இலண்டன் மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்த மட்டுநகர் சிவாநந்தா

இலங்கைப் பாடசாலைகளில் படித்து பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் பல மாணவர்கள் தாங்கள் படித்த பாடசாலையின் பெயரில் பல்வேறுபட்ட சமூகநலப் பணிகள் , விளையாட்டு விழாக்கள், பாடசாலையின் அபிவிருத்திக்கான நிதியீட்டல் நடவடிக்கைகள் மூலம்  பாடசாலையின் நற்பெயரை பார்முழுவதும் பரவச் செய்துவருகின்றார்கள். அந்தவகையில் இலண்டன் மண்ணில் செயற்பட்டுவரும் TSSA எனும் அமைப்பு இலங்கைத் தமிழ் பழைய மாணவர் சங்கங்களுக்கிடையில் வருடாந்த கிரிக்கட் சமரினை பெரிய ஆர்பரிப்புடன் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.
இதன்படி 2015ம் ஆண்டிற்கான கிரிக்கட் சமரில் சிவாநந்தா தேசியபாடசாலை பழைய மாணவர் அணி வெற்றிவாகை சூடி 2015ம் ஆண்டிற்கான கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது. 
கடந்த 20ம் திகதி இடம்பெற்ற 24வது வருடாந்த கிரிக்கட் சமரில் சுமார் 40 தமிழ் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவ அணிகள் Wimbildon Rayners Park Ground இல் களம் இறங்கின. வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து பிரபல்யமான பல பழைய மாணவ அணிகள் பங்குபற்றியிருந்தன.
போட்டியின் அரையிறுதிச் சமருக்கு யாழ் இந்துக்கல்லூரி, மட் சிவாநந்தா மற்றும் சென் ஜோன்ஸ் அணியின் A, B அணிகள்  தெரிவுசெய்யப்பட்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில்   சென் ஜோன்ஸ் A அணியும் மட்டுநகர் சிவாநந்தா அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுளைந்தன. 
சிறந்த  வியூகங்களோடு இறுதிப்போட்டியைச் சந்தித்த சிவாநந்தா அணியினர் மகத்தான வெற்றியுடன் 2015ம் ஆண்டிற்கான கிண்ணத்தைச் சுவீகரித்து கிழக்கு மண்ணிற்கும் சிவாநந்தா பாடசாலைக்கும் பெருமை சேர்த்தனர். மேலும், வருடாந்த கிரிக்கட் சமரில் கிழக்கு மாகாணப் பாடசாலை அணியொன்று  TSSA கிண்ணத்தினை வென்றெடுக்கும் முதலாவது சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொண்ட வரலாற்றுப் பெருமையினையும் இலண்டன் வாழ் சிவாநந்தா அணியினர் பெற்றுக்கொடுத்துள்ளனர்.