ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வு

அரசாங்க நிருவாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சின் 03/2015 ஆம் இலக்க சுற்றறிக்கைமூல பணிப்புரைக்கமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான புதிய அரசினால் இவ்வருடம் முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மே, 22 குடியரசு தினத்தை சகல அரச நிறுவனங்களிலும் கொண்டாடும் திட்டத்தின் அடிப்படையில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகபூர்வ குடியரசு தின நிகழ்வு இன்று (22) காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது.

வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கத்தினால் யால, குமண பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கான விசேட குடியரசு தின வைபவத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு சென்றுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், தனது பிரதிநிதியாக நியமித்த நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் இன்றைய நிகழ்வினைத் தலைமைதாங்கி நடாத்திவைத்தார்.

முதலில் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தரின் தலைமை உரையைத் தொடர்ந்து கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நாஹிப்பின் குடியரசு தினச் சிறப்புரை இடம்பெற்றது. இவ்வுரையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் யாப்புக்கள், 1948 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரமடைந்த பின்னர் மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது அரசியல் யாப்பு மற்றும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட இரண்டாவது அரசியல் யாப்பும் அதன் மூலம் தோற்றம் பெற்ற நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமை, திறந்த பொருளாதாரக் கொள்கை என்பன தொடர்பாகக் குறிப்பிட்ட அவர்,  1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் அரசியலமைப்பில் காலத்துக்குக் காலம் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச் சட்டங்கள் தொடர்பாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சகல பிரிவுகளையும் சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.