சமுதாய உருவாக்க விழாவாக அமைந்த முனைக்காட்டு கூத்தரங்கேற்ற விழா

அதி நவீன காலத்தில் உலகமயமாக்கலின் முதலாலித்துவ உற்பத்தியில் மூழ்கி நுகர்வுகளாக்கப்பட்டு உயிரற்ற மானிடராகவே  நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  எம்மைச் சுற்றிய அனைத்துச் செயற்பாடுகளும் காலனிய அதிகார ஆதிக்கத்தை வலுப்பெற வைப்பதாகவே நடைபெறுகின்றன. இது சமூக பண்பாட்டு பாரம்பரிய பெருமிதங்களில் தாக்கம் செலுத்துகின்றது. இதனால் எமது பாரம்பரியம் எதுவெனத் தெரியாது திண்டாடும் நிலைமையே நிலவுகின்றது.

அதிகார ஆதிக்கத்திற்குட்பட்ட எம்மவர்களில் சிலர் இதனை மேலும் பரவலாக்கினர். பணத்தினைத் தேடியலையும் நோக்குடன் தனியன்களாக்கப்பட்டு, மனிதரை மனிதர் பார்க்காது வாழ்கின்ற நிலைப்பாடே இன்றுமுள்ளது. இந்த இடத்திலே சமுதாய இணைவும் ஒன்று கூடலும் தேவையாகின்றது. இதனை எமது முன்னோர் கண்டு பிடித்த பாரம்பரிய நிகழ்வுகள்; அறிவு, திறன், செயற்பாடுகள்; சூழல் சார் விடயங்கள்; நிகழ்த்துகைகள் என்பவற்றில் நிறைந்திருப்பதைக் காணலாம். இவை  வாழ்தலுக்கான அனைத்து விடயங்களையும் தன்னகத்தே கொண்டவை. இவை சமுதாயத்தை இயல்பிலே இணைக்க வல்லது. சமகாலத்தில் இவ்வாறான செயற்பாட்டைத் தரவல்ல கூத்தரங்க விழாக்கள் மட்டக்களப்பின் பல ஊர்களிலும் பரவலாக நடைபெறுகின்றன. இதுவே யதார்த்த இயங்கு தளமாகும்.

இதன் ஒரு வெளிப்பாடே 23.06.2015 அன்று முனைக்காட்டில் நாக சக்திக்கலை மன்றத்தினரால் பழகி அரங்கேற்றப்பட்ட “நச்சிப்பொய்கை” வடமோடிக் கூத்தாகும். இது அவ்வூர் மக்களும் அயல் கிராமத்தவரும் ஒன்றிணைய நடைபெற்றது. சிறுவர்கள், சிறுமியர்கள், பெண்கள், ஆண்கள், வயது முதிந்தோர், குழந்தைகள், யுவதிகள், இளைஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் எனப்பலரும் இணைந்து, கூத்தைப் பார்த்து பங்கு கொண்டு மகிழ்ந்தமை சிறப்பம்சமாகும். இவ்விழா சமுதாயத்தோடு இணைந்த அனைத்து விடயங்களையும் உருவாக்கியுள்ளது.

இக்கூத்திற்கான அண்ணாவியாராக பரமக்குட்டி கதிர்காமநாதன் அவர்களும் உதவி அண்ணாவியாராக உதயகுமார் அவர்களும் செயற்பட்டனர். சபையோராக கலாமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டனர். நவீன விழாக்களுக்காகக் கட்டமைக்கப்பட்ட அரங்கக் கட்டமைப்பிலேர திறந்தவெளி ஆற்றுகைக்காகக் கட்டமைக்கப்பட்ட அரங்கிலோ இது நிகழ்த்தப்படவில்லை. வட்டக் களரியிலே நடைபெற்றது.

