சந்திரகாந்தனுக்கு 3 மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

குற்றப் புலனாய்வுத்துறை தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபையின் தற்போதைய உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 03 மாத காலம் விடுமுறை வழங்குவதற்கு கிழக்கு மாகாணசபை அனுமதியளித்துள்ளது. 

இம்மாத அமர்வுக்காக பிரதித்  தவிசாளர்; பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் கிழக்கு மாகாணசபை செவ்வாய்க்கிழமை (24)  கூடியபோது, ஐ.ம.சு.முன்னணி உறுப்பினரான கே.புஸ்பகுமார்; (இனியபாரதி) இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்தார். 

இந்தப் பிரேரணை  தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) வழிமொழிந்ததுடன், அது மாகாணசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடுப்புக்காவல் விசாரணையிலுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 03 மாதகால விடுமுறை  அளிக்கவும் சபை அனுமதியளித்ததாக தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்  விசாரணைக்காக அழைப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.