நடப்பு அரசியல் அலசல் ! அரசியல்வாதிகளின் பேச்சு விடிஞ்சா போச்சு

(மூன்றாம்கண் )
இலங்கைத் திருநாட்டில் ஜனவரி 8ஆந் திகதி ஆரம்பித்த அரசியல் அதிர்வுகள் ஒவ்வொரு வினாடியும் உருவாகிய வண்ணமே இருக்கின்றது. அரசியல்வாதிகளின் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதுபோல் ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் சரணடைந்த நிகழ்வு ஊடகங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டது.  'நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்' என்ற சினிமாப்பாடல் வரிகளை நினைவுக்கு கொண்டு வருகின்றது. அதுதான் மஹிந்தவின் மீள் அரசியல் பிரவேசத்திற்கு மைத்திரி அளித்த அங்கீகாரம்.
மக்களைக் கைவிட்டு மஹிந்தவுடன் கைகோர்த்ததை மனச்சாட்சியுள்ள ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கட்சிப் பிழவைத் தடுப்பதற்கான ஜனாதிபதியின் ஒரு தடுமாற்றமான தாமசங்கடமான நிலையில் எடுக்கப்பட்ட முடிவாகவே இது தெரிகின்றது. ஆனால் புத்திசாலித்தனமான முடிவாகத் தெரியவில்லை.

இந்த முடிவானது சிறுபான்மை மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நம்பியிருந்த மக்களை நட்டாற்றில் விட்டது போன்ற நிலமையே இது. தங்கள் அபிலாஷைகள் நிறைவேறும் நிம்மதியாக வாழலாம் என்ற கனவோடிருந்த மக்களுக்கு எல்லாமெ கானல் நீர் போன்ற ஏக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. மைத்திரி கூட சிங்கள பேரினவாதத்திற்கு கட்டுப்பட்டவர்தான் என்ற யதார்த்தத்தை தோற்றுவித்துள்ளது. இனியும் சிங்களத் தலைவர்களை நம்பி மோசம் போக முடியாது என்ற வைராக்கியத்தையே அவர்களுக்குத் தோற்றுவிக்கப்போகின்றது.

ஏற்கனவே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு காத்த மௌனம்,, அண்மையில் எதிர்கட்சி தலைவர் பதவியைக் கண்டு கொள்ளாமை, ஒப்புக்காவது ஒரு தமிழ் அரசியல் கைதியையேனும் விடுவிக்காமை, இராணுவ முகாம்கள் விடுவிக்கப்படாமை, சொந்த பொதுமக்கள் காணிகள் விடுவிப்பு, இறுதியாக 20வது திருத்தம் தொடர்பாக சிறுபான்மை கட்சிகள் விடுத்த கோரிக்கைளுக்கு தீர்வு வழங்காமை, முஸ்லிம் மக்களின் நீதியான மனிதாபிமான குடியேற்றம், போன்ற விடயங்களில் அதிருப்தியடைந்திருந்த சிறுபான்மை மக்கள், மஷிந்தவிற்கு மீண்டும் வாய்பளித்ததன் மூலம் மைத்திரி மீது வைத்திருந்த நம்பிக்கை நாசமாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். நாடு மீண்டும் இனவாதிகளின் அராஜகத்திற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சந்திரிகா அணி, மற்றும் மைத்திரி அணி என்பன எடுக்க இருக்கும் மாற்று நடவடிக்கைகள் மூலம் இதன் சரியான தாக்கத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிலவேளை இந்த முடிவானது ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்தக் கூடியதாகவும் இருக்கக் கூடும். அதுவும் பொறுத்திருந்து பார்க்க கூடியதே. எனினும் ரணில் கூட தமிழர்களின் நம்பிக்கைக்குப் பாதிரமானவர் அல்ல என்பது கடந்தகால வரலாறு. இது குறித்து சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இனியும் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக பிரிந்து செயற்படாமல் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயற்பட வேண்டியதின் அவசியத்தையே இது வலியுறுத்துகின்றது. இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தையும் மீண்டும் நினைவூட்டுகின்றது.