சிறுபான்மையினங்களை பயம் கொள்ள வைத்துள்ள மகிந்தவின் மீள்வருகை


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் மீள்­வ­ரு­கைக்­கான அறி­வித்­தல்­களும் உறு­தி­யு­ரைப்­புக்­களும் சகல தரப்­பி­ன­ரையும் கதி­க­லங்க வைத்­துள்­ளது. சில­ருக்கு அதிர்ச்­சி­யூட்டும் செய்­தி­யா­கவும் காணப்­ப­டு­கி­றது. இலங்கை அர­சியல் வர­லாற்றில் இப்­ப­டி­யொரு நெருக்­கடி நிலையை மக்கள் கேள்­விப்­ப­டாத அள­வுக்கு சர்ச்­சை­களும் முரண்­பா­டு­களும் மோதல்­களும் குவிந்­து­போன தேர்­த­லாக இலங்­கையின் 15 ஆவது பொதுத் தேர்தல் ஆகி­விட்­டது.


இலங்­கையின் பிர­த­மர்­க­ளாக இருந்­த­வர்கள் இன்­னு­மொரு கால பிர­தமர் கதி­ரைக்கு போட்­டி­யிட்­டி­ருக்­கி­றார்கள். மந்­தி­ரிகள் சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக பாரா­ளு­மன்றம் சென்­றுள்­ளனர். மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளாக ஆகி­யுள்­ளனர். ஆனால் நடை­பெ­ற­வுள்ள தேர்தல் ஜனா­தி­ப­தி­யெனும் நாட்டின் உயர்­ப­த­வியை வகித்த ஒருவர் பிர­தமர் பத­விக்­காக படி­யி­றங்கி போட்­டி­யிடும் நிலையை 15 ஆவது பொதுத் தேர்தல் உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவின் மீள்­வ­ரு­கையை ஒட்­டு­மொத்த எல்லாச் சமூ­கமும் ஏற்றுக் கொண்­ட­தா­கவோ எல்லா கட்­சி­களும் வர­வேற்­ப­தா­கவோ இல்­லை­யென்­பது உண்மை நிலை­யாக இருந்­தாலும் “என்­னையும் இந்த நாட்­டையும் நேசிக்கும் மக்­களின் அழைப்பை என்னால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. நிரா­க­ரிக்கும் மன­நி­லையும் எனக்­கில்லை, ஆகவே இந்த நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் கள­மி­றங்கி போட்­டி­யி­டுவேன், வெற்­றி­வாகை சூடுவேன். ஆட்சி அமைப்பேன் என மஹிந்த சூளு­ரைத்­த­மையும், மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்­சிக்கு வரு­வதன் மூலம் இந்த நாட்­டுக்கு பெரும் பலம் உண்­டா­கு­மென அவரின் ஆத­ர­வா­ளர்கள் புக­ழாரம் சூடி­யி­ருப்­பதும் அவ­ருக்­கி­ருக்­கின்ற நம்­பிக்­கையையும் ஆத­ர­வையும் எடுத்துக் காட்­டு­கி­றது.


மஹிந்­தவின் வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதா, மீண்டும் அவ­ரது கனவு நிறை­வே­றுமா என்ற சந்­தே­கங்கள் எல்லாம் ஒரு­பு­ற­மி­ருக்க, இந்த நாட்டின் பராக்­கி­ர­மபாகு மன்­ன­னாக, துட்­ட­கை­மு­னு­வாக, பெரும்­பான்மை சமூகத்தின் பெரும்­பான்மை மக்­களால் போஷிக்­கப்­ப­டு­கி­ற­வ­ராக அவர் விளங்­கு­கிறார் என்­பது ஏதோ ஒரு­வ­கையில் உண்மை. இந்த உண்­மையை புறம் தள்­ளி­ப்பார்க்­கவும் முடி­யாது. அதற்கு உதா­ர­ணந்தான் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் 47.58 வீத வாக்­குக்கள் (5768090) அவ­ருக்கு அளிக்­கப்­பட்­டமை. சுமார் 10 மாவட்­டங்­களில் அவர் முன்­னிலை வகித்­தமை.
தெரிந்தோ தெரி­யா­மலோ ஆட்சி அமைக்­கக்­கூ­டிய வாய்ப்பை, அவ­ருக்கு பெரும்­பான்மை சமூகம் மீண்டும் கைய­ளிக்­கு­மாக இருந்தால் இலங்கை அர­சியல் வர­லாற்றில் ஏற்­ப­டக்­கூ­டிய அனர்த்­தங்கள் அள­வி­டப்­பட முடி­யா­த­தா­கி­வி­டு­மென, ஐ.தே.கட்­சி­யி­னரும் மைத்­திரி ஆத­ர­வா­ளர்­களும் சிறு­பான்மை கட்­சி­களும் கூவிக் கொண்­டி­ருப்­பதை கேட்­கின்றோம்.

