கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்முறை எதற்கு?

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலையும் அதனைத் தொடர்ந்ததான எதிர்ப்புக்கள் மற்றும் வன்முறைகளும் யாழ். குடா நாட்டை உறைய வைத்துள்ளன.

பாட சாலைக்குச் சென்ற மாணவி காட்டுமிராண்டி கும்பலால் படுபயங்கரமான முறையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதி உச்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நிச்சயமாக எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

இச்சம்பவத்தைக் கண்டிப்பதுடன் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நிச்சயமாக மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். பாடசாலைகள் சமூகம், கல்விசார் அமைப்புக்கள், பொது அமைப் புக்கள் என்பன தொடர்ச்சியான தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றன.

யாழ். குடாநாட்டில் கடந்த சில நாட் களாக கடைகள் பூட்டப்பட்டு அல்லது பூட்டுவிக்கப்பட்டு கண்டனம் வெளியிடப் படுகின்றது. மிலேச்சத்தனமான வல்லுறவு மற்றும் படுகொலைச் சம்பவத்துக்கு எதிராக மக்கள் கொதித்து எழுவது என்பது மனித இயல்பு. இருந்தபோதும் எதிர்ப்பு வெளிக்காட்டப்படும் முறையானது யாழ். குடாநாட்டில் மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த அடக்குமுறைகளை மீண்டும் அவர்கள் மீது சுமத்துவதற் கானதொரு படிக்கல்லாக அமைந்துவிடக் கூடாது.

வித்யா படுகொலையுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது ஆத்திரமடைந்த மக்கள் அவர்களை நையப்புடைத்துவிட்டனர். பாடசாலை மாணவி ஒருவரை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்கள் மீது யாருக்குத்தான் கோபம் வராது?

எனினும் பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுப்பது சரியா என்றதொரு கேள்வி இங்கே எழுகிறது. கைது செய்யப்படும் நபர்கள் ஒரு சில வருடங்களில் சுதந்திரமாக வெளியில் வந்துவிடுவதற்கு சட்டத்தில் இடமுண்டு என்ற மக்களின் அங்கலாய்ப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், நாட்டில் நடைமுறையில் உள்ள ஒழுங்கு என்ற விடயத்தையும் மதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.


படுகொலைக்கு எதிராக இடம்பெறும் கண்டன செயற்பாடுகளையும் இதன் அடிப்படையிலேயே பார்க்க வேண்டியுள்ளது. யாழ். குடாநாட்டில் உள்ள பல கடைகள் சில இளைஞர் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டு பூட்டப்பட்டுள்ளன.

இதற்கும் ஒரு படி மேல் சென்று குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த சமயம் குற்றவாளிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி நீதிமன்றத்தை முற்றுகையிட்டவர்கள் பொலிஸார் மீதும் நீதிமன்றக் கட்டடத்தின் மீதும் கல்வீச்சுக்களை நடத்தியிருப்பது நிலைமையை மோச மடையச் செய்துள்ளது.

வித்தியாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடந்துகொண்டவிதம் மற்றும் அவர்கள் காட்டிய அசமந்தப் போக்கு என்பன மக்களை மேலும் கொதிப்படையச் செய்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனினும் பொலிஸார் மீதும் நீதித்துறையான நீதிமன்றத்தின் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு நடந்துகொள்வதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியுமா?

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் யாழ். குடாநாட்டின் பாதுகாப்புக் கெடுபிடிகள் கணிசமானளவு குறைந்து ஓரளவேனும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை எவரும் முற்றாக மறுத்துவிட முடியாது.

கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகவோ அல்லது பொதுவாகவோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தபோது அந்த விடயம் எவ்வாறு கையாளப்பட்டது என்பது புரியாததல்ல. இதன் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் மக்கள் பேரணிகளை நடத்துவதற்கும் புதிய அரசாங்கத்தின் காலத்தில் சிறிதளவேனும் இடம் கிடைத்துள்ளது.

