மட்டக்களப்பில் போட்டியிட்ட சுயேற்சைக்குழு தமிழரசு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பு

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் மாட்டுவண்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு தனது ஆதரவை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து குறித்த சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் காலத்தின் தேவைகருதி தமிழினத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தாங்கள் தமிழரசுக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சுயேட்சைக்குழுவின் தலைவர் கனகசூரியம் கனகரெட்ணம் மேலும் கூறுகையில்.

எதிர்பார்த்த நேரத்தில் திடீரென நடைபெறவுள்ள இந்த பாராளுமன்ற தேர்தலானது தமிழ் மக்களை பொறுத்தவரையில் மிகவும் முக்கியம் வாய்ந்தது குறிப்பாக சர்வதேச சமூகம் இந்த தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
அந்தவகையில் எமக்குள் ஆயிரம் கருத்து முரண்பாடுகள் உள்ளபோதும் தமிழ் மக்களுக்காகவும் எமது இனத்தின் விடுதலைக்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறவைப்பதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதிகப்படியான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு பிரதிநிதிகளை இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் நோக்குடன் மாட்டுவண்டி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட நாங்கள் எமது ஆதரவை தமிழரசுக் கட்சிக்கு வழங்குவதற்கு முடிவு செய்து அந்த செய்தியை உலகிற்கு தெரியப்படுத்தி எம்மைப்போன்று ஏனைய சுயேட்சைக் குழுக்களும் இதுபோன்று தங்களது ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கவேண்டும் என்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை  நேரடியாக சந்தித்து எமது ஆதரவை தெரியப்படுத்தியுள்ளோம்.


எனவே எமது கட்சி ஆதரவாளர்கள் தமிழரசுக்கட்சியின் சின்னமான வீட்டுக்கு வாக்களித்து தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் எம்மைப்போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய சுயேட்சைக் குழுக்களும் தங்களது ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் எனக் கூறினார்.