ஆட்சி மாற்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தை கூறலாம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

சித்தாண்டி வானவில் விளையாட்டுக்கழக மைதான திறப்பு விழாவும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் ஞாயிற்றுக்கிழமை (19)  நடைபெற்றன. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மட்டக்களப்பு மாவட்டம் ஏன் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றேன் என்றால், யாழ்ப்பாணத்தில் படையினர் நிலங்களை விடுவிக்கின்றனர். அங்கு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளார்கள்.  அங்கு சில வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.   ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சரை விட்டுக்கொடுத்துவிட்டு, மத்திய அரசாங்கத்தில் அமைச்சுக்களும் பெறப்படாமல், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமைப் பதவியும் கிடைக்கவில்லை. இதனாலேயே, நூறு நாள் வேலைத்திட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது
என்று கூறுகின்றேன்.

ஆட்சி மாற்றத்தில் நிலத்தை மீட்டுத் தருகின்றோம் என்று கூறியவர்கள், இந்த மாவட்டத்தில்  என்ன செய்கின்றார்கள். பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேய்ச்சல்தரைகளுக்கான நிலங்களை பிடிக்கின்றனர்.  அதேபோன்று, இப்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதி ஒருவரும் அவருடைய உறவினர்களும்  வாகரையில் அதிகமான காணிகளை எடுத்து பண்ணைகளை  நடத்துகின்றனர். அதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு யாரும் தயாரில்லை. ஆனால், நாங்கள் செய்யும் வேலைத்திட்டங்களை விமர்சிப்பதற்கு தயாராகவுள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாலேயே  கிழக்கு மாகாணம் விரைவாக கட்டியெழுப்பப்பட்டது'என்றார்.