புங்குடுதீவு படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கையில் பொலிஸாரின் செயற்பாடுகள் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்திருந்தாலும் கலவரங்களை நடத்தி தாம் செய்வது சரியென நியாயப்படுத்திவிட முடியாது. ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பொலிஸார் வழங்கியிருந்த சுதந்திரம் கட்டுமீறிப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே நீதிமன்றம் மற்றும் பொலிஸார் மீதான தாக்குதல்களைப் பார்க்கும் போது கருத முடிகிறது. நிலைமையை கட்டுப்படுத்து வதற்கு பொலிஸார் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட பின்னரே இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இருந்த நிலைமை யைவிட முற்றாக வித்தியாசமானதொரு நிலைமையே காணப்படுகிறது. முன்னர் இராணுவத்தினரை சம்பவ இடத்திற்கு இறக்கி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதே கடந்த அரசாங்கம் கையாண்ட உத்தி. எனினும், புதிய அரசாங்கம் பொலிஸாரை அதியுச்சளவில் பயன்படுத்த முயற்சித்திருப்பதை பலவீனமாக நினைத்து கட்டுமீறிச் செல்வது பொருத்தமானதாக இருக்காது.

அதேநேரம், பொதுத் தேர்தலொன்று நெருங்கிவரும் நிலையில் படுகொலையின் பின்னரான எதிர்ப்பு நடவடிக்கைகளை எப்படி தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அரசியல்வாதிகள் கழுகுகள் போன்று பார்த்துக்கொண்டி ருப்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நிலைமை மோசமடைவதற்கு சில அரசியல் பின்னணிகளும் உண்டு என்பது நிகழ்ந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகின்றது. மக்களின் வாக்குகளை இலக்குவைத்து குடாநாட்டில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் நிலைமையை ஊதிப்பெருப்பிக்கப் பார்க்கிறார்களோ என்ற கண்ணோட்டத்திலும் இதனை நோக்க வேண்டியுள்ளது.

தமிழ் அரசியல் தரப்புக்கள் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்துவரும் பரஸ்பர குற்றச்சாட்டு அரசியலைத் தொடர்ந்துவரும் நிலையில் தென்பகுதி இனவாத அரசியல் தரப்புக்கள் இதற்கு இனச்சாயம் பூசுவதற்கும் முயற்சித்துள்ளன. அப்பாவி மாணவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்துக்கொண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையா கவோ அல்லது நல்லாட்சிக்கு கேடுவிளை விக்கப்பட்டுவிட்டது என்றோ அர்த்தப்படுத்தி தமது அரசியல் தேவைகளை பூர்த்திசெய்யும் அரசியல் நோக்கம் கைவிடப்படவேண்டும்.

நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது, நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷமிகள் யாழ். குடாநாட்டில் மீண்டும் ஒரு குழப்பம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது என்பதைக் காண்பிப்பதற்கு மக்களை உசுப்பிவிடுகிறார்கள் என்ற ஐயப்பாடு காணப்படுகிறது. கடந்த தேர்தலில் நல்லாட்சிக்காக பாடுபடாத சிலர் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதேநேரம், நீண்டகாலத்தின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டோம். இனி எல்லாம் எம் கையில்தான் என்பதைக் காண்பிப்பதற்கு மற்றுமொரு சாரார் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

மற்றுமொரு பிரதான தமிழ் அரசியல் கட்சி குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறது என்ற அரசியல் பின்னணியுடனான குற்றச்சாட்டுக்களும் பரவலாக முன்வைக்கப் படுகின்றன.

அதேநேரம், யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களவர்களை இலக்குவைத்து குறிப்பாக பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் புதியதொரு பூகம்பத்தைக் கிளப்பிவிட்டு ள்ளது.

தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்று இவ்வாறு தமது அரசியல் நோக்கங்களுக்காக இந்தப் படுகொலையைப் பயன்படுத்தாது நிலைமையை மோசமடையச் செய்யாது, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையைப் பெற்றுக் கொடுக்க சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதே அசியமாகியுள்ளது.