குவைத்தில் மரணமான சர்நிதியாவின் குழந்தையின் எதிர்கால நன்மைக்காக ஒரு லட்ச ரூபா உதவி

வீட்டுப் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கின் குவைத் நாட்டுக்கு சென்று அகாலமரணமடைந்த 22 வயதுடைய சோமசுந்தரம் சர்நிதியாவின் 4 வயதுடைய குழந்தையின் எதிர்கால நன்மைக்காக ஒரு லட்ச ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் மரணமான சர்நிதியாவின் குழந்தைக்காக சுவிஸில் உள்ளவர்களினால்  ஒரு இலட்சம் ருபா மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியில் வைப்பிலிடப்பட்டு சேமிப்பு புத்தகம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை குழந்தையின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவிலுள்ள சர்நிதியாவின் வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வங்கிப்புத்தகத்தை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் வழங்கி வைத்தார்.

காத்தான்குடியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் மூலம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக சர்நிதியா குவைத் நாட்டிற்கு சென்றார்.

குவைத் சென்ற சர்நிதியா கடந்த 28.2.2015ல் உயிழந்தார். அவரின் சடலம் 13.3.2015 அன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அன்றைய தினம் மட்டக்களப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர் எப்படி உயிரிழந்தார் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது பற்றி இவரின் தாய்க்கோ குடும்பத்திற்கோ தெரிந்திருக்கவில்லை.

சர்நிதியாவின் தாய் சவூதி அரேபியாவில் இருக்கும் போது சர்நிதியா குவைத் சென்றதால் தனது மகளுடன் தொலைபேசி மூலம் அடிக்கடி சர்நீதியாவின் தாய் கீதா மகளுடன் தினமும் பேசி வந்தால்; இதன் போது தனக்குள்ள பிரச்சினைகள் பற்றி சர்நீதியா எதுவுமே தாயிடம் கூறியிருக்க வில்லை.

இவ்வாறு தொலை பேசி மூலம் தனது மகளுடன் உரையாடி வந்த தாய் 27.2.2015 அன்று காலையிலும் தொலை பேசியில் உரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா(வயது22) திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையுண்டு. இவரின் கணவர் இவரை விட்டு பிரிந்து வேறு ஒரு திருமணம் செய்து விட்டார்.

தனது மூன்று வயது குழந்தையை பராமரிப்பதற்காகவும் தனது குடும்பக் கஸ்டத்தை போக்குவதற்காகவும் இந்த வருட ஆரம்பத்தில் குவைத் நாட்டிற்கு சென்றார்.

அங்கு ஏற்பட்ட விபத்து ஒன்றில் இவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் சர்நிதியாவின் கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயர் மற்றும் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுவரையில் இவரது இறப்புக்கான நட்டஈடு எதுவும்வழங்கப்படாத நிலையில், சுவிஸ் நாட்டில் வாழும் நண்பர்கள் இணைந்து வங்கிக் கணக்கு ஒன்றினை ஏற்படுத்த ஒரு லட்சம் ரூபா உதவி வழங்கியுள்ளனர்.

அத்துடன், இவரது எதிர்கால நலன் கருதி உதவ விரும்புபவர்கள் BATTICALOA Regional Developmentt Bank , S.Sashnja, A/C No 611010303305. , வைப்பிலிட முடியும்.