சிறுபாண்மை மக்களின் உரிமைகளை அங்கீகரித்து வாழ்ந்தால் நாட்டில் எந்தப் பிரச்சினையும் இருக்காது - கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்

சிறுபாண்மையினருக்குரிய உரிமைகளை அங்கீகரித்துக் கொண்டு அனைவரும் வாழத் தொடங்கினால் இந்த நாட்டில் எந்தப் பிரச்சினையும் இடம்பெறாது. அவரவர் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அண்மையில் அம்பாறை சேரன்கட விவசாயப் பயிற்சி நிலைய பழநாற்று மேடை திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தர்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறைவன் சிறு சிறு உயிரினங்களுக்கு அவற்றைப் பாதுகாப்பதற்காக எவ்வாறு அவற்றிற்கு பல்வேறு வடிவமைப்புகளைக் கொடுத்திருக்கின்றானோ அது போலத் தான் இந்த நாட்டில் சிறுபாண்மை என்கின்ற நிலையில் இருக்கின்ற தமிழர்களாகிய எமக்கு எமது உரிமைகளை எமது பாதுகாப்பு கவசமாகக் கேட்கின்றோம்.
எங்களுடைய மொழியில் நாங்கள் பேச வேண்டும். எங்களுடைய மதத்தினை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை சாதாரண சிங்கள மக்கள் எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் சிலர் தங்களுக்கு வாக்குகள் வர வேண்டும் என்பதற்காக இதனை வேறு விதமாக மக்களுக்கு விளங்கப்படுத்தி தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரிகள் என்ற ரீதியில் எண்ணம் கொள்ள வைத்து விட்டார்கள்.

 
இவ்வாறு எமக்குத் தேவையான, நாங்கள் கேட்கின்ற இந்தப் பாதுகாப்பினை எமக்கு தந்திருந்தால் நாங்கள் மொழி ரீதியில் இன ரீதியில் பிரிந்திருக்க மாட்டோம் இத்தனை காலமும் இடம்பெற்ற இந்த இரத்தக்களரி இந்த நாட்டில் இடம்பெற்றிருக்காது.

சிங்களவர்களும் தமிழர்களும் பெரும்பாலும் ஒரே சமயப் பாரம்பரியத்தைக் கொண்டவர்களாகவே இருக்கின்றோம். நாங்கள் வழிபடும் கடவுள்களை அவர்களும் வழிபடுகின்றார்கள். புத்த பெருமானாரும் இந்து மதத்தினைச் சேர்ந்தவரே என்பதும் அனைவரும் அறிந்ததே. அனைத்தையும் ஒருமித்து பார்க்கும் போது எங்களுக்குள் சிறு சிறு வித்தியாசங்கள் தான் இருக்கின்றது.
விஜயன் இலங்கைக்கு வரும் போது அவரும் நானூறு தோழர்களும் தான் வந்தார்கள் அவருடன் எந்தப் பெண்களும் வரவில்லை என்று நாங்கள் சரித்திரத்தில் படித்திருக்கின்றோம். பின்னர் இங்கு வந்து குவேனியைத் திருமணம் செய்து சிறிது காலத்தில் அவரையும் துரத்திவிட்டு இந்தியா தமிழ் நாட்டிற்குச் சென்று அங்கு பாண்டிய மன்னர்களின் இளவரசியைத் திருமணம் செய்து வாழ்ந்ததாக நாம் அறிகின்றோம். இதனால்தான் சிங்களப் பெயர்களில் பாண்டு என்கின்ற சொற்பதம் சேர்க்கப்பட்டதாக சாத்திரவாளர்கள் கூறுகின்றார்கள்.

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஆட்சி மாற்றத்தில் இந்த நாட்டில் பல இனங்கள் வாழுகின்றன அவர்கள் அவரவர் உரிமைகளுடன் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு சிறுபாண்மையினருக்குரிய உரிமைகளை அங்கீகரித்துக் கொண்டு அனைவரும் வாழத் தொடங்கினால் இந்த நாட்டில் எந்தப் பிரச்சினையும் இடம்பெறாது.

இவ்வாறான சிந்தனையுடன் எமது எதிர்கால சந்ததியினர் வளர வேண்டும் அதற்கேற்ற விதத்தில் நாங்கள் அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் சரியோ பிழையோ எதிர்த்தண்மையாகவே வளர்ந்து விட்டோம் ஆனால் எமது சந்ததிகள் அவ்வாறு வளரக் கூடாது. அவரவர் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இதனை எமது பெரும்பாண்மை சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற 13 வது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு நாம் கோரிக்கை விடுத்திரக்கின்றோம். தற்போது ஜனாதிபதி அவர்கள் விவசாயத்துறை சம்மந்தமாக மூன்று ஆண்டுகள் செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதன்மூலம் விவசாயத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம்.

மத்திய அரசில் பெறக்கூடிய நிதி மூலங்களைப் பெற்று எமது மாகாணசபையினுடைய விவசாயத் துறையினை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது. சிறந்த அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் குழாம் எமது திணைக்களத்தில் இருக்கின்றார்கள். நிச்சயமாக எமது மக்களுக்காக மனம் வைத்து சேவை செய்பவர்களாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.