அம்பறை விவசாய திணைக்கள பழ நாற்றுமேடை திறப்பு விழா


(மோகன்)
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அம்பறை மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் பதியத்தலாவ சேரன்கட பிரதேச விவசாயப் பயிற்சி நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பழநாற்றுமேடை திறப்புவிழாகடந்த 23ம் திகதி அம்பறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன், விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், உதவி விவசாயப் பணிப்பாளர், விவசாய திணைக்கள அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், அம்பாறை மாவட்ட விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது புதிதாக நிர்மானிக்கப்பட்ட பழநாற்று மேடை அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டதுடன், சிறப்பான வினைத்திறன்களை காட்டும் இளம் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும், விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள், தண்ணீர் இரைக்கும் இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம் போன்றனவும் வங்கி வைக்கப்பட்டன.

இத்துடன் பழச் செய்கையினை நினைவு படுத்தும் வகையில் பிரதி விவசாயப் பணிப்பாளரினால் அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கு பழக் கூடைகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அம்பாறை மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தி தொடர்பான செயற்திட்டங்களையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.