வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் - பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி உலக போதைப்பொருள் ஒழிப்பு தினமாகும். இதனால் நாடு முழுவதும் நாளை சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந் நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தினத்தினையிட்டு போதைப் பொருளிலிருந்து  பிள்ளைகளையும், ஏனைய சிறுவர்களையும் பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் சகல இடங்களிலும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு 26 ஆம் திகதி விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு பொது மக்களை பாடசாலை மட்டத்திலும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மூலமாகவும் தெளிவூட்டும்  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொளளப்படவுள்ளன.


நாடு தழுவிய ரீதியில் பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுற்றிவளைப்புகள் தொடர்பான செயற்பாடுகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது அவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புச்சாக்கேணி கிராம சேவகர் பிரிவில் மது அற்ற சமுகத்தை உருவாக்கவோம் எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு செவ்வாய்க்கிழமை புச்சாக்கேணியில் இடம் பெற்றது.

சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில் மதுப் பாவினையால் ஏற்படும் தீங்கு தொடர்பாகவும் மதுப்பாவினையில் இருந்து விடுபடுவது தொடர்பாகவும் சமுகத்திற்கான நண்பர்கள் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பி.தினேஸ், சமுதாயம்சார் சீர் திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சுதர்சன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு பொது மக்களுக்கான விளக்கங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலகத்தின் சமுதாயம்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் வி. மோகன்ராஜ், புச்சாக்கேணி கிராம சேவகர் பிரிவிற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. கோமேஸ்வரன் மற்றும் புச்சாக்கேணி கிராம பொது மக்களும் கலந்து கொண்டனர்.