உழைத்துக் களைத்த மக்கள் நிம்மதியாக ஆலயமுன்றலில் இருந்து கூத்தைப் பார்த்து அனுபவித்து கொண்டாடி மகிழ்ந்ததோடு, அந்த வெளியில் உள்ள மணலில் தமது வசதிக்கேற்ப இருந்தும் சற்றுச் சாய்தும் காலை நீட்டிக் கொண்டும் குழுவாக இருந்து கொண்டும் தொட்டம் தொட்டமாக நின்று கொண்டும் பார்த்து அனுபவித்ததைக் காண முடிந்தது. பண்டிகைகளுக்கு உடை அணிந்து செல்வதைப்போலும் சாதாரண உடையிலும் சிறுவர்கள் பிரத்தியேக வகுப்புக்களின் சுமையில் இருந்து விடுவிக்கும் களமாக இவ்விழாவைப் பயன்படுத்திக் கொண்டனர். தமக்கு வசதியான இடத்தில் தமது சக நண்பர்களுடனும் பெற்றோருடனும் இருந்து பார்த்து தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் அதிகமாக தமது பெற்றோருடன் இருக்காது, நண்பர்களுடனே கூட்டமாக இருந்தமை புலனாகியது. சுயமாகச் செயற்படுவதற்கான தளமாகவும் இது அமைந்திருந்தது. ஆடுபவர்களின் ஆட்டம், பாட்டு, உடை ஒப்பனை, கதையமைப்பு, அண்ணாவியார் என்பன பற்றித் தமது சகபாடிகளுடன் உரையாடிக் கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கூத்தரங்க வெளி இதற்கான இடத்தைக் கொடுத்தமை அறிதலுக்குரியது. பாடசாலையில் கூத்துப் பற்றிக் கற்பிக்கும் போது  படச்சட்டமேடையில் ஆடப்படுவதே கூத்து என கட்டமைத்தவற்றை கட்டவிழ்த்துப் பார்கும் சூழலையும் இது கொடுத்தது.

மூத்தவர்கள் இக்கூத்தின் கதை தெரியாதவர்களுக்கு கதையினை கூறி விபரித்துக் கொண்டிருந்ததோடு, அதில் ஆடும்
இளம் கூத்தர் பற்றியும் அறிமுகப்படுத்தினர். கூத்து நடந்து கொண்டிருக்கும்போது, ஒருவர் மற்றவரிடம் அதில் வரும் கதையின் ஒரு பகுதியைப் பற்றிப் பின்வருமாறு பேசிக் கொண்டிருந்தார். “சைந்தவன் தனது தங்கையைக் கொண்டு சென்றதற்காக கோபம் கொண்ட வீமன் மொட்டை அடித்து, அவனை அவமானப்படுத்த கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி காட்டுக் கழுதையில் ஏற்றி விடுவான் பாருங்க” என்றதும் கூத்தர் அந்த நேரத்தில் குறித்த பாடலைப் பாட அவ்வாறு பேசிய நபர் “பாத்தயா நான் சொன்னே அதே மாதிரித்தான் நடக்கப்போகுது பார்” என உணர்வுடன்; மகிழ்வுடன்; தானே முதலில் சொன்னேன் எனும் ஓர்மையுடன்; மிக சத்தத்துடன் வெளிப்படுத்தினார். கூத்தரங்க வெளி இவ்வாறு கதை கூறும் கெட்டித்தனத்தைக் காட்டக் கூடியதாக இருந்தது.

வயது முதிந்த பெண்கள் “நல்லா ஆட்டம் வருகுது, பாட்டுச் சத்தம் வருதில்ல” என்றும் “சைந்தவனுக்கு ஆடுபவர் அரசாங்க உத்தியோகத்தர்” என்றும் உரையாடிக் கொண்டிருந்தனர்.இன்றைய நவீன ஊடகங்களைப் பயன்படுத்தி ஒலி ஒளிப் பதிவுகளைச் சிலர் செய்து கொண்டிருந்தனர். வீடியோக் கமராவிலும் கையடக்கத் தொலைபேசியிலும் கூத்தாட்ட முறைகளைப் பதிவு செய்து வெளிநாட்டில் இருக்கும் உறவினர் நண்பர்களுக்கு முக நூலினூடாகவும் வைவறினூடாகவும் உடனுக்குடன்
பதிவேற்றம் செய்துகொண்டிருந்தனர்.

