பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மட்டக்களப்பு மாணவன் சாதனை

பேராதனைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்ற பட்டப்பின் விஞ்ஞான கற்கைநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான இறுதி முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த இறுதிப் பெறுபேறுகளின்படி மட்டக்களப்பைச் சேர்ந்த திரு.இராமையா விஐயகுமார் என்பவர் 3.87 எனும் அதியுயர் புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பு நிலையில் சித்தியெய்தி இருப்பதோடு 2013/2014  கல்வியாண்டில் முதன்மை மாணாக்கனுக்கான உயர் விருதையும் பெற இருக்கின்றார்.  இவர் கணணி விஞ்ஞானத் துறையில் அறிவியல் முதுமானி பட்டத்திற்கான கற்கைநெறியினைப் பூர்த்தி செய்ததன் மூலம் முதன்மை நிலையினை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
தனது அபார திறமையின் மூலம் மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரு.இராமையா விஐயகுமார், மட்/சிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார். கிழக்குப் பல்கலைக்கழக விவசாய விஞ்ஞான பீடத்தில் விவசாய பொறியியல் கற்கைநெறியில் இரண்டாம் உயர் வகுப்பில் சித்தியெய்திய இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகின்ற தகவல் தொழிநுட்ப இளமானிப் பட்டத்தையும் உயர்பெறுபேறுகளுடன் பெற்றுக்கொண்டார். கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் உதவி விரிவுரையாளராக சில காலங்கள் கடமையாற்றி தனது திறமைகளை பல வழிகளிலும் நிரூபித்துள்ளார். தற்போது BCAS கண்டி வளாகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் திரு.இராமையா விஐயகுமார் பல்வேறுபட்ட நிபுணத்துவம்சார் வேலைப்பாடுகளிலும் தன்னை தொடர்ச்சியாக அர்பணித்து பல சாதனைகளின் சொந்தக்காரராக ஆர்பரிப்பு இல்லாமல் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார். இது தவிர தற்போது பிரபல்யமாக பேசப்படும் துறையான புவிசார் தகவல் முறைமைகள் முதுமானிக் கற்கைநெறியினையும் பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளார். 
மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரு.இராமையா விஐயகுமார் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு இவரது திறமைகள் மற்றும் சேவைகளை எமது மாவட்டத்திற்கும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் எடுக்கவேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.