எதிர்வரும் தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளித்தலைவர் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளித்தலைவர் ஒருவர் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடுவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட ரூபன் என்று அழைக்கப்படும் ஆத்மலிங்கம் ரவீந்திரா தமது விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.


பெரும்பாலும் இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக இந்திய நாளிதழ் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு பின்னர் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை சேர்த்துக்கொள்வதில் இலங்கை தமிழரசுக்கட்சி விலகில் போக்கை கடைபிடித்தது.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் முன்னாள் போராளிக்கட்சிகள் என்பதன் காரணமாக இந்த விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளத.

இந்தநிலையில் ரூபன் பல வருடங்களாக மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவர் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் வடக்குகிழக்கு இடைக்கால நிர்வாக சபையில் அங்கம் வகித்தார்.

1990ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுடன் பேச்சு நடத்திய விடுதலைப்புலிகளின் குழுவில் இவரும் உள்ளடங்கியிருந்தார்.

இந்தநிலையில் தாம் நாடாளுமன்றத்துக்கு தெரிவானால் முன்னாள் போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் சேவை செய்யப்போவதாக ரூபன் அறிவித்துள்ளார்.