அதிலும் ஜே.வி.பி., ஹெல­உ­று­மய போன்ற கட்­சிகள் இவ்­வி­ட­யத்தில் நாகபாம்பைப் போல் ­ப­ட­மெ­டுத்து ஆடிக் கொண்­டி­ருப்­பதைக் காண்­கின்றோம்.
நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மக்கள் வழங்­கிய ஆணையை எட்டி உதைத்து விட்டு, மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அவ­ரது விசு­வா­சி­க­ளுக்கும் வேட்­பு­மனு வழங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா­னித்­த­மை­யா­னது மிகப்­பெ­ரிய காட்டிக் கொடுப்­பாகும் என்று ஜே.வி.பி சுட்டிக் காட்­டி­யுள்­ளது.


மஹிந்­தவை தோல்­வி­ய­டையச் செய்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன தலை­மை­யி­லான நல்­லாட்­சிக்­கான பய­ணத்தை ஆரம்­பித்து வைத்தோம். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் ஐ.தே.கட்சி ஆகிய இரண்டு பிர­தான கட்­சி­க­ளாலும் நாட்டின் கொள்கை ரீதி­யான ஒழுக்­க­முள்ள நல்­லாட்­சியை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்­பது இன்று புரி­கி­றது எனக் குற்­றஞ்­சாட்டிக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­னணியில் முக்­கிய பங்­காளிக் கட்­சி­யாக இருந்த ஜாதிக ஹெல உறு­மய அக்­கட்­சி­யி­லி­ருந்து (05.07.2015) வெளி­யே­றி­யி­ருந்­தது.
இக்­கட்­சி­களைப் போன்று ஐ.தே.கட்­சியும் மஹிந்­தவின் மீள் எழுச்­சியை குழி தோண்டி புதைத்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வதே எமது ஒரே நோக்­க­மென ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறைகூவல் விட்­டி­ருக்­கிறார்.

 இவ்­வா­றெல்லாம் பார்க்­கி­ற­போது, மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஏகோ­பித்த எதிர்ப்பு காணப்­ப­டு­கி­றது உண்­மை­யென்ற போதிலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வேட்­பாளர் பட்­டி­யலில் இடம் வழங்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி தீர்­மா­னித்­துள்­ள­தாக வெளி­வந்த செய்­தி­யா­னது சுதந்­திர முன்­னணி வட்­டா­ரத்தை மாத்­தி­ர­மல்ல நாட்­டையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. அர­சியல் வட்­டா­ரங்­களில் பல்­வேறு குழப்ப நிலை­களை உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது.


குடும்ப ஆட்­சிக்கு மீண்டும் இட­மில்லை. குடும்ப ஆட்­சி­ வ­ரு­வ­தையோ ஜன­வரி 8ஆம் திகதி இடம் பெற்ற மௌனப்­பு­ரட்சி தோல்­வி­ய­டை­வ­தையோ நான் அனு­ம­திக்கப் போவ­தில்­லை­யென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சூளு­ரைத்­துள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த போட்­டி­யி­டுவார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஜனா­தி­பதி தொடர்ந்தும் மௌனம் சாதித்து வந்த அதே­வேளை மேற்­படி சூளு­ரை­யையும் செய்­துள்ளார்.


