மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் B பிரிவு இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஸ்தம்பித்திருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலாந் திகதியிலிருந்து சங்கத்தின் நிருவாகத்தினைப் பொறுப்பேற்ற புதிய நிருவாகக் குழுவினரின் நடவடிக்கைகள் காரணமாக 2015 ஆம் ஆண்டிற்கான B பிரிவு அணிகளுக்கிடையிலான தகுதிகாண் போட்டிகள் நடத்தப்பட்டு இதன் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளன.


கடந்த இரு மாதங்களாக இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் மைதானத்தில் தொடரப்பட்ட இப்போட்டிகளின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 21.06.2015 ஆந் திகதி மாலை இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் மைதானத்தில் தலைவர் எஸ்.உதயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விறுதிப் போட்டி நிகழ்ச்சிக்கு இலங்கை கால்பந்தாட்டச் சங்கத்தின் உப தலைவரும், பிராந்திய கால்பந்தாட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் இயங்கும் திரு.எஸ்.அன்ரனிப்பிள்ளை அவர்கள் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு அதிதியாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களும், கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வே.ஈஸ்பரன் அவர்களும், முன்னாள் கால்பந்தாட்டச் சங்கத் தலைவர் திரு.என்.ரி.பாறுக் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இவ்விறுதிப் போட்டியில் மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழகத்தின் அணியும் புன்னைச்சோலை கோப்றா விளையாட்டுக் கழகத்தின் அணியும் பங்குபற்றியிருந்தன. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 1:1 எனும் சம நிலையில் போட்டியை நிறைவு செய்தமையால் தண்டனை உதைப் போட்டி மூலமாக வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

 இதன்படி போப்றா அணியினர் வெற்றிபெற்று 2015 ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் B பிரிவு சம்பியன் அணியாக வெற்றி வாகை சூடிக் கொண்டது. இதன் மூலம் 2016 ஆம் ஆண்டில் கோப்றா விளையாட்டுக் கழகம் A பிரிவில் விளையாடும் தகுதியினைப் பெற்றுக் கொண்டது.

மட்டக்களப்பின் வரலாற்றில் இலங்கை கால்பந்தாட்டச் சங்கத்தின் உப தலைவர் ஒருவர் பங்குபற்றி வீரர்களின் திறனை நேரில் பார்வையிட்டு பரிசு வழங்கிய நிகழ்ச்சியாக இது அமைந்தததுடன். இவ்விழா குறித்த சிறப்பு வெளியீடு ஒன்றினையும் மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தினர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.