மட்டு. மாநகர சபைக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பசுமை விருது 2015

2015ம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட தேசிய பசுமை விருது (National Green Award 2015) போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேசிய மட்டத்தில் விருது கிடைந்துள்ளது. இவ்விருதானது 05.10.2015 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அகில இலங்கை பூராகவும் பலதரப்பட்ட அரச நிறுவனங்கள் பாடசாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபற்றிய இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் திணைக்களங்களுக்குள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு மாத்திரம் இவ்விருது கிடைத்துள்ளது என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

2014ம் ஆண்டு திரு.மா.உதயகுமார் அவர்கள் மாநகர ஆணையாளராக கடமையேற்றதிலிருந்து 'அழகானதும் ஆரோக்கியமானதுமான நகரமே எமது இலக்கு' எனும் தொனிப்பெருளில் பாரிய அளவிலான 28 சிரமதானங்கள், டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்கள் மற்றும் நகரை அழகுபடுத்தும் செயற்றிட்டங்கள் என்பன நிகழ்த்தப்பட்டிருந்ததுடன் சிறந்த முறையிலான திண்மக் கழிவு முகாமைத்துவம் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.