மட்டக்களப்பில் மனைவியை தீயிட்டு கொழுத்திய கணவனுக்கு மரணதண்டனை

தனது மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மனைவியின் மீது விளக்கை எறிந்து மண்ணெண்ணையை பரவ விட்டதுடன் தீக்குச்சியை கொளுத்தி அவர் மீது வீசி தீப்பற்றி எரிய வைத்த கணவன் ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த கணவன் மீது கொலைக்குற்றஞ்சாட்டி தொடரப்பட்டிருந்த வழக்கிலேயே மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் எதிரியான கணவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மட்டக்களப்பு கதிரவெளி பால்சேனை எனுமிடத்தைச் சேர்ந்த தங்கராசா வனிதா (வயது 33) எனும் பெண் தனது முதல் கணவன் இறந்ததால் கணவனின் தம்பியான கனகசபை சதானந்தன் என்பவரை இரண்டாவது கணவராக திருமணம் செய்திருந்தார்.

சம்பவ தினமான 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி இரண்டாவது கணவர் கனகசபை சதானந்தன் முதல் கணவருக்கு பிறந்த பெண் பிள்ளை தொடர்பாக மனைவி தங்கராசா வனிதாவுடன் வாய்த்தர்க்கமொன்றில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஆத்திரமுற்ற நிலையில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருந்த விளக்கு ஒன்றை மனைவி மீது வீசி எண்ணெயை அவர் மீது பரவ விட்டு தீக்குச்சியையும் கொளுத்தி எறிந்து கணவர் கனகசபை சதானந்தன் தீப்பற்றி எரிய வைத்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வாகரை வைத்தியசாலைக்கு தீக்காயங்களுடன் எடுத்து செல்லப்பட்ட குறித்த மனைவியான தங்கராசா வனிதா பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டதுடன் எட்டு நாட்களின் பின் மரணத்தை தழுவிக்கொண்டார்.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பேசக்கூடிய சுய நினைவுடன் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலமளித்து ஒப்பமும் இட்டிருந்தார்.

குறித்த வாக்கு மூலத்தில் தனது இரண்டாவது கணவர் கனகசபை சதானந்தமே தம்மை தீ வைத்து கொளுத்தி தீக்காயங்களேற்பட காரணமாகவிருந்தாரெனத் தெரிவித்திருந்ததுடன் சாட்சியங்கள் தடயங்களும் கிடைத்திருந்தன.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் இது தொடர்பான கொலைக்குற்றச்சாட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இறுதியாக குறித்த பெண்ணின் வாக்கு மூலம் மரண வாக்கு மூலமாகவும் நம்பக்கூடிய சாட்சியமாகவும் மன்று ஏற்றுக்கொண்டதுடன் எதிரி மீதான கொலைக்குற்றம் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி எதிரியான கணவர் கனகசபை சதானந்தனுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.