காட்டுமிராண்டித்தனமான கொடூர கொலையும் - கண்டனங்களும்

நல்லாட்சி மலர்ந்திருக்கிறதாக சொல்லிக் கொள்ளும் வேளையில் பாடசாலை மாணவியொருத்தி கூட்டு வன்புணர்வின் மூலம் கேவலமாகக் கொல்லப்பட்டிருக்கிறாள். இது அவசரத்தில், ஆத்திரத்தில், எதிர்பாராதவிதமாக நடந்ததொன்றல்ல. திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட படுகொலை. ஆகவே சட்டத்தில் ஓட்டையிருந்தாலும் தண்டனை நிச்சயம் என்பது அண்மைக்கால சம்பவங்களால் உறுதிப்படுத்தப்படுகிறது.

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் சம்பவத்தைவிட கொடூரமான முறையில் வித்தியா கொல்லப்பட்டிருக்கிறாள். கசக்கிப் பிழிந்து சாகடிக்கப்படும் போது அந்த அப்பாவி ஜீவன் என்ன பாடு பட்டிருக்கும்...? எத்தனையாயிரம் கடவுளைக் கூப்பிட்டிருக்கும்..? அதனால்த்தான்.. மாணவ மாணவிகள் உட்பட மனிதாபிமானம் உள்ள அனைவரும் இன, மத, சாதி, சமய வேறுபாடின்றி நீதி கேட்டு தெருவுக்கு வந்திருக்கிறார்கள்.

 பணமும், அதிகார, அரசியல் வர்க்கமும் குற்றவாளிகளை காப்பற்றக்கூடாது என்பதில் மக்கள் திடமாக இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டமும் ஆர்ப்பரிப்பும் கதவடைப்புக்களையும் கண்டனங்களையும் செய்கின்றனர்.
செத்தவளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும்.. இருப்பவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் இப் போராட்டங்களின் வடிவம் மாற்றப்பட்டு செத்தவளுக்கான நீதி நீத்துப்போகாமலும்.. இளங்கன்றுகள் பயமறியாது செய்யும் சில வேலைகளால் அவர்களுக்கு பிரச்சனையேதும் ஏற்படக்கூடாது என்பதும்.. இருக்கின்ற சமுதாய ஒற்றுமை சிதையக்கூடாதென்பதும் இப்போதைய கருத்துக்களின் பாடுபொருளாகும்.

ஒரு மக்கள் சமூகத்தில் அநீதி இழைக்கப்பட்டால் அம்மக்கள் நீதிக்காக போராடுவதும் கண்டனங்களை வெளிப்படுத்துவதும் அம் மக்களது அடிப்படை மனித உரிமையாகும். ஆனால் அதுவே வன்முறை வடிவங்கொண்டு அரச, அரச சார்பற்ற நடவடிக்கைகளை குழப்பி பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடியவாறு அமைந்தால் மேலதிக பொலீஸார் வரவழைக்கப்படுவதும், அதிரடிப்படையினர் அழைக்கப்படுவதும் உண்டு ( இது இன்று நேற்றல்ல. இங்கு மட்டுமல்ல) போராட்டத்தை கட்டுப்படுத்த அதிகார வர்க்கம் முனைந்தால் மக்கள் அவர்கள் மீது ஆத்திரம் கொண்டு தாக்கினால் பதிலுக்கு அதிகாரம் மக்கள் மீது திணிக்கப்படும். இது மெல்ல மெல்ல வடிவம் மாறி.. மேல் வெடி என்றும் கால் வெடி என்றும் போகலாம். அதுவே குறி தப்பினால் கழுத்தோடும் போகலாம். ஆகவே ஒரு உயிர்க் கொலையை கண்டித்து நடாத்தப்பட்ட மக்கள் போராட்டம் பல உயிர்களை காவு கொள்ளலாம். சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு அப்பாவி மக்கள் ஏராளமாக பாதிக்கப்படலாம். கடந்த காலத்தடங்களும் தடையங்களும் நமக்குத் தெரியாததல்ல.

வடக்கைமையப்படுத்திய போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள இவ்வேளையில் பல்வேறு வாசகங்கள் காணப்படுகின்றன. பல மாணவர்கள் மிகத் துணிவுடன் ஆக்ரோசமாகக் குரல் கொடுக்கிறார்கள். அனைத்து ஊடகங்களுக்கும் முகம் கொடுக்கிறார்கள். ஆரசியல் அப்பழுக்கற்ற வார்த்ததைகளால் அடி மனதினை நெகிழச்செய்கின்றார்கள்.

இவ்வேளையில்... சில தீய சக்திகள் நாசகார வேலையில் ஈடுபடுவதாகவும் கதைகள் உலாவுகின்றன. பாதுகாப்புத்தரப்பை சீண்டிவிடுவதாகவும்.. பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அதனால் இள இரத்தங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் ஒன்றில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க மாணவன் கையில் '' அவர்கள் இருந்தால் இப்படி நடக்குமா..?'' எனும்பொருள்பட சுலோகம் காணப்பட்டது. இவனுக்கு 10 வயதிருக்கும் போதே அவர்களது செயற்பாடு முடக்கப்பட்டது. கடந்த கால தண்டனைகளை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அப்போதைய தண்டனைகளை மறக்க மாட்டார்கள்தான். அதற்காக இப்படியொரு வாசகம் இவனது கையில்..??? சில வருடத்திற்கு முன்னர் யாழில் நடந்த இப்பேற்பட்ட பல போராட்டங்களால் பின்னர் எத்தனை பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள்..? இது தொடர்பாக முகநூல் அன்பர்கள் காத்திரமாக எழுதியிருந்தார்கள்.

குற்றவாளிகளை மக்கள் மத்தியில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். அதற்காக மக்கள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது எந்தளவு பொருத்தம் எனத் தெரியவில்ல்லை. மக்கள் கட்டமைப்பில் சட்டம் நீதி ஒழுங்கு என்று உள்ளது. சட்டம் கூட தனது வரப்பை மீறி எதையும் செய்ய முடியாது. ஆகவே சட்டத்தின் பிடியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைவாக வழங்கக் கோருவதே நியாயமானது. அதற்காக நாம் எமது அழுத்தத்தை கொடுப்பதும் மக்கள் ஒன்று சேர அமைதியாக எதிர்ப்பை வெளியிடுவதுமே இன்றய தேவையாகும். மாறாக வன்முறையல்ல.
( வே.முல்லைத்தீபன்)