முதியோர்களுக்கான கொடுப்பனவை இருமடங்காக வழங்க நிதி ஒதுக்கீடு!

முதியோர்களுக்கான கொடுப்பனவை இருமடங்காக வழங்குவதற்கான நிதியை வழங்குவதற்கான ஜூலை மாதம் வரை 4402.5 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி ஒதுக்கியுள்ளது என சமூக சேவைகள் நலன்புரிமற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரேணுகா ஏக்கநாயக்க தெரிவித்தார். 
இடைகால வரவுசெலவு திட்டத்திற்கமைய இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அனைவருக்காகவும் அரச வருடாந்தம் 5000 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கவேண்டியுள்ளது. கடந்த அரசினால் 1000 ரூபாவாக வழங்கப்பட்ட கொடுப்பனவு புதிய அரசாங்கத்தினால் 2000 ரூபாவாக அதிகரித்து வழங்கப்படுகிறது.


தெரிவு செய்யப்பட்ட 386,080 முதியோர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அதற்கமைய 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டில் இக்கொடுப்பனவை பெறும் முதியோர்களின் எண்ணிக்கை 137,238 ஆக அதிகரித்துள்ளது. இக்கொடுப்பனவை பெறுவதில் முதியோர்களுக்கு சிக்கல்கள் ஏதும் இருப்பின் அதனை தீர்த்து வைப்பதற்காக முதியோர் செயல அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரச்சினைகள் தொடர்பில்  0777536034 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பணிப்பாளர்  சுவிந்த எஸ். சிங்கப்புலி அல்லது 0716886121 / 0112587003 என்ற தொடர்பு இலக்கங்களினூடாக உதவிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி நயனா சிங்கப்புலிகே ஆகியோருக்கு தெரிவிக்கலாம். ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இக்கொடுப்பனவை பெற்றுக்கொள்ளலாம்.

அமைச்சு அந்நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கும். அந்நிதி பிரதேச செயலாளர்களினூடாக தபால் நிலையங்கள், உபதபால் நிலையங்களில் மக்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.