இவ்­வா­றெல்லாம் இலங்கை அர­சியல் குழப்பம் கண்­டி­ருக்கும் நிலையில் மஹிந்­தவின் மீள்­வ­ரு­கையோ அல்­லது மீள் எழுச்­சியோ, சிறு­பான்மை சமூ­கத்­துக்கும் நாட்­டுக்கும் எத்­த­கைய மாற்று நிலையைக் கொண்­டு­வ­ரு­மென சிறு­பான்மை சமூ­கத்­த­வரும் நாட்­டு­மக்­களும் பயம் ­கொண்டு காணப்­ப­டு­கின்­றார்கள் என்­பதை கணித்­துப்­பார்க்க வேண்டும்.


ஜன­வரி 8, ஆட்சி மாற்­றத்தின் பிர­தான பங்­கா­ளி­க­ளாகக் காணப்­ப­டு­கின்­ற­வர்கள், பங்கு வகித்­த­வர்கள், முஸ்லிம் மக்­களும் தமிழ்ச் சமூ­க­மாகும். இதற்கு மாற்று கருத்தே இருக்­க­மு­டி­யாது. தனது தோல்­விக்கு முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­க­ளாக இருந்­த­வர்கள் இவ்­விரு சமூ­க­மு­மே­யென்­பதை முன்னாள் ஜனா­தி­பதி பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஆத்­தி­ரத்­துடன் சொல்லிக் காட்­டி­யுள்ளார். சுதந்­தி­ரத்­திற்குப் பின்­னைய எல்­லாக்­காலக் கட்­டங்­க­ளிலும் இலங்­கை­ய­ர­சுடன் உடன்­பட்டு போன­வர்­க­ளா­கவும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்­க­ளா­கவும் முஸ்லிம் மக்கள் இருந்­துள்­ளனர்.


சுதந்­தி­ரத்­துக்கு முன்­னேயும் பின்­னேயும் மூத்த தலை­வர்­க­ளான ரீ.பி.ஜாயா, எச்.எஸ். இஸ்­மாயில், எஸ்.காரி­யப்பர், ஏ.அஸீஸ், 1952 ஆம் ஆண்டுக்குப் பின் எம்.சி.எம்.கலீல், எம்.இ.எச். முகம்­மது அலி, எம்.எம். இப்­ராஹிம் சேர்.ராஸீக் பரீத், ஏ.எச். மாக்கன் மாக்கார், எம்.ஏ.பாக்கீர் மாக்கார், ஏ.எல்.அப்துல் மஜீத், பதி­யுதீன் மஹ்மூத், ஏ.எச்.எம்.பௌசி, ஏ.சி.எஸ். ஹமீத் என பல நூறு முஸ்லிம் அர­சியல்வாதிகள் இலங்கை அர­சி­யலின் ஏற்­றத்­துக்கும் சமூக மாற்­றத்­துக்கும் பொரு­ளா­தார விருத்­திக்கும் அளப்­ப­ரிய தொண்டு செய்­துள்­ளனர். ஆளும் அர­சாங்­கங்­க­ளுடன் இணைந்தும் எதிர்க்­கட்­சி­க­ளுடன் ஒத்­து­ழைத்தும் தியா­கித்த சமூ­கத்­துக்கு 2010ஆம் ஆண்டின் பின் நடந்த கொடூ­ரங்கள் அட்­டூ­ழி­யங்கள் சொல்ல முடி­யா­த­வை­யாகும்.


