சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு நன்கொடை – Battinews செய்திக்கு செவிசாய்ப்பு

(ரவிப்ரியா)
கடந்தவாரம் வற்றி நியூஸ் மட்டக்களப்பு சின்ன உப்போடையைச் சேர்ந்த முருகேசு.சசிகுமார் (36) என்பவரின் அவசர சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு  பொதுமக்களிடம் நிதி உதவி கோரியிருந்தது. வற்றி நியூஸ் தீவிர அபிமானி ஒருவரின் கண்ணில் செய்திபட குறித்தவரின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளையும் உண்மைத் தன்மையையும் அவதானித்துள்ளார்.


ஏதோ செய்துவிட வேண்டும் என்ற மனிதாபிமானம் அவரை ஆட்டிப் படைத்தது.சொந்த உறவினராக அவரை நினைத்து அவரைக் காத்தே ஆகவேண்டும் என்ற தவிப்பு அவருக்கு. வயது 8 மிதுமிதாவும், வயது 6 பவிதனாவும் அனாதைகளாகி விடக் கூடாது என்ற ஆதங்கம். சகோதரி காயத்திரி அபலையாகிவிடக் கூடாதென்ற வைராக்கியம். சனி காலை 10.00. என் வீட்டுவாசலில் அவருடைய வாகனம் நிற்கின்றது. அழைத்தார் அவர். பெரியகல்லாறு சர்வாத்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின வண்ணக்கர் க.சீவரெத்தினம் ஐயா வானுக்குள் இருந்து வாங்க தம்பி போவம் என்றார். ஏற்கனவே தொலைபேசியிலும், நேரிலும் ஏற்கனவே அவர் விடுத்த அழைப்பென்பதால் ஆயத்தமாகவே இருந்த நான் ஏறிக் கொள்கின்றேன்.

 மட்டக்களப்புசின்ன உப்போடை27,38 குறுக்கு வீதியில் வாகனம் நிற்கும் வரை அந்த குடும்பத்திற்கு வாழ்வு கொடுக்க நாம் எல்லோரும் மிக வேகமாகச் செயற்பட வேண்டும் என்ற வார்த்தைகளைத் தவிர வேறேதும் வாத்தைகள் வெளிவரவே இல்லை. சசிகமார் எம்மை இருகரம் கூப்பி வரவேற்றார். அவர் மனைவியும் பிள்ளைகள் இரண்டும் உறவினர்கள் போல் வரவேற்றனர். வீடு மழைக்கு தாக்குப் பிடிக்க தயங்குகின்ற நிலை.

 இங்கே இந்த நிதிக்கான இணைப்பாளராக கண்ணியமாக கருமமாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழியும் பிரசன்னமாயிருந்து சசிகுமாருக்க நம்பிக்கையூட்டினார். இந் நிலையில் க.சீவரெத்தினம் (ஆலய வண்ணக்கர்) தனது குடும்ப நிதியிலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் தனது பேரப்பிள்ளைகள் சார்பாக ரூபா இரண்டு இலட்சம் ரொக்கத்தை சசிகுமாரிடம் கையளித்தார். எதிர்பாராத இந்த தொகை பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டியதை அவருடைய முகம் வெளிப்படுத்தியது மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. தனது இந்த தொடக்க உதவி எமது மக்கள் ஒவ்வொருவருடைய நெஞ்சையும் தொட்டு அவர்களும் இத்தகைய உதவிகளளிக்க உணர்வுபூர்வமாக முன்வரவேண்டும் என்பதற்காகவே ஊடகவியலாளரோடு வருகை தந்தேன் எனக் குறிப்பிட்டார். இது சுய விளம்பரத்திற்கான முயற்சியல்ல. மற்றவர்களையும் இதற்கு தூண்டவேண்டுமென்பதே நோக்கம் என்றார். ஒரு உயிர் காக்கவேண்டும் என்பதற்கதான வேள்வியுமாகும்.

மனிதாபிமானம் மரித்துவிட்டதோ என்று நான் மனம் நொந்திருந்த வேளையில், இல்லை நானிருக்கின்றேன் என்பதுபோல் பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் க.சீவரெத்தினம் ஐயா வீடு தேடிவந்து இந்த பெரிய உதவியைச் செய்திருக்கின்றார். எனவே இந்த நிதிசேகரிப்பு இலக்கை நிச்சயம் அடையும் என்று மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி  நம்பிக்கை தெரிவித்தார். உலகளாவியரீதியில் இந்த செய்தி கொண்டுசெல்லப்பட்டு அதற்கான அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கையில் மட்டும் 35 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றோம். முப்பத்தையாயிரம் குடும்பங்கள் என்று எடுத்துக் கொண்டாலும், ஒரு குடும்பம் 100ரூபா படி செலுத்தினாலும் கூட 25இலட்சம் என்ற இலக்கு மிக மிக சாதாரணமானது.. சிறுதுள்ளி பெரு வெள்ளம் என்பதற்கமைய இந்த நிதி உதவுவதில் எமது பங்களிப்பு ஒரு உயிரைக் காக்கும். ஒரு குடும்பத்தை வாழவைக்கும் என்பதை நாம் இங்கு வலியுறுத்துகின்றோம்.