ஆலையடிவேம்பில் இடம்பெற்ற காணி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு

திருகோணமலை மாவட்டத்திலிருந்து சேவையாற்றும் பொதுத்தொண்டு அமைப்பான இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான ஒருநாள் வழிகாட்டல் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (28) இடம்பெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் கே.குருநாதன் வளவாளராகக் கலந்துகொண்ட இச்செயலமர்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது. இச்செயலமர்வின் ஆரம்ப உரையை இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மதியுரைஞர் பி.சற்சிவானந்தம் வழங்கியதுடன், செயலமர்வு தொடர்பான விளக்கம் மற்றும் செயலமர்வின் அவசியம் மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகத்தின் செயற்பாடுகள் என்பன குறித்து பங்குபற்றுனர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து தனது தலைமையுரையில் பேசிய பிரதேச செயலாளர், இவ்வாறான கருத்தரங்குகள் எமது உத்தியோகத்தர்களுக்கு அலுவலக ரீதியான கடமைகளின்போதும் தனிப்பட்ட முறையிலும்  மிகவும் பிரயோசனமான ஒன்றாக அமையும் எனத் தெரிவித்ததுடன், வளவாளரான முன்னாள் காணி ஆணையாளர் மிகுந்த துறைசார் அனுபவசாலி. அத்தோடு அரசசேவையில் நீண்டகாலமாகப் பல்வேறு மட்டங்களில் பணியாற்றியவர். அவர் கொண்டிருக்கின்ற அனுபவத்தையும் அறிவினையும் எம்போன்ற பொதுத்துறை அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்வதற்குச் சந்தர்ப்பமளித்த இளைஞர் அபிவிருத்தி அகத்தின் முயற்சி பாராட்டக்கூடியது. எமது உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரை இந்த விடயங்களில் அவர்களுக்கு ஆழந்த அனுபவங்கள் இல்லை. ஏனெனில் அவர்களில் பலர் புதிய நியமனங்கள் மூலம் மக்களின் பணிகளுக்காக அமர்த்தப்பட்டவர்கள். அந்தவகையில் இக்காணிச்சட்டம் பற்றிய செயலமர்வு மிகவும் பயனுள்ளதாக அமையும். பல ஆண்டுகளுக்கு முன்னா் பணியாற்றிய எமது முன்னைய அதிகாரிகள் அவர்களுக்கு அப்போதிருந்த அச்சுறுத்தல்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் கொண்டு பல ஆவணங்களை மக்களுக்கு வழங்கயிருக்கமுடியும். ஆனால் சரியான முறையில் அக்காலத்தில் அவர்கள்  செயற்படாமையினால் கடந்தகாலங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான பல காணி உரிமங்கள் மீழவும் மத்திய அரசிற்கு சென்றுள்ளன. எனவே நாங்கள் இந்த அடிப்படைச் சட்ட அறிவை சகலரும் தெரிந்திருப்பது அவசியமாகும். பல அனுபவம் வாய்ந்த சட்டவாளர்களும் சரியாகச் சட்டங்களைப் புரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே இங்கு இந்த வழிகாட்டல் கருத்தரங்கில் நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளும் விடய அறிவைப் பயன்படுத்தி, அவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசென்று விழிப்பூட்டல்களைச் செய்யவேண்டும். அதன்மூலம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க முயிற்சிக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அடுத்து வளவாளர் கே.குருநாதன்  தனது வழிகாட்டல் கருத்தரங்கில் குறிப்பிடுகையில், சட்டங்களைச் சரியாகப்படித்து அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் பல சட்டச் சிக்கல்களுக்குள்ளாக வேண்டிவரும் எனக் குறிப்பிட்டதுடன், காணிப் பிரச்சனைகள் தொடர்பான சில பத்திரிகைச் செய்திகளையும் தெளிவுபடுத்தினார். அதனுடன் சில காணிப் பிரச்சனைகளுடன் தொடர்புபட்ட நீதிமன்ற வழக்குகளையும் உதாரணம் காட்டி தெளிவுபடுத்தினார்.

