மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் பொதுமக்கள் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலை நிகழ்வைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னாலும், காத்தான்குடி உள் வீதிகளிலும் தமிழ் முஸ்லிம் பொதுமக்கள் ஒன்று திரண்டு இந்த கவன ஈர்ப்பு பேரணியில் பங்கெடுத்தனர்.
பெண்களின் அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்ஸா அமீர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றினர்.
 'சாதிக்கப்ப பிறந்த பெண்ணை சோதித்தவர்களை சும்மா விடாதே, மாணவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் மிதித்து விடாதே, அன்று சீமா இன்று வித்தியா, நாளை யாரோ? சட்டமே நீ தூங்கி விடாதே, சிறுவர் துஷ்பிரயோகத்தை உடன் நிறுத்து, பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டமூலத்தை வலுப்படுத்து' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் பொதுமக்கள் ஏந்தியிருந்தனர்.