அத்தோடு, பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு நோக்கம் கருதி ஆராய்சியை மேற்கொண்டு வரும் இளங்கலைமாணி, முதுதத்துவமாணி ஆராய்சியாளர்கள் தமது ஆராய்சியின் ஒரு பகுதியை நிறைவு செய்யும் பொருட்டு இவ்விடத்தில் சங்கமமாகியிருந்தனர். இது வெவ்வேறு கோணங்களில் ஆராய்வதற்குத் தங்களது கற்றல் - கற்பித்தலுக்கான வெளியைக் கொடுத்தது. கூத்தரங்கின் கற்றல் சூழலில் இரண்டு விடயம் முக்கியமாகத் தென்பட்டது. ஒன்று, பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் தமது கற்றல் மற்றும் ஆராய்சியை மேற்கொள்ளும் இடமாகக் காணப்பட்டமை. மற்றயது, கூத்தரங்கில் நிலவும் தொடர் செயற்பாடுகளில் அவ்வூர் மக்களுக்கும் கூத்தர்களும் கற்றலுக்குரிய  திறந்த வெளிக் கல்விக் கூடமாக இருந்தமை. இதனாலேயே கலாநிதி சி.ஜெயசங்கர் “கூத்தரங்கு திறந்த பல்கலைக்கழகமாக உள்ளது” என்கின்றார்.


இது தனியான உரையாடலுக்கும் ஆராய்சிக்குமுடையது. கூத்தரங்கில் உள்ள ஆடுகள வெளியான களரி அமைப்பும் தோரண வாசலும் பிரமாண்டமாக இருந்தது. தமிழர் தம்கட்டிடத் தொழிநுட்பத்தினையும் அலங்கார வேலைப்பாட்டினையும் இளம் தலைமுறையினருக்குக் கையளிக்கும் தோரணையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. களரி தமிழர் பண்பாட்டு சமூக அடையாளமாகும். இது மாதிரியான அரங்க அமைப்பு வேறு எந்த அரங்கப் பாரம்பரியத்திலும் இல்லை. இதன் அழகு,கவர்ந்திழுக்கும் தன்மை பார்ப்போருக்கு இதமானதாகக் காணப்பட்டது. அரங்கேற்ற விழாவிற்கு “இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியுண்டு” என்பதை உணர்தியது. ஏனெனில், கூத்தை அதன் இயங்கியல் வெளில் இருந்து பிரித்து அடைக்கப்பட்ட மண்டபத்திற்குள் கொண்டு செல்லும் கைங்கரியத்தில் இது விடுபடுக்கின்றது. அத்தோடு, இதில் தனிநபரை மட்டுமே அடையாளப்படுத்திக் காட்டுவதாகவும் உள்ளது.

