மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று விபத்துகளில் ஒருவர் பலி ஏழு பேர் காயம்

மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் காலை இடம்பெற்ற வெவ்வேறு மூன்று  விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்ததுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வந்தாறுமூலையில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்திலிருந்த மரமொன்றுடன் மோதியதினால் ஏறாவூர் மீராகேணியை சேர்ந்த மரக்கறி வியாபாரியான முஹம்மத் லத்தீப் பாறூக் (வயது 32) என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.



இவ்வாறிருக்க கொழும்பிலிருந்து பழுகாமம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மைலம்பாவெளியில்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன்  மோதியதினால் படுகாயமடைந்த நான்கு பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு விமான நிலையத்திலிருந்து தமது உறவினரை அழைத்துவந்து கொண்டிருந்த எஸ்.தங்கநாயகம் (வயது 46) ரீ.தவநாயகம் (வயது 28) எஸ்.நிலோஜன் (வயது 14) வான் சாரதியான கே.பாக்கியராசா (வயது 46) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

மேலும்  ஓட்டமாவடி சுற்றுவளைவு பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயணித்துக்கொண்டிருந்த  மோட்டார் சைக்கிள் ஒன்றை இடைமறிக்க முற்பட்டபோது அம்மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  மீது மோதியது. இதன்போது அப்பொலிஸ் உத்தியோகஸ்தரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை  மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.