அரச மற்றும் தனியார் காணிகளை இனங்காணல் தொடர்பாகக் குறிப்பிடும்போது, முற்காலத்தில் ‘சித்து சன்னாஸ்’ எனும் பதிவில் காணிச்சட்டப் பதிவு விடயங்கள் உள்ளன எனவும் இவற்றை இலங்கையை ஆண்ட பிரித்தானியர்கள் தனியார் காணிகள் என அடையாளப்படுத்தியதாகவும், ஒரு காணி ஆணையாளர் புதிய ஒரு விகாரைக்கு அல்லது வணக்கஸ்தலமொன்றுக்கு காணி வழங்குவது எவ்வாறு என்பது குறித்துக் காணிச்சட்டத்தில் தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்காலத்தில் எதிர்கொள்ளப்படும் பாரியதொரு பிரச்சனை அடுத்துரிமை செய்வது தொடர்பானது எனக் குறிப்பிட்டதுடன், இது தவறானவகையில் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார். காணி அபிவிருத்திச்சட்டம்  56ஆம் பிரிவின்கீழ் ஒரு காணிக்குப் பின்னுரிமை வழங்க இயலாது. பல பிரதேசங்களில் இவ்விடயத்தில் தவறு செய்த அதிகாரிகள் பிரச்சனைகளுக்குள்ளாகி இன்று நீதீமன்றங்களில் நிற்பதாகக் குறிப்பிட்ட அவர், காணி  பின்னுருத்துமுறையில் பெண்களே மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சட்டமாற்ற வரைபு இலங்கையின் ஏனைய 8 மாகாணசபைகளில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டபோதும் கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்படவில்லை. பின்னுரிமையில் குறிப்பிடப்படும் மகன் மற்றும் மகள் என்பவற்றை ‘பிள்ளை’ என்று ஏனைய மாகாணங்கள் மாற்ற அங்கீகரித்துள்ளன. ஆனால் கிழக்கு மாகாணத்தில் அவ்வாறில்லை. ஆகையால் சட்டம் தெரிந்தவர்களே எமது பிரதிநிதிகளாக மாகாணசபையிலும் பாராளுமன்றிலும் இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே ஒவ்வொரு பெற்றோரும் தமது காணியின் பின்னுரிமையைத் தமது பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும். இப்படியான பிரச்சனைகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் பல உதாரணங்கள்  உள்ளன. சட்ட விடயங்களைப் புரிந்து, உயிரோடு இருக்கும்போதே மனைவிக்கான அல்லது பெண் வாரிசுகளுக்கான   பின்னுரிமையைப் பதியவேண்டும். சீவிய உரிமையால் எதுவும் செய்யமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச்செயலமர்வின் இறுதியில் வளவாளருக்கு நன்றி தெரிவித்த பிரதேச செயலாளர், இதுபோன்ற மேலும் ஒரு அமர்வைத் தனியாக தமது செயலக உத்தியோகத்தர்களுக்கு நடாத்த உதவவேண்டும் என இளைஞர் அபிவிருத்தி அகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது கண்ணகிபுரத்தில் 145 குடும்பங்களுக்குக் காணி உரிமம் பெறுவதில் உள்ள பிரச்சனைகள் அக்கிராம மாதர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கான விளக்கங்கள் வளவாளரினால் வழங்கப்பட்டதுடன், மேலும் பல தனியார் பிரச்சனைகள் அங்கு மக்களால் முன்வைக்கப்பட்டு அவற்றுக்கும் விளக்கமளிக்கப்பட்டன. மாதர்சங்கப்பிரதிநிதி ஒருவர் நன்றி தெரிவிக்கையில், இவ்வாறான செயலமர்வை மேலும் தமக்கு நடாத்தவேண்டும் எனவும் இது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.