தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதாக அமைவது வேதனையான விடயம் வேட்பாளர் (ஜனா)


தமிழ்த்தேசியக்கூட்டமைபின் ஒருசில வேட்பாளர்கள் செயற்படும்விதம் கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதாக அமைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட வேட்பாளருமான கோ.கருணாகரம் தெரிவித்தார்

தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் சிலர் ஊடகங்களில் வெளியிட்ட கருத்தைக் கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
 மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய அபிமானிகளிடையே ஒருவித சந்தேகம் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. தமிழ்த் தேசிய அபிமானிகள் தொலைபேசி ஊடாகவும் நான் செல்லுமிடமெங்கும் நேரடியாகவும் என்னிடம் இதுகுறித்து வினவுகின்றனர். இது தொடருமானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே தமிழ் தேசிய உணர்வாளர்களின் உணர்வுகளை சிதைத்ததாகிவிடும் என்பதாலும், எம் தமிழ் மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டுமென்பதாலும் இதனை வெளியிடவேண்டிய அவசியமும் நிர்ப்பந்தமும் எனக்கு ஏற்பட்டுள்ளது. 
தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியில் தமிழ் உணர்வாளர்களிடம் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை பட்டியலில் உள்ள தமிழரசுக் கட்சியின் மூவரை தெரிவு செய்யுங்கள் என்று வழங்கிய செவ்விதான் தமிழ் தேசிய உணர்வாளர்களிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் குத்துவெட்டா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருப்புவாக்கு தேர்தல் முறையில் ஓரேகட்சி வேட்பாளர்களிடையே கூட முரண்பாடுகள் வழமையெனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இதுவரை நிகழாதவொன்று. குறுக்கு வழியில் இலகுவாக பாராளுமன்றக் கதிரைகளை அனுபவித்த, அனுபவிக்க விரும்புவோர் சிலரும் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில்  இறுதிக் குழப்பத்தில் உள்ளீர்க்கப்பட்டமையின் விளைவுகளே இவை. 
உண்மையில் நாங்கள் - நான் உட்பட எம் பட்டியலில் உள்ள பெரும்பாலோர் எனது இலக்கத்திற்கு ஒன்றையும் எம்பட்டியலில் உள்ள நீங்கள் விரும்பும் இருவருக்கோ, அல்லது எம் பட்டியலில் உள்ள எவரையேனும் விரும்பவில்லையெனில் நீங்கள் நேசிக்கும் வீட்டுச்சின்னத்திற்கோ வாக்களியுங்கள் என்றவாறே எமது பிரசாரம் அமைகின்றது. மாறாக தனிப்பட்ட கட்சியடிப்படையிலோ குழுவாகவோ மூவர் இணைந்து மற்றவருக்கு குழிபறிக்கும் வகையிலோ எமது பிரசாரம் இன்று மட்டுமல்ல என்றுமே இருந்ததில்லை. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிலரை பாராளுமன்ற கதிரைகளுக்கு அனுப்புவதற்காகவோ, சிலரது பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. 
தமிழ்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் ஒற்றுமையின் சின்னம் ஒற்றுமையின் பலம் தமிழ்த் தேசிய உணர்வுகளின் சங்கமம் தமிழர்களின் ஒருமித்தகுரல் நேற்றல்ல இன்றல்ல என்றும் இவ்வாறு இருக்கவேண்டுமென்பதற்காகவே தலைவர் பிரபாகரன் தலைமையில் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளும் மற்றும் ஏனைய விடுதலை இயக்கங்களும் அகிம்சை வழியில் நடந்த அன்றைய  தமிழர் விடுதலைக் கூட்டணியையும் இன்றைய தமிழரசுக்கட்சி இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை காலத்தின் கட்டாயம் கருதி உருவாக்கினார்.  இந்திய விடுதலைப் 
    போராட்டத்தில் கூட காந்தியும் நேதாஜியும் இறுதிவரை
    இணையவில்லை. இலங்கையில் இவை இரண்டும்
    இணைந்தது இது இங்கு தேவை இதனாலேயே இது 
    உருவாகியது 

    இத்தகைய வாரலாறு எதுவும் தெரியாது வரலாறு
    எதுவும் புரியாது தமிழர் தம்துயர வரலாற்றில் வாழாது
    தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏதோ ஒரு வழியில்
    ஏதோ ஒரு விபத்தில் உள்நுழைந்தவர்களால் ஏற்படும்
    குழப்பங்களே இவை. வரலாற்றை சற்று பின்நோக்கி 
    பாருங்கள் இவை இயல்பென்று நீங்களே உணர்வீகள்.
    சேரனும் சோழனும் பாண்டியனும் அன்று இருந்தான்
    ஒற்றுமையாக. அவர் பரம்பரை பதவிவெறி 
    கொண்டவர்கள் இவர்கள் எப்படி இருப்பார்கள் 
    ஒற்றுமையாக. அவர்களது குணம் தம்மையறியாமலே
    இவர்களிலும் வெளிப்படும்தானே இதை உணர்ந்து 
    இவர்களை புறம்தள்ளி தமிழ்த் தேசிய உணர்வோடு
    சிந்தியுங்கள் செயற்படுங்கள். இவர்களை வரலாறு
    மன்னிக்கட்டும்.