மட்டக்களப்பில் நாகரும் விநாயகர் வழிபாடும்! - தொல்லியல் ஆய்வு

(மோகன்)
வந்தாறுமூலை பாற்சேத்துகுடாவில் வரலாற்றுதுறை பேராசிரியரும் யாழ்பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களும் பேராசிரியரின் தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசியருமான செ.பத்மநாதன் அவர்களும்; இப்பிரதேசத்தில் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் மிகவும் தொன்மை வாய்ந்த புராதனமான தொல்பொருள் கண்டெடுக்கப்பட்டன.அவற்றுள் தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கறுப்பு சிவப்பு மட்கல ஓடுகள் அக்காலமக்களின் வழிபட்டுக்குரிய தாயத்து கருங்கற்கள் பெருங்கற்கால பண்பாட்டு சான்றான ஈமத்தாழி தூண்டம் கறுப்பு சிவப்பு மட்கல ஓடுகள் தமிழ்  அரசிளம் குமாரிகள் அணிந்த சிவப்பு முத்து மணி ஒன்று கைவளையல் துண்டுகள் வெளிநாட்டில் உற்பத்தியான ரூலட் மட்கல ஓடுகள் நன்கு சுடப்பட்ட பெரிய செங்கற்கள் என்பனவும் இப்பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட புராதனமான தொல்பொருள் சான்றுகள் ஆகும். 

இங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகளில் மணிநாகன்பள்ளி வேள்நாகன் எனும் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டன. அத்தோடு  வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில்  கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலையினையும் ஆய்வு செய்த போது சிலையில் மணிநாகன்பள்ளி எனும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டடு இருந்தன. 

ஆதியான இலங்கையில் பூர்வீக இனக்குழுக்களில் ஒன்றாக காணப்பட்ட தமிழர் மூதாதயரான நாகவம்சத்தினர் இந்து மதத்தில் தங்களை இணைத்துக்கொண்ட காலப்பகுதியில் விநாயகர் வழிபாட்டை கடைப்பிடித்துள்ளனர் என்பதுக்கு இந்த விநாயகர் சிலை சான்றாகும். ஆதியில் வந்தாறுமூலையை ஆட்சி செய்த குறுநில அரசுக்களான வேளிர்குல நாகவம்சத்தினர்  நாகவழிபாட்டையும்  விநாயகர் வழிபாட்டையும் ஒருங்கிணைத்து ஆலயம் அமைத்து வழிபட்டுள்ளனர். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயமானது ஆதியில் வந்தாறுமூலையை ஆட்சி செய்த குறுநில அரசுக்களான வேளிர்குல நாகவம்சத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் சிறப்பம்சமாகும். 


இங்கு கிடைக்கப்பெற்ற சான்றுகளை தமிழ் பிராமி வரிவடிவ வளர்ச்சியின் அடிப்படையிலும்; பெருங்கற்காலபண்பாட்டு சான்றின் அடிப்படையிலும் கி;.மு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்டவையாகும். இலங்கைத் தமிழரின் ஆதிகால வரலாற்று மூலாதாரமாகவும் நாகரின் பண்பாட்டு சின்னமாகவும் பெருங்கற்காலபண்பாட்டு நாகரின் கலையாற்றயையும் காட்டுகின்றன. பாற்சேத்துகுடா நாகரின் வழிபாட்டு தலமாகவும் அரண்மனையாகவும் ஆதியில் காப்பட்டன என பேராசிரியர் குறிப்பிட்டார்.