பள்­ளி­வாசல் எரிப்பு, ஹலால் மறுப்பு கிறீஸ் மனிதன், உணவு தடை, பர்தா விவ­காரம் என்­றெல்லாம் உண்­டாக்­கப்­பட்ட கலா­சார கொடு­மைகள் அவர்­க­ளுக்கு பெரும்­பா­திப்­பையும் வெறுப்­பையும் உண்டு பண்­ணி­யதன் கார­ண­மா­கவே ஆட்சி மாற்­ற­மொன்றை கொண்­டு­வர வேண்­டும்­மென்­பதில் அம்­மக்கள் தீவிரம் காட்­டி­னார்கள். தான்­தோன்­றித்­த­ன­மாக பௌத்த மத­வாத தர்பார், முஸ்லிம் மக்­க­ளுக்கு ஆட்­சியின் மீது வெறுப்­பையும் விரக்­தி­யையும் உண்டு பண்­ணி­யது. இவ்­வகை பட்­ட­றிவே ஆட்சி அதி­கா­ரத்தின் மீதும் ஜனா­தி­ப­தியின் மீதும் கடுப்பு நிலையை உண்­டாக்­கி­யதன் கூட்­டு­வி­னைவே ஜன­வரி 8 ஆம்
திக­தியின் ஆட்­சி­மாற்­றத்தை கொண்டு வந்­தது.


இத்­த­கை­ய­தொரு கொடுங்­கோல் ஆட்சி மீண்டும் வந்து விட்டால், இந்­நாட்டில் குறிப்­பாக, வடக்கு கிழக்­கிலும் அதற்கு வெளி­யேயும் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக வாழ்ந்­து­வரும் முஸ்லிம் மக்­களின் சுதந்­திரம் பறிக்­கப்­பட்டு விட்டும், தனித்­துவம் குலைந்து போய்­விடும் கலா­சாரம் புதைக்­கப்­பட்டு விடும், என்­பதை நினைத்து பயம்கொள்­வது இயற்­கையே.

இதை மனதில் கொண்டே, மஹிந்­தவின் அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்த முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் ரிஷாட் பதி­யுதீன் ஆகியோர் பின்­வ­ரு­மாறு கூறி­யி­ருந்­தார்கள். ஜனா­தி­பதி தேர்­தலின் போது நாங்கள் ஏற்­ப­டுத்­திய அர­சியல் புரட்­சியை தலை­கீ­ழாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான முயற்­சிகள் சில தரப்­பி­னரால் மேற் கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

நல்­லாட்­சியின் பாதையில் பய­ணிக்க வேண்­டு­மாக இருந்தால் ஆட்சி மாற்­றத்­துக்கு துணை நின்­ற­வர்­க­ளுடன் தற்­போ­தைய ஜனா­தி­பதி நிற்க வேண்­டு­மென, ரவூப் ஹக்­கீமும், மஹிந்த மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வதற்கு எமது மக்கள் இட­ம­ளிக்க மாட்­டார்கள், என அமைச்சர் ரிஷாட் பதி­யுதீனும் கூறி­யி­ருப்­பதை இங்கு மனம் கொள்­ளப்­பட வேண்டும்.

ஆட்சி மாற்­றத்தின் இன்­னொரு சூத்­தி­ர­தா­ரி­க­ளாக சொல்­லப்­ப­டு­கின்­ற­வர்கள், வட கிழக்கில் வாழு­கின்ற தமிழ் மக்கள். இவர்கள் பார்­வையில், முன்னாள் ஜனா­தி­ப­தியின் புதிய அர­சியல் பிர­வா­க­மா­னது, எவ்­வ­ளவு பின்­ன­டைவைத் தர­மு­டி­யு­மென்­பதை மிக இல­கு­வா­கவே கணக்­கிட்டுப் பார்க்க முடியும்.
30 வரு­ட­கால ஆயுதப் போராட்­டத்தை, ஈவி­ரக்­க­மின்றி முடி­வுக்கு கொண்டு வரப்­போ­வ­தாக கூறி முன்னாள் ஜனா­தி­பதி இழைத்த போர்க்­குற்றம் மனித உரிமை மீறல் இன அழிப்பு இவற்­றுக்­கு­ரிய நீதி­யையோ பரி­கா­ரத்­தையோ காண முடி­யாமல் போய்­விடும்.

