சர்நீதியா சட்டப்படி பணிப்பெண்ணாக செல்லவில்லை! - வௌிநாட்டில் பல பெண்கள் இந்தக் கொடூரத்துக்குள் சிக்கித்தவிக்கின்றனர்

(எம்.எஸ்.எம்.நூர்தீன் )
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக செல்கின்ற ஆண்கள் பெண்கள் என பலரும் கை நிறைய சம்பாதித்து பணம் பொருள் என்பவற்றுடன் ஊர் திரும்புகின்றனர்.

சிலர் பல கஸ்டங்களுடன் வெறும் கையுடன் நாடு திரும்புகின்றனர்.

தமக்கான இல்லமொன்றை அமைப்பதற்காக தனது குடும்பத்தை வாழ வைப்பதற்காக பொருளாதாரத்தை ஈட்டுவதற்காக என இவ்வாறு பல நோக்கங்களுக்காக வெளிநாடு செல்கின்றனர்.

ஆனால் குவைத் நாட்டுக்கு பல கனவுகளுடன் சென்ற மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா தனது உயிரை இழந்து சடலமாக அனுப்பபட்ட சம்பவம் அன்மையில் இடம் பெற்றுள்ளது.  

வறுமையின் கொடூரம் இவரின் உயிரையே பலி கொடுக்க வைத்துள்ளது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா(வயது22) திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையுண்டு. இவரின் கனவர் இவரை விட்டு பிரிந்து வேறு ஒரு திருமணம் செய்து விட்டார்.

தனது மூன்று வயது குழந்தையை பராமரிப்பதற்காகவும் தனது குடும்பக் கஸ்டத்தை போக்குவதற்காகவும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் குவைத் நாட்டிற்கு சென்றார்.

சோமசுந்தரம் கீதா சர்நீதியாவின் தாய் ஏற்கனவே சஊதி அரேபியாவுக்குச் சென்று வீடொன்றில் வீட்டுவேலைசெய்து உழைத்து தனது குடும்பத்தை பராமரித்து வரும் நிலையில் சர்நீதியாவும் தாயின் ஒப்புதலின்றி குவைத் நாட்டிற்கு சென்றார்.

காத்தான்குடியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் எஸ்.சி.எம்.சியாம் என்பவரின் மூலம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக இவர் குவைத் நாட்டிற்கு சென்றார்.

குவைத் சென்ற சர்நீதியா கடந்த 28.2.2015ல் உயிழந்தார் அவரின் சடலம் 13.3.2015 அன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அன்றைய தினம் மட்டக்களப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர் எப்படி உயிரிழந்தார் என்ன காரணத்தினால் இவர் உயிரிழந்தார் என்பது பற்றி இவரின் தாய்க்கோ குடும்பத்திற்கு தெரிந்திருக்கவில்லை.

சர்நீதியாவின் தாய் சஊதி அரேபியாவில் இருக்கும் போது  சர்நீதியா குவைத் சென்றதால் தனது மகளுடன் தொலைபேசி மூலம் அடிக்கடி சர்நீதியாவின் தாய் கீதா மகளுடன் தினமும் பேசி வந்தால்; இதன் போது தனக்குள்ள பிரச்சினைகள் பற்றி சர்நீதியா எதுவுமே தாயிடம் கூறியிருக்க வில்லை.

இவ்வாறு தொலை பேசி மூலம் தனது மகளுடன் உரையாடி வந்த தாய் 27.2.2015 அன்று காலையிலும் தொலை பேசியில் உரையாடியுள்ளார்.

அன்று மாலை மீண்டும் தொலை பேசி எடுத்த போது மகள் வழமையாக பேசும் இலக்கத்தில் ஓரு ஆண் பேசியுள்ளார்.

மகள் சர்நீதியா எங்கே எனக் கேட்ட போது அவவை பிடித்து அடைத்து வைத்திருக்கின்றோம் அவவை நாட்டுக்கு அனுப்புவதாயின் பணம் கட்ட வேண்டும் என்று அந்த ஆண் கூறியுள்ளார். அதைக்கட்டுகின்றோம் மகளை விடுங்கள் என தாய் கூறியுள்ளார்.

பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட உங்கள் மகள் சர்நீதியா எட்டாம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்து விட்டார் என்ற பதில் தாய்க்கு கிடைத்தது. அதிர்ந்து போன தாய் அழுது புலம்பிய நிலையில் தனது வீட்டு எஜமானிடம் விடயத்தைக் கூறி நாட்டுக்கு வந்து ஊர்வந்து சேர்ந்தார்.

