பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்- ரெட்ணம்

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக அடிப்படை உரிமைகளை வழங்காமல் வடக்கு கிழக்கில் பாரிய யுத்தத்தை நடத்தி அந்த யுத்தம் ஊடாக ஒரு மனிதப் பேரழிவை ஏற்படுத்தி மீண்டும் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிறது நடத்தப்படும் முதலாவது ஜனநாயக ரீதியான பாராளுமன்றத் தேர்தலே இந்தத் தேர்தலாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமுன்றத் தேர்தல் வேட்பாளரான ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் விழாவெட்டுவான் பிரதேசத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த பல்வேறு அச்சுறுத்தல்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஊடாக ஒரு ஜனநாயகரீதியாக வாக்களிக்கக் கூடிய சூழல் கிடைத்திருக்கிறது. இந்த ஜனநாயகச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 90 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை தமிழ் மக்கள் அளிக்க வேண்டும்.

அதன் ஊடாகவே நான்கு பிரதிநிதிதுவத்தினைத் தமிழர்களுக்குத் தெரிவு செய்ய முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் நான்கு பிரதி நிதித்துவத்தினைத் தேர்வு செய்வதன ;ஊடாகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை நிரூபிக்க முடியும். 

உங்களுக்குத் தெரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் விகிதாசார அடிப்படையில் தமிழ் பிரதிநிதித்துவம் சரியாகப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றதா? அந்தத் தமிழ் பிரதிநிதித்துவத்தினைப் பாதுக்காக்கக் கூடிய வகையில் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்களா? என்ற கேள்வி எம்மத்தியில் இருக்கின்றது. 

கடந்த காலத்தில் 52 முதல் 55 வீதமான வாக்களிப்பே காணப்பட்டது. மாவட்டத்தின் பல இடங்களிலே வாக்களிப்புகள் நடைபெறவில்லை. இந்த முறை தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வாக்களிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. மாவட்டத்திலுள்ள மக்கள் மிகவும் விழிப்பாகவும் தெளிவாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். 

எதிர்வருகின்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து, மாகாணசபை ஊடாகவும் பாராளுமன்ற , சர்வதேசம் ஊடாகவும் எமது தமிழ் மக்களின் அடிப்படைபிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு உரிமையினை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவார்கள் என்பதில் எந்தச் சந்தேகம் இல்லை.