60 வருட கால­மாக, அஹிம்சை­யென்றும் ஆயு­தப்போர் என்றும் ராஜ­தந்­திர நகர்­வென்று மேற்­கொண்டு வந்த எல்லா நகர்­வு­களும் அர்த்­த­மற்­றதாய், அர­சியல் தீர்­வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்­கப்­பட்டு விடும். ஆண்­டாண்டு கால­மாக வாழ்ந்து வந்த பூர்­வீ­க­மான காணிகள், குடி­ம­னைகள், அங்­கி­ருக்­கின்ற கோயில்கள், குளங்கள், மீண்டும் பார்க்க முடி­யாத அடை­ய­மு­டி­யா­த­வைகள் ஆகி­விடும் என்ற பயப்­பாடு தமிழ் மக்­க­ளுக்கு இன்­னும் தான் இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

இது­த­விர இரா­ணுவ பிர­சன்னம், சிங்­களக் குடிப்­ப­ரம்பல், பௌத்த மத விஸ்­த­ரிப்­புக்கள் ஆகிய எல்­லாமே தடுக்­க­மு­டி­யாத விவ­கா­ரங்­க­ளாக மீண்டும் எல்­லா­வற்­றுக்­குமே உயி­ரூட்டம் கொடுக்கும் நிலையே உரு­வா­கு­மென, தமிழ் மக்­களும் சாதா­ரண பிர­ஜை­களும் பேசிக் கொண்­டி­ருப்­பதைக் கேட்க முடி­கி­றது. இவை உள்­நாட்டில் அசாத்­திய நிலையை உரு­வாக்கும் அதே­வேளை மஹிந்­தவின் மீள்­வ­ரு­கை­யா­னது சர்­வ­தேச அள­விலும் கன­தி­யான பாதிப்­புக்­களை உரு­வாக்­கி­விடும் என்ற கடு­மை­யான விமர்­ச­னங்­களே எழுந்த வண்ணம் இருக்­கி­ன்றன.

உதா­ர­ண­மாக செப்­டெம்­பரில் வெளி­வ­ர­வி­ருக்கும். ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் வெளி­யி­டப்­படும் அறிக்­கை­யா­னது, அர்த்­த­மற்ற, கன­தி­யற்ற, காகி­தங்­க­ளாக மாறு­மொரு சூழ்­நிலை உரு­வா­கு­மென்ற அச்­சமும் தமிழ் மக்கள் மத்­தியில் இருக்­கத்தான் செய்­கி­றது.


இது­த­விர சர்­வ­தேச அளவில் சீனா, ரஷ்யா போன்ற நாடு­க­ளு­ட­னான உற­வுகள் பலப்­ப­டுத்­தப்­பட்டு, ஜன­நா­யகம், சட்ட ஆட்சி போன்­ற­வற்­றுக்கு சாவு­மணி அடிக்கும் இருண்ட சூழ்நிலை­யொன்று உரு­வா­கு­வ­தற்­கு­ரிய சாத்­திய நிலை­களை மீண்டும் இலங்­கையில் கொண்­டு­வந்­து­விடக் கூடாது என்­பதை கவ­னத்தில் கொண்­ட­வர்­க­ளாக தமிழ்­மக்கள் இருக்­கின்­றார்கள்.


பொது­வா­கவே ஊழல்கள், மோச­டிகள், பொது சொத்துக் கொள்­ளை­யென்­ற­வ­கையில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் கடந்த அர­சாங்­கத்தில் ஒன்றின் பின் ஒன்­றாக கண்­டு­பி­டிக்­கப்­பட்டு குற்­றங்­க­ளாக சுமத்­தப்­பட்டு வரு­வதை கண்டு கொண்­டி­ருக்­கி­றார்கள் மக்கள். மஹிந்­தவின் மீதும் அவரின் குடும்­பத்­த­வரின் மீதும் பகி­ரங்­க­மா­கவே ஊழல்கள் மோச­டிகள் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றன.


வெளி­நாட்டு உளவுப் பிரிவின் தக­வ­லுக்கு அமை­வாக வெளி­நா­டு­களில் ராஜபக் ஷ குடும்­பத்­தி­னரால் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள சொத்­துக்­களின் பெறு­மதி 18 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும்.