பின்னர் மகளின் சடலத்தை மட்டக்களப்புக்கு வரவழைக்கும் முயற்சிகளில் தாய் ஈடுபட்டு சடலம் 13.3.2015 அன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அன்றைய தினம் மட்டக்களப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மகள் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழக்கவில்லை. மகளை துன்புறுத்தி வன்முறை செய்து மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கின்றோம் எனவும் தாய் வேதனையுடன் தெரிவிக்கின்றார்.

இந்தக் குடும்பம் மிகவும் வறிய குடும்பம் ஏழ்மையின் நிழலில் வாழ்ந்து வரும் குடும்பம் என்பதால்; இவைகளைப்பற்றி பார்ப்பதற்கு யாரும் இந்தக் குடும்பத்தில் கிடையாது.

சடலத்துடன் சர்நீதியாவின் கடவுச்சீட்டு மாத்திரமே வந்தது மற்ற பணமா ஆவணங்களா எதுவும் வரவில்லை.

இது பற்றி சர்நீதியாவின் தாய் கீதா குறிப்பிடுகையில் எனது மகளை காத்தான்குடியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் எஸ்.சி.எம்.சியாம் என்பவர் பல தடவை எனது மகள் சர்நீதியாவின் வீட்டிற்கு வந்து குவைத்தில் நல்ல வீட்டு வேலை இருப்பதாகவும் கூடிய சம்பளம் கிடைக்குமெனவும் பொய் கூறி அவரை குவைத் நாட்டிற்கு அனுப்பினார்.

இவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமலும், இவருக்கு வெளிநாடு செல்வதற்கான காப்புறுதி செலுத்தாமலும் குறித்த உப முகவர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக வீட்டு வேலைக்கான விஸா இல்லாமல் விஸிட் எனப்படும் விஸா மூலம் சட்ட பூர்வமற்ற முறையில் குவைத் நாட்டிற்கு அனுப்பியிருந்தார்.

உயிரிழந்த எனது மகளின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்று இது தொடர்பாக அறிய முற்பட்ட போதுதான் சட்ட பூவமற்ற முறையில் எந்த பதிவுகளுமின்றி எனது மகளை குவைத் நாட்டிற்கு அனுப்பியிருந்தமை தெரியவந்து.

எனது மகளின் சடலத்துக்கு மேலே வைக்கப்பட்டவாறு மகளின் கடவுச்சீட்டு மாத்திரமே வந்தது. மகள் உயரமான மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக பின்னர் கிடைக்பெற்ற மரணத்திற்கான காரணம் எழுதப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் அறிந்து கொண்டேன்.

எனது மகள் குவைத்தில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் அவரை கொலை செய்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

எனது மகளின் மரணம் தொடர்பில் எந்தவொரு நஸ்டஈடும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஒரு ரூபாய் பணம் கூட குவைத்திலிருந்தோ அல்லது அனுப்பிய முகவரிடமிருந்தோ கிடைக்கவில்லை.

எனது மகளுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையுண்டு. அவவின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

எனது கனவரும் யுத்தத்தினால் இறந்து விட்டார். 

மிகவும் கஸ்டமான குடும்ப சூழ் நிலையில் வாழந்து கொண்டிருக்கின்றோம். குடும்ப கஸ்டத்தின் காரணமாகவும் அவவின் குழந்தையை வளர்தெடுக்க வேண்டும் என்பதற்காகவுமே அவர் குவைத்துக்கு சென்றார். இப்போது நாங்களே அந்தக் குழந்தையையும் வளர்த்து பராமரித்து வருகின்றோம். என தாய் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலமான ஒரு முறைப்பாட்டையும் செய்துள்ளார் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது குவைத் நாட்டில் உயிரிழந்த எனது மகள் சர்நீதியாவை காத்தான்குடியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் எஸ்.சி.எம்.சியாம் என்பவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எனது குடும்ப நிலையை கருத்திற் கொண்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் இவ்வாறான முறையில் வறிய பெண்களை சட்ட பூர்வமற்ற வகையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டபூர்வமற்ற முறையில் இந்த யுவதி வெளிநாடு சென்றதால் எந்தவொரு நஸ்ட்டஈடோ அல்லது எவ்வித நடவடிக்கையோ எடுக்கமுடியாமல் இந்தக் குடும்பம் தடுமாறுகின்றது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்நீதியாவுக்கு நடந்த இந்தக் கதி போன்று பல பெண்களுக்கும் வெளிநாட்டில் இடம் பெறுகின்றன. அவற்றில் சில வெளிவருகின்றன. பல மறைக்கப்படுகின்றன. அல்லது வெளி வருவதில்லை.

இவ்வாறு பல பெண்கள் இந்தக் கொடூரத்துக்குள் சிக்கித்தவிக்கின்றனர். இவர்களுக்கான விடிவு எப்போது கிடைக்கும்

 (எம்.எஸ்.எம்.நூர்தீன், ஊடகவியலாளர்)