அரங்கேற்ற விழாவில் வழமைபோல் பாத்திர வரவின் தொடக்கத்தில் பட்டாசு வெடி கொழுத்துதல்; திரை பிடித்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. கூத்தரால் அழைப்பிதழ் வழங்கி அழைக்கப்பட்ட அனைவராலும் அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்து கொண்டாடுதலும் நிலவியது. உறவினர்களும்; நண்பர்களும் கூத்தருக்குக் காசு மாலை அணிவித்து, காசுடனான கையுறை கொடுத்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்தி உறவின் பிணைப்பை வலுப்படுத்தினர். சிறுவர்கள், பெண்கள், யுவதிகள், முதியோர், ஆண்கள், இளைஞர்கள் எனப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அணியில் திரண்டனர். “அன்பளிப்பு கூத்தரை ஆட உந்துதலைக் கொடுத்ததோடு, மகிழ்வாக ஆடுவதற்கான ஊக்கத்தையும் கொடுத்தது.” அதேவேளை, “சமுதாயத்தினரும் தமது வாழ்த்துக்களை (கடப்பாட்டடை) வெளிப்படுத்துவதற்கான இடமாகவும்” அமைந்தது. கூத்தரங்கு பற்றி கலாநிதிப் பட்ட ஆய்வில் “இயைஞர்களுக்குக் கூத்துப் பற்றியும் கூத்துக் களரியும் பற்றித் தெரியாது. அவர்கள் கூத்துக்களரிப் பக்கமே வருகிறார்கள் இல்லை” எனும் பொய்யான கூற்றை இவ்விழா நிராகரித்தது. இவ்வாறு குறிப்பிடும் ஆய்வாளர் கூத்துப் பற்றியும் கூத்தர்கள் பற்றியும் அதன் விழாக்கள் பற்றியும் நேரடித் தொடர்பில்லாதவர் போல் தெரிகின்றது. அவ்வாறு தெரிந்திருந்தால் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவித்திருக்கமாட்டார்.

அண்ணாவியாரின் மத்தள அடியின் ஆழம் ஊர் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தது. மத்தளத்தை இடுப்பில் கட்டி விடிய விடிய தனது விரலின் பயன்படுத்துகையைக் கொண்டு ஒவ்வொரு மெட்டுக்கும் மாறி மாறி அடித்தமை அண்ணாவியாரின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியது. இது கூத்தரின் ஆடல், பாடலுடன் பார்ப்போரை கூத்தரங்கில் உள்ளீர்ப்பதாகவும், தூரப்படுத்தலைத் தருவதாகவும் (உணர்வு ரீதியான ஒன்றிணைப்பைக் குறைப்பதாகவும்) சிந்திக்கத் தூண்டுவதாகவும் தொழிற்பட்டது.

கூத்தர் தமது வரவில் ஆடுதலும் இராகத்தோடு பாடுதலுமானது பார்ப்போரின் கவனக் குவிப்பை உள்நுழைய வைத்து உணர்வு மயக்க நிலையை ஏற்படுத்தியது. பின்னர் அதே கனத்தில் கூத்தருக்கான தளக்கட்டுக்களில் மாற்றம் வரும்போது அல்லது ஆட்டமுறையில் திருப்பம் வரும் போது அல்லது பாட்டு மெட்டுக்களை மாற்றும் போது உணர்வு ரீதியான தூரப்படுத்தல் வரும். இது ஆற்றுகையின் போது வரும் அந்நியப்படுத்தலாகும்.

அவ்வாறே கூத்து நடந்து கொண்டிருக்கும் போது கூத்தருக்குத் தண்ணீர் கொடுப்பது; மல்லித் தண்ணீர் குடிப்பது; அடுத்த பாத்திரத்தின் வரவு தாமதமாகுவது என்பவற்றிலும் இந்த நிலை வரும். கூத்தர்களின் உடை ஒப்பனை புதிதாக வடிவமைக்கப்பட்டதையும் அறியமுடிந்தது. பளபளப்பாகவும் வர்ணப்பயன்பாடு அதிகமாகவும் இருந்தது. உடுப்புக் கட்டுபவர் இளம் கலைஞராகக் காணப்பட்டார். கூத்தரங்கில் சுய முயற்சியாக ஓரு மேஸ்த்திரியார் உருவானமை சிறப்பம்சமாகும். இது கூத்தரங்கில் இயல்பாக நடைபெறும். இதனையெல்லாம் தடை செய்வதாகவே கூத்தரங்கினை நவீன அதிகார அறிவுப் பார்வையில் ஆய்வு செய்தவர்களின் ஆய்வுகள் கூத்தரங்கில் சில முக்கிய காட்சிகளை வலுப்படுத்துவதற்காக காடசிப் பொருளைப் பயன்படுத்துவது வழக்கமாகும்.

