பியசேன போன்றவர்களை தேர்வு செய்தால் 5 வருடங்கள் வீணாய்ப்போகும் - நடேஸ்

கடந்த தேர்தலில் பியசேன போன்றவர்களுக்கு வாக்களித்து 5 வருடங்கள் வீணடிக்கப்பட்டது போன்ற நிலை இம்முறை ஏற்படக் கூடாது. அதற்கேற்றால் போல் சிறந்த வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்யவேண்டும் என என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் முருகேசு நடேசலிங்கம் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்டத்தின் அட்டைப்பளம் கிராமத்திற்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் முருகேசு நடேசலிங்கம் அக்கிராமத்திலுள்ள மக்களது பிரச்சினைகள் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

அட்டைப்பளத்திலுள்ள மாரியம்மன்கோவில், மற்றும் ஏனைய இடங்களுக்கும் சென்று தேவைகளை அறிந்துகொண்டார். 

இங்கு தொடர்நது கருத்துத் தெரிவித்த முருகேசு நடேசலிங்கம்,
அம்பாறை மாவட்டத்தின் பாரம்பரியமான பிரதேசங்களில் ஒன்றான அட்டைப்பளம் பிரதேசம் பல்வேறு அபிவிருத்தி தொடர்பான தேவைப்பாடுகளை உடையதாக காணப்படுகிறது. அத்துடன் மக்களுடைய தேவைகளும் அதிகளவில் உள்ளன. இவ்வாறான தேவைப்பாடுகளையும் மக்களது உரிமைகளையும் அடைந்து கொள்வதற்கு எதிர்வருகின்ற பாராளுமன்ற காலம் பயன்படுத்த வேண்டும்.

தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் இணைந்த வட கிழக்கு மாகாணத்தில் ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு என்கின்ற நிலைப்பாட்டிலும் இலட்சியத்திலிருந்து சிறிதளவும் வழுகாமல் அந்த இலட்சியத்தை அடைவதற்காக எதிர்வருகின்ற தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழர்கள் ஒவ்வொருவருடைய அவாவாகும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பியசேனா போன்றவர்களைத் தெரிவு செய்ததுடன், பிழையான முடிவுகளையும் மக்கள் எடுத்திருந்தனர். அவ்வாறானதொரு நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாதபடி நாம் அனைவரும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

மாகாண சபைத் தேர்தல்களிலும் எதிர்வருகின்ற ஆட்சியாளரை அதற்கு இணங்க வைக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் இலட்சிய நோக்குடன் தமிழ மக்கள் வாக்களிப்பதே இத் தேர்தலில் மிக முக்கியமாகும் என்றார்.

அம்பாறை மாவட்டத்தின் அட்டைப்பளம் கிராமத்தின் மாரியம்மன் ஆலயம், மற்றும் மக்களின் தேவைகளை தான் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் முதலாவது நிதியொதுக்கீட்டில் நிறைவேற்றவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் முருகேசு நடேசலிங்கம் தெரிவித்தார்.