எல்லைப் பிரதேசக் காணிப் பிரச்சனைகள் தொடர்பில் அரச அதிகாரிகள் நேரடியாகச் சென்று விசாரணை

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளுக்கமைய இதுகாலவரையில் தீர்க்கப்படாதுள்ள ஆலையடிவேம்பு மற்றும் தமண பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான எல்லைக் கிராமமான பாவாபுரம் வயற்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான நெற்காணிகளில் தமண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெஹெரகல (மாந்தோட்டம்) கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் அத்துமீறி நெற்செய்கையில் ஈடுபடுவது குறித்தும் காணிச் சொந்தக்காரர்களான தமிழ், முஸ்லிம் மக்களை அப்பிரதேசத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து அடாவடித்தனங்களில் ஈடுபடுவது குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்கான அரச உயரதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று (13) காலை அப்பிரதேசங்களுக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த அதிகாரிகள் குழுவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், அம்பாறை மாவட்ட பிரதிக் காணி ஆணையாளர் திருமதி. டி.டி.எஸ்.தக்சிலா, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அம்பாறை மாவட்டத்துக்கான உதவிக் காணி ஆணையாளர்களான பி.பரசுராமன் மற்றும் ஜி.எல்.ஆரியதாச, அம்பாறை மாவட்ட காணி ஆணையாளர் அலுவலக உதவிக் காணி ஆணையாளர் திருமதி. ஏ.எல்.இப்திகார் பானு, ஆலையடிவேம்பு பிரதேச குடியேற்ற உத்தியோகத்தர் ஏ.ரஹீம், தமண பிரதேச குடியேற்ற உத்தியோகத்தர் பி.எம்.என்.பெர்னாண்டோ, தமண பிரதேச காணி உத்தியோகத்தர் வை.எம்.டபிள்யு.எஸ்.பண்டார, பாவாபுரம் பகுதிக்கான கிராம உத்தியோகத்தர் கே.லோகநாதன், வெஹெரகல கிராம உத்தியோகத்தர் பி.ஜி.நதீகா போபிட்டிய, காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.ராஜசுரேஷ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

முதலில் பாவாபுரம் வயற்பிரதேசத்திற்கு விஜயம் செய்த அதிகாரிகள் குழு பிரச்சனைக்குரிய குறித்த காணிகளின் உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அரச அனுமதியின்றித் சட்டவிரோதமாகத் துப்பரவு செய்யப்பட்டிருந்த காணிகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து நெற்செய்கையின் பொருட்டு அப்பிரதேசத்தில் தங்கியிருந்த விவசாயிகளிடம் குறித்த பிரச்சனை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அடுத்து தமண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெஹெரகல (மாந்தோட்டம்) கிராமத்திற்குச் சென்ற அவர்கள் அங்குள்ள சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளைச் சந்தித்து பாவாபுரம் பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டுவரும் காணித் துப்பரவுகள், நெற்செய்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்களை பாவாபுரம் பகுதியிலுள்ள அவர்களது காணிகளுக்குள் நுழையவிடாமல் தடுப்பது மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்பில் இருதரப்பாரோடும் கலந்துரையாடி சமரசம் செய்ததுடன், தமது காணிக்கான முறையான அத்தாட்சிப்பத்திரம் வைத்துள்ள எவரும் அதில் முறையாக நெற்செய்கையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்த அதிகாரிகள் குழுவினர், குறித்த பிரதேசத்தில் நிலவும் எல்லைப் பிரச்சனை தொடர்பில் அதனை அம்பாறை மாவட்ட அரச அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாகத் தெரிவித்ததுடன், பல வருடங்களாக நீடித்துவரும் குறித்த காணிப் பிரச்சனை தொடர்பில் தொடர்ந்து கூடிய கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தனர்.