கொலுக்குத்தி, கிளிக்கூடு, எருது, யானை, கப்பல் என்பன கூத்தின் கதைக்கேற்ப பயன்படுத்தப்படும். 2013 இல் கரவெட்டியில் அரங்கேற்றப்பட்ட “பூதத்தம்பி விலாசம்” கூத்தில் யானை உருவம் பார்ப்போர்க்குள் இருந்து களரிக்குள் வந்தது. அவ்வாறே கப்பலில் யாழ்ப்பாணம் இருந்து கொழும்புக்குச் செல்லும் காட்சியைக் காட்ட (கொண்டுவர) கப்பல் ஒன்று தயாரித்து கப்பலில் செல்லும் காட்சிபோல் செய்துகாட்டினர். வட்டக் களரியில் கப்பலுக்குள் நின்று ஆடுவதுபோல் காணப்பட்டது.

நச்சிப்பொய்கை கூத்திலும் சைந்தவனை மொட்டையடித்து அவமானப்படுத்தி அனுப்பும் கட்சியை மேலும் வலுப்படுத்த காட்டுக்கழுதை ஒன்றைச் செய்து அதனைச் சைந்தவனின் தோளில் தொங்கவிட்டு அதில் நடப்பதுபோல் செய்து காட்டப்பட்டது. இது சைந்தவனின் மரியாதையைக் குறைக்கும்  நிலைப்பாட்டை சித்திரித்தது. அத்தோடு, சிவபெருமானின் கழுத்தில் பாம்பும் தலையில் பிறையும் கட்டப்பட்டதோடு, வெள்ளைப் பசுவில் வருவது போன்றும் சித்திரிக்கப்பட்டது. இவ்வாறான காட்சிப்படுத்தலானது கதையின் முக்கிய சம்பவத்தை மேலும் விபரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறு அரங்கேற்ற விழா பல்வகைமை அம்சங்களையும் ஒன்றிணைக்கும் வெளியைத்தந்தது. சமுதாய ஒன்று கூடுதல் சமகாலத்தில் அவசியம். தனிமையாக்கப்பட்ட உலகமயமாகற் சூழலில் உள்ள மனிதரை ஒன்றுசேர்த்து தமக்குள் ஊடாட்டத்தைக் கொடுக்கவல்ல ஒன்றாக பாரம்பரிய விழாக்கள் உதவுகின்றன என்பது நிரூபனமாக்கியது. பாரம்பரியக் கலைகளின் சமூக பண்பாட்டுப் பெருமியங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. இதனை அச்சமூகமும் அறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரை வட்டவடிவக் காட்சிக் கூடம் அமைத்து உடுக்கை, மத்தளம், பறை ஆகிய பாரம்பரிய வாத்தியக் கருவிகளையும் கலப்பை, மரைக்கால் முதலான நெற்செய்கைக்கான பொருட்களையும் வைத்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவை அக்கலைமன்றத்தின் காத்திரமான எண்ணப்பாட்டைத் தந்தது.

பாரம்பாரியத்தின் இயல்பு நிலையின் சிதைவு இங்கில்லை. இது தமது கிராமத்து சடங்குடன் நிகழ்த்தப்பட்டது. சடங்கு சம்பிரதாயங்களுடன் இணைந்து தமது தேவை; சமுதாய நிலைக்கேற்ப தாமாக ஒன்று கூடி பங்கேற்று தமது ஆற்றல்களைக் கொண்டாடும் வெளியாக அமைந்தது.

திரு சு.சந்திரகுமார், 
விரிவுரையாளர், 
நுண்கலைத்துறை, 
கிழக்குப்பல்கலைக்கழகம்.