சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு- த.தே.கூவின் மூண்று கட்சிகள் இணைந்து தீர்மானம்

உள்ளக விசாரணையை நிராகரித்து சர்வதேச விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான பொறிமுறை ஒன்றினை வலியுறுத்துவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ரெலோ, புளெட், ஈ.பி.ஆர்எல்.எவ் ஆகிய கட்சிகள் கட்சிகள் தீர்மானித்துள்ளன.


இன்றைய தினம் மாலை கொழும்பில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழ் ஈழ விடுதலை இயக்கம்( ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொர்பில், இவ் மூன்று கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொழும்பில் இவ் மூன்று கட்சிகளும் கூடி தேர்தலுக்குப்பின்னரான கள நிலவரங்கள், அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராய்ந்தனர்.

செப்ரம்பர் மாதம் வரவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத்தொடர் பற்றியும், இலங்கையில் நடைபெற்ற பேரின் பொழுது நடைnபெற்ற குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கை அரசுடன் இணைந்து கொண்டுவரவிருக்கும் தீர்மானம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், உள்ளக விசாரணையை நிராகரித்து சர்வதேச விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான பொறிமுறை ஒன்றினை வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டு வரும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நான்கு கட்சிகள் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமைப்புக் கட்டமைப்புகள் ரீதியாக பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் ஆராயப்பட்டது என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்துவது, எதிர்காலத்தில் ஒன்றிணைந்த வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிய வருகிறது.

இந்த அறிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழ் ஈழ விடுதலை இயக்கம்( ரெலோ) வின் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) யின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.