தனியார் துறையினருக்கு வாக்களிப்பதற்கு தேவையான விடுமுறையை வழங்குமாறு கோரிக்கை

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தனியார் துறையினருக்கு தேவையான விடுமுறையை வழங்குமாறு தோ்தல்கள் ஆணையாளா் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்காளா் பணிபுரியும் இடத்திலிருந்து 40 கிலோமீட்டா் அல்லது அதற்கு குறைவான தூரத்தில் அவரது வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் அரைநாள் விடுமுறை வழங்கவேண்டும் என தோ்தல்கள் ஆணையாளா் தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் தொடா்பில் தேர்தல்கள் செயலகத்தினால் வௌியிடப்பட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே தேர்தல்கள் ஆணையாளா் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 40 கிலோமீட்டா் முதல் 100 கிலோமீட்டா் வரையான தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் வாக்காளருக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படவேண்டும்.
மேலும் வாக்காளா் பணிபுரியும் இடத்திலிருந்து 100 கிலோமீட்டா் தொடக்கம் 150 கிலோமீட்டா் தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் வாக்களிப்பு நிலையம் காணப்படுமாயின் இரண்டு நாள் விடுமுறை வழங்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள தனியார்த்துறை வாக்காளா்கள் தங்களின் வாக்குகளை பதிவுசெய்வதற்கு மூன்று நாள் கால அவகாசம் தேவைப்படுமாயின் அதனை வழங்கவேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.