அமையும் என நாம் நம்புகின்றோம்.
தமிழர் மனங்களிலுள்ள கற்றுக் கொண்ட கசப்பான வரலாற்று அனுபவப் பாடமானது பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு அவை இழுத்தடிக்கப்பட்டு செயலிழந்து போன ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது.
எனவே, கடந்து 1983 ஆம் ஆண்டு தொடக்கம் வலிசுமந்து நிற்கும் தமிழினம் இன்னமும் பல வருடங்களை விசாரணை என்ற பெயரில் வீணடிக்கத் தயாராக இல்லை.

தற்போது நல்லாட்சி என்கின்ற அரச கட்டமைப்பில் மக்கள் ஜனநாயக வழியில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முயல்கையில் புலனாய்வாரள்களின் பிரசன்னமும் அவர்களது செயற்பாடும் மக்களது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கின்றதாய் அமைந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் ஐநாவின் அனுசரணையுடன் சர்வதேச தரத்தினாலான நம்பகத் தன்மை கொண்ட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புதிய அரசு வாக்குறுதியளித்தது போன்று நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச விசாரணையைக் கோரிநிற்கின்றோம்.
இப்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆணைக்குழு விசாரணையில் எமக்கு சிறிதளவேனும் நம்பிக்கை இல்லை. இது காலத்தை இழுத்தடிப்பதற்கான வெறும் கண்துடைப்பு' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை செயற்பாட்டாளர்களான அடிகளார் ஏ. கமலகுமார், சிவசிறி கே. யோகராஜன் குருக்கள், பாண்டிருப்பு மகளிர் குழுத் தலைவி எஸ். பிறேமாவதி, எஸ். கணேஸ் உள்ளிட்ட குழுவினர் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகமவிடம் கையளித்தனர்.