இது இலங்கை நாண­யப்­படி 22 ட்ரில்­லியன் ரூபா­வா­கு­மென வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பாய ராஜபக் ஷவுக்கு எதி­ராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்­கு­ழுவில் ஜே.வி.பியினர் முறைப்­பாடு தாக்கல் செய்­தமை, திவி­நெ­கும நிதி விடயம் சார்பில் பஷில் ராஜபக் ஷ கைது செய்­யப்­பட்ட விட­யங்கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான குற்­றச்­சாட்­டுக்­களும், மஹிந்­தவின் அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள் மீது சுமத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சூழ்­நி­லையில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவை வேட்­பா­ள­ரா­கவோ, பிர­தமர் வேட்­பா­ள­ரா­கவோ நிய­மிக்க எடுக்கும் முயற்­சி­க­ளுக்கு உரு­வா­கி­யி­ருந்த எதிர்ப்­ப­லைகள் மத்­தியில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பட்­டி­யலின் இடம் என்ற செய்தி எல்லா தரப்­பினர் மத்­தி­யிலும் பேர­திர்ச்­சியை உண்­டா­கி­யி­ருப்­பது இயல்பே! அதிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் இச்­செய்தி பாரிய அதிர்­வ­லை­களை உண்டு பண்­ணி­யி­ருக்­கின்­றது.

இதே வேளை இச்­செய்­தி­யா­னது மஹிந்­தவின் ஆத­ர­வா­ளர்­க­ளான விமல் வீர­வன்ச , வாசு­தேவ நாண­யக்­கார, தினேஷ் குண­வர்த்­தன போன்ற முன்னாள் அமைச்­சர்­க­ளுக்கும் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் இனிப்புச் செய்­தி­யாக மாறி­யி­ருந்­தாலும் சிறு­பான்மை சமூ­கங்­களை பயம் கொள்ள வைத்­துள்­ளது என்­பது உண்­மையே. இதுப் பற்றி ஜே.வி.பியினர் தமது விச­னத்தை இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்­தனர்.

ஆட்­சியை கவிழ்த்து மீண்டும் சர்­வா­தி­கார ஆட்­சியை தக்­க­வைக்க வேண்­டு­மென்ற கனவில் மஹிந்த வர­வி­ரும்­பு­கின்றார். முழு­மை­யாக பழி­வாங்கும் அர­சியல் பிர­சா­ரத்­தையே மஹிந்த கூட்­டணி மேற்­கொண்­டு­வ­ரு­கி­றது. மீண்டும் மஹிந்தவின் ஆட்சி அமைக்­கப்­ப­டு­மானால் நாட்டில் பழி­வாங்கும் செயற்­பா­டுகள் தலைத்­தூக்­கு­மென ஜே.வி.பியினர் தமது கடு­மை­யான விமர்­ச­னங்­களை அண்­மையில் வெளி­யிட்­டி­ருந்­தனர்.

மஹிந்­தவின் நிய­மன பட்­டியல் விவ­காரம் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­ப­டுமா இல்­லையா என்ற சந்­தே­கங்­க­ளுக்கு எப்­ப­டியோ நாளை மறுநாள் (13.07.2015 ) திங்­கட்­கி­ழ­மைக்கு முன் முடிவு தெரிந்­து­விடும். இதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பங்கு என்ன? இவர் இன்று சூழ்­நிலைக் கைதி­யாக மாறி­யுள்ளார் என பலரும் விமர்­சிக்­கப்­படும் அள­வுக்கு மாத்­திரம் அல்ல. மைத்­தி­ரியை ஜனா­தி­பதி கதி­ரையில் அமர்த்­து­வ­தற்கு உள்ளும் புறுமும் பாடு­பட்­ட­வர்கள் அதி­ருப்தி அடையும் நிலைக்கு சூழ்­நி­லைகள் மாறிக் கொண்­டி­ருக்­கி­றது.

