பிள்ளையானின் கைது அரசியல் பழிவாங்கல் : காமினி லொக்குகே

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) இரகசியப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமைக்காகவே கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.



இது அரசியல் பழிவாங்கல் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த அணி உறுப்பினர் காமினி லொக்குகே நேற்று சபைியல் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காமினி லொக்குகே எம்.பி இங்கு மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அவர் அவ்வாறு தகவல் வழங்கியமைக்காகவே தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பிள்ளையான் மாத்திரமல்ல கருணாவும் கூட இவ்வாறு தகவல்களை வழங்கியுள்ளார்.

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தும் அரசாங்கம் முன்னர் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.

காமினி திசாநாயக்க, லக்ஸ்மன் கதிர்காமர், தியாகராஜா மகேஸ்வரன், லலித் அத்துலத் முதலி, ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, நடராஜா ரவிராஜ் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

மேலும் கருணா, கே பி குறித்து ஆளும் கட்சியினர் பேசுகின்றனர். சுமார் ஒருவருடகாலமாக நீங்கள் ஆட்சியில் உள்ளீர்கள். அப்படியானால் நீங்கள் அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்புகிறேன்.

அத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது நிவாரணங்கள் இல்லாத தோல்வியான திட்டமே என்பதையும் கூறிக் கொள்கின்றேன் என்றார்.