பொதுத் தேர்தலுக்கான 12 மில்லியன் வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணி நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை நாளை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இம்முறை தேர்தலுக்காக ஒருகோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 491 வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
தபால் ஊழியர்கள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை வீடுகள் தோறும் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் இரண்டாம் மற்றும் ஒன்பதாம் திகதிகள் வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான பகுதிநேர வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நாளை நள்ளிரவுக்கு பின்னர் நடத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தத் தடை செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி வரை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள் தொடர்பில் 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் செயலகத்திற்கு இதுவரை 549 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சட்டவிரோதமாக நியமனங்கள் வழங்கப்பட்டமை மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை குறித்து 145 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பாக 116 முறைப்பாடுகளும் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் 79 முறைப்பாடுகளும் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன.
அரச சொத்துக்கள் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக 71 முறைப்பாடுகளும் அரச ஊழியர்கள் பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பாக 35 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
பொதுத் தேர்தல் தொடர்பாக கொழும்பு மாவட்டத்தில் இருந்து 94 முறைப்பாடுகளும் பதுளை மாவட்டத்தில் இருந்து 42 முறைப்பாடுகளும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 30 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான 12 மில்லியன் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஐந்து நாட்களில் ஏனைய வாக்குச் சீட்டுக்களும் அச்சிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிபர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்தோடு வேட்பாளர்களின் பெயர் மற்றும் விருப்பு இலங்கங்கள் அடங்கிய பட்டியல்களை அச்சிடும் பணிகளும் நிறைவடையும் தருணத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர்களின் பெயர் பட்டியல்களை நாளை தேர்தல்கள் செயலகத்தின் ஊடாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அரச அச்சக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.