மக்கள் அளிக்கப் போகும் நியாயத் தீர்ப்பு

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. நாட்டில் எல்லாமாக இருபத்திரண்டு தேர்தல் மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட ரீதியில் 196 எம். பிக்களும், கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலம் 29 பேரும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதன்படி மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 225 ஆகும்.

இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றைப் பொறுத்த வரை இதுவொரு பரபரப்பான தேர்தலாகவே நோக்கப்படுகிறது. சர்வதேசத்தினாலும் உள்நாட்டிலும் சர்வாதிகாரம் நிறைந்த அர சாங்கமாக நோக்கப்பட்டு வந்த முன்னைய ஆட்சி வீழ்த்த ப்பட்டு அரை வருட காலம் கடந்த நிலையில் மற்றொரு பிரதா னமான தேர்தலுக்கு மக்கள் இப்போது முகம் கொடுத்துள்ளனர். அராஜகத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள நாட்டில் ஜனநாய கத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்கான பாரிய சவாலாகவே எதிர்வரும் பொதுத் தேர்தல் நோக்கப்படுகிறது.


குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம், அராஜகம், ஊழல் முறைகேடுகள் போன்றவற்றுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏராளமான சிவில் அமைப்புகளும் அடங்கிய பெரும் அணி யொன்று ஐ. தே. கவின் தலைமையின் கீழ் ‘நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி’ என்ற கூட்டணியில் யானைச் சின்னத்தில் களமிறங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்கப் பட்டதனால் சுதந்திரக் கட்சியிலிருந்து அதிருப்தியுற்று வெளி யேறிய ஒரு பிரிவினர் இம்முன்னணியில் இணைந்துள்ளனர். அதேசமயம், ஜாதிக ஹெல உருமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய முக்கிய அணிக ளும் ஐ.தே. க தலைமையிலான முன்னணியின் கீழ் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கு ஆதரவான சிலரும் போட்டியிடுவதன் காரணமா கவே அதிருப்தியுற்று வெளியேறியவர்களை உள்ளடக்கியதாக ஐ. தே. க தலைமையின் கீழ் நேற்றுமுன்தினம் பலமான அணி யொன்று உருவாகியுள்ளது.

சு.க தலைமையிலான ஐ. ம. சு. முன்னணியை எதிர்ப்பது நல்லாட்சி க்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கையல்லவென்பது தெட்டத் தெளிவாகப் புரிகிறது. ஐ. ம. சு. முன்னணிக்குள் மீண்டும் மஹிந்த அணியினர் ஊடுருவிக் கொண்டதனால் எதிர் காலத்தில் தலைதூக்கக் கூடிய அராஜகத்தை முறியடிப்பதே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் இலக்காக உள்ளது. இம்முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் ரணிலின் கருத்து அக்குறிக்கோளை தெளிவாக வெளிக்காட்டியிருந்தது.

நாட்டில் ஜனநாயகத்தை நேசிப்போரைப் பொறுத்தவரையில் எதிர் வரும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறப் போவது நீதிக்கும் அநீதி க்கும் இடையிலான பலப்பரீட்சையாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த அணியினரின் அரசியல் கோட்பாடுகள் எவையென்பதை முன்னைய ஆட்சி வெளிப்படையாகவே உணர்த்தி விட்டது. அன்றைய ஆட்சியில் நடந்தவையெல்லாம் அநீதிக்குப் புறம் பான செயற்பாடுகளென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அநீதிக்கும் அராஜகங்களுக்கும் அப்பால் இனவாதம் என்ப தையும் அரசியல் ஆயுதமாகக் கொண்டவர்கள் இப்போது மீண் டும் மக்களின் முன்பாக வந்துள்ளனர்.

இனவாத பரப்புரைகளுக்கு ஆட்பட்டு அடிமைப்படக் கூடிய பெரும்பான்மையின மக்களுக்கு மட்டுமே மஹிந்த தரப்பு அணியினர் தேசியவாதிகளாகத் தென்படலாம். புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயக விரும்பிகளைப் பொறுத்த வரை மஹிந்த தரப்பினர் மீதான அதிருப்தியும் அசூயையும் என்றுமே மாற்ற மடையப் போவதில்லை. மஹிந்த அணியினர் தேச ஐக்கி யத்துக்கு விரோதமானவர்களாகவே தென்படுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, ஐ. ம. சு. முன்னணியின் கீழ் போட்டியிடும் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களில் சிலர் மஹிந்தவுக்குச் சார் பான போக்கைக் கொண்டுள்ளனர். இவர்கள் எவ்வாறான கொள்கைத் திட்டங்களுடன் இப்போது மக்களைச் சந்திக்கப் போகின்றனரென்பது தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

‘மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்தவொரு அநீதிகளுமே இழைக்கப்படவில்லை’ என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களுக்கு முன்னால் சென்று கூறப்போகிறார்களா?

‘முன்னைய ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு கொடு மையுமே இழைக்கப்படவில்லை’ என்று தமிழ் அரசியல் வாதிகள் எவராவது தமிழ் மக்களுக்கு முன்பாகச் சென்று வாக் குக் கேட்கப்போகின்றனரா?

மஹிந்தவுக்கு ஆதரவான தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் இவ்வாறு வேடிக்கையான கருத்துகளை முன்வைத்து மக்களின் ஆதரவைக் கோராமல் விடப் போவதில்லை.

மக்கள் அனைத்துக் கருத்துகளையும் ஆவலுடன் கேட்கும் சுபாவம் கொண்டவர்களாவர். எனினும் தங்களது முடிவில் மிகுந்த நிதானம் கொண்டவர்கள். மக்களின் நிதானமான அமை தியான முடிவை கடந்த ஜனாதிபதித் தேர்தல் நன்கு வெளிக்காட்டியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 1,50,44,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலுக்கான பிரசாரங்களை அரசியல் கட்சிகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றன. ஒரு தரப்பினர் இன வாதத்தை பிரதான கருப்பொருளாகக் கொண்டு பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். மறுதரப்பினர் ஐக்கியத்தையும் உண்மையான ஜனநாயகத்தையும் பேணிக் காக்கும் குறிக்கோளுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.

நாட்டுக்கு அவசியமானது எதுவென்பதைத் தீர்மானிக்க வேண்டி யவர்களாக மக்கள் உள்ளனர்.