இன்புளுவென்சா வைரசுத் தாக்கமும் கர்ப்பவதிகளுக்கான பாதுகாப்பும்

கடந்த சில மாதங்களாக சளிச்சுரத்தினை ஏற்படுத்துகின்ற நுண்ணுயிர்களில் ஒன்றான இன்புளுவென்சா வைரசுவின் தாக்கம் இலங்கையில் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. குறிப்பாக எச்1 என்1(H1N1) எனும் வைரசுத்தாக்கம் பற்றிய அச்சம் மிகவும் அதிகமாக மக்களிடையேயும், சுகாதாரப் பணியாளரிடையேயும் காணப்படுகின்றது. இதன் காரணம் எச்1 என்1 வைரசுத் தாக்கம் நோயின் பாரதூரமான தன்மையை அதிகரித்து நோயாளருக்குப் பாதிப்பையும் மரணத்தையும் ஏற்படுத்துவதனாலாகும்.
குறிப்பாக கர்ப்பவதிகளிலும், அண்மையில் குழந்தை பெற்றவர்களிலும் மரணத்தை ஏற்படுத்துமளவிற்குப் பாரதூரமான நோயினை இவ்வைரசு ஏற்படுத்துவதன் காரணத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரையில் 9 தாய் மரணங்கள் இருமாதங்களில் ஏற்பட்டிருக்கின்றது. மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் இத்தாய்மாரின் மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இன்புளுவென்சா வைரசுத்தொற்று அதனது தாக்கங்கள், மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு சுகாதார வழங்குநர்களான பொதுச் சுகாதாரத்திற்குப் பொறுப்பான வைத்தியர்கள், வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் கடமை வைத்திய நிபுணர்கள் தாதிய பரிபாலர்கள் உள்ளிட்டோருக்கான கருத்தரங்கை அண்மையில் நடாத்தியதுடன் அரச மற்றும் தனியார் சுகாதார வழங்குநர்களுக்கானதும் குறிப்பாக கர்ப்பவதிகளுக்குமான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அவற்றிலிருந்து முக்கிய பகுதிகள் தரப்படுகின்றன. விசேடமாக பொதுமக்களின் கவனத்திற்காக இவை தரப்படுகின்றன.
இன்புளுவென்சா தொற்றுக்கு எதிரான பாதுகாப்புகர்ப்பவதிகளும், கருவுறும் நிலையில் உள்ள பெண்களும் பாலூட்டும் தாய்மாரும் பின்வரும் விடயங்களில் தங்கள் அவதானத்தை செலுத்தவும்.


கர்ப்பம் உண்டானதன் காரணமாக பெண்ணின் உடலின் பல தொகுதிகளிலும் ஏற்படுகின்ற உடற்தொழிற்பாட்டின் மாற்றங்களில் ஒன்று பிறபொருள் எதிர்ப்புச் சக்தியில் ஏற்படும் குறைவு ஆகும். கருவில் உருவான சிசு, ஒருவகையில் தாயின் நிர்ப்பீடனத்திற்கு பிறபொருள் ஆகையால் கரு கலைபடாமல் இருப்பதற்கான ஏதுநிலையே இதுவாகும். ஆயினும் இதனால் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுடன் பிறபொருட்களான நுண்ணுயிர்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்புளுவென்சா வைரசின் தொற்று இவர்களில் இலகுவில் ஏற்படவும்,பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தவும் காரணமாகின்றது.


எனவே தாய்மையடைந்த மற்றும் தாய்மை அடையக்கூடிய பெண்கள் வைரசுத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க பின்வரும் அவதானங்களை எடுக்கவும்.


•    அநாவசியப் பிரயாணங்களைத் தவிர்க்கவும்.


•    சனநடமாட்டம் அதிகமான இடங்கள், பொதுப் போக்குவரத்து 

     போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.

•    இருமல், சளிக்குணங்கள் உள்ளவர்கள் மூக்கு, வாய் பகுதிகளை 

     மூடக்கூடிய முகமூடியினை அல்லது துணித்துண்டினை அணிதல் 
     வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் வாயை மற்றும் மூக்கினை 
     முடிக்கொள்க. கைக்குட்டை பாவிப்பது உகந்தது.

•    புதிதாகக் குழந்தை பெற்ற தாய்மார் தனது குழந்தையைத் தவிர ஏனைய 

     இருமல் உள்ளோரைக் கவனிப்பதை தவிர்க்க வேண்டும்.

