மாணவி வித்தியாவிற்கான கொடுஞ்செயலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு முறையான ஒழுங்குபடுத்தல்கள் அவசியம்

 (ரவிப்ரியா)
 புங்குடுதீவில் இடம் பெற்ற கொடிய மிருகத்தனமான பாலுறவு துஸ்பிரயோகத்திற்கும்,  படுபாதக சித்திரவதை கொலைக்கும், மாணவர் சமூகம் கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்பதில், மாற்று கருத்துக்கு இடமில்லையென்றாலும் அவை சீரான சிறந்த முறையில் ஒழுங்குபடுததுதல் அவசியமாகுமென பிரதேச அதிபர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்ளம் உடைந்து உணர்வுகள் கொப்பளிக்கும், இந்தப் பாதகச் செயலுக்கும், அநியாய படுகொலைக்கும், நீதி கோருவதும், எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஜனநாயக மரபப்படி ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

இது ஏக காலத்தில், அனைத்துப் பாடசாலைகளையும் அவகாசம் கொடுத்து ஒன்றியைத்து. முழு மனதோடு செயற்படுத்த வேண்டிய கைங்கரியமாகும், என்பதை மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவருமே ஏற்றக் கொள்ளவே செய்வர்.

தற்காக மாணவர்களை உடனடியாக வீதியில் இறக்குவதென்பது, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதை உதாசீனம் செய்துவிடமுடியாது.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே வெவ்வேறு தினங்களில் நடாத்தப்படும் கண்டனப் பேரணிகளை ஒழுங்காக ஒழுங்கமைத்து, சட்டதிட்டங்களைப் பேணி, உரிய அனுமதிகளை உரிய இடங்களில் முற்கூட்டியே பெற்று, மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், பெற்றோர்களிடமும் ஆலோசனையும், அனுமதியும் பெற்று, ( நிச்சயம் கிடைக்கும்), அதைச் செவ்வனே நடாத்துவதற்கு கால அவகாசம் கண்டிப்பாகத் தேவை எனவும் அவர்கள் சுட்டிக் காடடுகின்றனர்.

எனவே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்வோர், இதைச் சரியாக வழிநடாத்த தவறி விட்டதாகவே கருதுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அவசர செயற்பாடுகள், ஆபத்தில் கொண்டுபோய் விடும். எனவே அவதானமாகவும், நிதானமாகவும், நிறைவாகவும், ஒரேநாளில் பிரமாண்டமான முறையில் செய்வதற்கான ஏற்பாடுகளை பொதுவான அனுமதியுடன், செய்வதே பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும், அனைத்து தரப்பினரினதம், கவனத்தையும் ஈர்க்க கூடியதாக அமையும் என்பதே எமது அபிப்பிராயமாகும்.

எனவே பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்க, மாவட்டம் தழுவிய அல்லது வலயங்கள் ரீதியாக ஏக காலத்தில் இத்தயை பேரணிகள் அனைத்துப் பாடசாலைகளின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் கருத்து தெரிவித்தனர்.