ஆட்சி மாற்­றத்­திற்­காக உழைக்கும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா , சோபித தேரர், ரணில் விக்­ர­ம­சிங்க , இரா.சம்­பந்தன், ரவூப் ஹக்கீம் போன்­ற­வர்­களே இன்று ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைகள் மீது அதி­ருப்தி கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கி­றார்கள். மார்ச் 12, பிர­க­ட­னத்தைப் போல் ஊழல் மோச­டி­யா­ளர்கள், போதைப்பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டையோர் உட்­பட்ட சமூக விரோத செயல்­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு அர­சியல் கட்சி வேட்பு மனு வழங்கக் கூடாது என சோபித தேரர் எச்­ச­ரித்­தி­ருப்­ப­தையும் காண­மு­டி­கி­றது. இந் நிலை­மையை ஜீர­ணித்துக் கொள்ள முடி­யாத நிலை­யி­லேயே, சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து அமைச்சர் எஸ்.பி.நாவின்ன வில­கி­யதும் அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க விலக ஆலோ­சித்து வரு­வதும் பனிப்போர் நெருக்­க­டியை சுதந்­திர கட்­சிக்குள் உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது.

இதற்­கி­டையில் பிந்­திய செய்­தி­களின் படி சில நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் அம்­பாந்­தோட்டை தவிர்ந்த வேறு எந்த மாவட்­டத்­திலும் போட்­டி­யிட அனு­ம­திப்­ப­தில்லை என்ற நிபந்­த­னை­யொன்று மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் சுதந்­திர கட்­சியின் வேட்பு மனு சபை உறுப்­பி­னர்கள் நடத்­திய சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருப்­ப­தாக அர­சியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இதேவேளை மஹிந்த போட்டியிடுவது கடைசி நிமிடத்தில் பல்வேறு உபாயங்களின் அடிப்படையில் மறுக்கப்படலாம் என்ற ஆருடங்கள் கூறப்படுகிறன. சில அரசியல் விமர்சகர்களின் அபிப்பிராயப்படி என்ன தான் நிபந்தனையின் அடிப்படையில் மஹிந்த போட்டியிட மைத்திரி அனுமதி வழங்க ஒத்துக் கொண்டிருந்தாலும் பல்வேறு நிபந்தனைகளையும் குற்றச்சாட்டுக்களையும் அடிப்படையாகக் கொண்டு மறுக்கும் யுக்தியை கையாளலாமென்ற கருத்துக்களும் கூறப்பட்டு வருகின்றன.

அவ்வாறு கடைசி நேரத்தில் சுதந்திரக்கட்சியில் போட்டியிட மஹிந்தவுக்கு தடைவிதிக்கப்படுமானால் நமது இலங்கை சுதந்திர முன்னணியென்ற காட்சியின் பூ மொட்டு சின்னத்தில் போட்டியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உத்தியோகபூர்வமற்ற செய்தி கள் தெரிவிக்கின்றன.


இதே வேளை மஹிந்த களமிறக்கப் படுவாரானால் தானும் போட்டியிட நேரி
டும் என்ற வாதத்தை முன்வைத்து கொண்டி
ருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி

சந்திரிக்கா பண்டார நாயக்க. இவ்வாறு எல்லா திசைகளிலும் குழம்பிப்போன ஒரு தேர்தலாகவே நடைபெறவுள்ள தேர்தல் ஆகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சொல்லப் போனால் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை நோக்கி நாடு நகர முடியாத இறுக்கமான சூழ்நிலையொன்று உருவாகிவருகிறது என்பது எல்லோருடைய கணிப்பாகும்.

அதிலும் சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பொருத்தவரை மஹிந்தவின் மீள்வருகையை தடுக்கும் சக்தி கொண்டவர்களாகவோ அல்லது தாம் விரும்பும் நல்லாட்சிக்கான அத்திவாரத்தை இடுபவர்களாக இருப்பார்களா என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

விரும்பியோ விரும்பாமலோ ஆளும் தரப்பாகவோ அல்லது எதிரணியாகவோ ஒரு சக்தி இந்தேர்தலில் உருவாக்கப்படுமாக இருந்தால் இந்த நாடு மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகவே மாறிவிடும்.
(திருமலை நவம் )