•    வீட்டிலும் மற்றும் சாய்சாலை (Clinic)> , வைத்தியசாலை போன்ற பொது 

     இடங்களிலும் கர்ப்பவதிகள் மற்றும், பாலூட்டும் தாய்மார்,ஏனையோருடன் 
     அல்லாமல் பிரத்தியேக பகுதியில் வைத்து கவனிக்கப்படுதல் அவசியம்.
     இன்புளுவென்சா வைரசுத் தொற்றின் அறிகுறிகளாவன:


1.    இருமலுடன் கூடிய காய்ச்சல் (Fever along with cough)
2.    தொண்டை அரிப்பு (Sore Throat)
3.    மூக்கினால் சளிவடிதல் (Rhinorrhoea- Running nose)
4.    உடல் நோவு  (Muscle pain)
5.    உலைவுணர்ச்சி (Malaise)
6.    சிலரில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு


இவை உள்ளோர் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுதல் வேண்டும். குறிப்பாக இந்நோயுற்ற எல்லா கர்ப்பவதிகளும் விசேட வைத்திய நிபுணர் சேவை வழங்கப்படும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல் வேண்டும் என சுகாதார அமைச்சின் குறிப்பு தெரிவிக்கின்றது. இவ்வாறான உடனடி வைத்தியத் தேவைக்கான காரணங்களாவன.


1.    இன்புளுவென்சா வைரசுத் தொற்றுக்களான பெரும்பாலானவர்கள் வைரசு நுண்ணுயிர்க் கொல்லியான ஓசெல்டமிவிர் (Oseltamivir)எனும் மருந்தினால் குணம் பெறுவர். இம்மருந்து வைத்தியசாலைகளில் உள்ளது. நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சையும் அவசியமாகின்றது.

2.    பாரதூரமான, மற்றும் சிக்கலான நோயுள்ளோர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU Care) கவனிக்கப்படல் வேண்டும்.


நோயுற்றோர் பின்வரும் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தல் அவசியம்

1.    இருமி சளி வெளிவரும் போது அல்லது மூக்கினால் வடியும் சளியினை அகற்றும் போது அவை ஏனையோருக்குத் தொற்றாத வண்ணம் தனிப்பட்ட முறையில் அகற்றப்படல் வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று முகமூடி அணிதல், கைக்குட்டை பாவித்தல் அவசியமானது. இன்புளுவென்சா வைரசு காற்றில் பரவுவதனால் இவ் அவதானம் அவசியமாகின்றது. பின்னர் கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல் அவசியம். மூக்கினைத் தொடுவது பின்னர் கண்களை அக்கையால் தொடுவது போன்றவை குறைக்கப்படல் வேண்டும்.

2.    நோயுற்றோர் தங்கள் பாலூட்டும் குழந்தையை கையாளும் போது மேற்கூறப்பட்ட பராமரிப்புக்களுடன்,கைகளை சுத்தமாகக் கழுவுதல், சுத்தமான துணிகளை பாவித்தல் போன்ற சுகாதார பழக்க வழக்கங்களை கைக்கொள்ளல் அவசியமாகும். அவர்கள் தங்கள் குழந்தைக்கு தாய்பாலூட்ட எந்தத்தடையும் இல்லை. வைரசு நுண்ணுயிர்க் கொல்லியால் குழந்தைக்கு பாதிப்பு இல்லை.


3.    இதேவேளை சிறிய குழந்தைக்கும் இவ் வைரசு தொற்றினால் பின்வரும் அறிகுறிகளை காணலாம்.
•    மூச்சுக்கஷ்டம்
•    வேகமாக சுவாசித்தல்
•    உடல் நீலநிறமாதல்
•    அதிக தூக்கம், சோர்வு


நோயுற்ற குழந்தைக்கு வைத்திய பராமரிப்பு அவசியம் என்பதனால் உடனடியாக வைரசு நுண்ணுயிர்க் கொல்லியான ஓசெல்ட்மிவிர்

(Oseltamivir) வழங்கப்படுவதற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல் வேண்டும்.

இத்துடனேயே பல்வேறு நிலைகளிலுமுள்ள சுகாதாரத்துறையினர்க்குமான அறிவுறுத்தல்களும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மேற்கூறப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இன்புளுவென்சா வைரசுத் தொற்றுத் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறலாம். நோயுற்றோருக்கான தகுந்த சிகிச்சை மூலம் இறப்பினைத் தவிர்க்கலாம். 


வைத்திய கலாநிதி K.E.கருணாகரன்
வருகை மகப்பேற்றியல் பெண் நோயியல் நிபுணர்
போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு.
துறைத்தலைவர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்1
கிழக்குப் பல்கலைக்கழகம்